search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஒரே நாடு.. ஒரே தேர்தல் ! பச்சப் புள்ள கூட பக,பக என்று சிரிக்கும் !! - தராசு ஷ்யாம்
    X

    ஒரே நாடு.. ஒரே தேர்தல் ! "பச்சப் புள்ள" கூட பக,பக என்று சிரிக்கும் !! - தராசு ஷ்யாம்

    • கனடாவில் மத்திய பெடரல் மற்றும் பிராந்தியத் தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன.
    • பஞ்சாயத்துக்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே தேர்தல் என்றால் பாதுகாப்பு என்ன ஆகும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

    இந்தியாவின் ("பாரத்" என்று சொல்ல வேண்டுமோ?) அரசியலமைப்பை உருவாக்க சுமார் மூன்று ஆண்டு ஆனது. ஆனாலும் அப்போது "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" என்று கூறி ஸ்திரத்தன்மை ஏன் பரிந்துரைக்கப்படவில்லை? "ஸ்திரத்தன்மையும் பொறுப்புடைமையும் இணைந்து இருந்தால் நல்லது. அப்படி இருப்பதில்லை. எனவே பொறுப்புடைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்!" என்று நமது அரசியல் நிர்ணய முன்னோர்கள் நினைத்ததே காரணம்! சட்டத்தின் வரிகளை விட அதை இயற்றுபவர்களின் நோக்கமே பிரதானம்!

    அமெரிக்காவில் கூட ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதில்லை. ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் முதல் செவ்வாய் அன்று 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதாவது நிலையான கால அளவு! ஆனால் கவர்னர் தேர்தல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

    கனடாவில் மத்திய பெடரல் மற்றும் பிராந்தியத் தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன. இங்கிலாந்து நாட்டில் "ஹவுஸ் ஆப் காமன்ஸ்" (தேசிய பாராளுமன்றம்) மற்றும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள சட்டமன்றங்களுக்குத் தனித் தேர்தல் வெவ்வேறு நேரங்களில் நடக்கும். ஜெர்மனியில் பெடரல் பாராளுமன்றம் மற்றும் மாநிலத் தேர்தல்கள் ஆகியவற்றிற்கான தேர்தல்கள் தனித்தனி தான்!

    சுவீடனில் ரிக்ஸ்டாக் (உச்ச அமைப்பு), பிராந்தியம் அல்லது கவுண்டி கவுன்சில் சட்ட மன்றங்கள் மற்றும் நகராட்சி மன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நாளில் நடத்தப்படுகின்றன. பெல்ஜியத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தல்! தென் ஆப்பிரிக்காவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாகாண மற்றும் தேசியத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.

    பெல்ஜியம் மற்றும் சுவீடன் ஆகியவை சிறிய நாடுகள்! ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்துவதில் பெரிய சவால்கள் இல்லை. தென் ஆப்பிரிக்கா ஓரளவு சரியான ஒப்பீடு. இந்தியா பரப்பளவில் உலகில் ஏழாவது இடம். தென் ஆப்பிரிக்கா 24-வது! அங்கு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் மாகாண மற்றும் தேசிய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் தேர்தல் முறை விகிதச்சாரப் பிரதிநிதித்துவம்.

    தென் ஆப்பிரிக்காவின் தேசிய பாராளுமன்றத்தில் 400 எம்.பி.க்கள் உள்ளனர், பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மொத்தம் ஒன்பது மாகாணங்கள்! சட்டமன்றங்களின் அமைப்பு மக்கள்தொகையைப் பொறுத்து 30 முதல் 90 இடங்கள் வரை மாறுபடும்.

    தென் ஆப்பிரிக்காவில் பழைய ஓட்டுச் சீட்டு முறை! எனவே பெரிய புகார்கள் எழுவதில்லை. நாம் வாக்குச் சீட்டு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏராளமான இ.வி.எம்.கள் தேவை! மேலும் இந்தியாவில் "பர்ஸ்ட் பாஸ்ட் போஸ்ட்" முறை. அதிக வாக்கு பெற்றவர் வெற்றியாளர். 30 சதவீதம் ஆதரவுடன் கூட ஆட்சியைப் பிடிக்க முடியும்.

    எனவே "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" முறையில் மத்திய, மாநில ஆட்சிகளைக் கைப்பற்றிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது பாரதிய ஜனதா. "வந்ததடி வெள்ளையம்மா, உன் காளைக்கு ஆபத்து!" என்று பதறுகின்றன பெரும்பாலான மாநிலக் கட்சிகள்.

    எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலம் வரை 1957, 1962, 1967 ஆகிய மூன்று தேர்தல்களும் "ஒரே நாடு..ஒரே தேர்தல்"! தான்! மக்களவை, சட்டமன்றம் ஆகிய இரண்டுக்குமான வேறுபாடுகள் பற்றி எல்லாம் பெரிய புரிதல் கிடையாது. "மேலே", "கீழே" என்பார்கள். அதாவது மேலே என்பது மக்களவை. கீழே என்பது சட்டமன்றம்.

    எனது ஆரம்பக் கல்விக் கூடமான கமாலியா பள்ளியில் ஆழ்வார் சார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் இந்தியத் தேர்தல் முறை பற்றி மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த எண்ணினார். அதனால் பள்ளிக்கூடத்தில் மாதிரி சட்டமன்றம் ஒன்றை நடத்தினார். அதில் நான் மந்திரிசபையில் இடம் பெற்று இருந்தேன். ஆழ்வார் சார் மேற்பார்வையில் பள்ளி கரும்பல கையில் தினமும் தேர்தல் முறை பற்றி செய்தி எழுதிப் போடுவோம்.

    ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி 1969-ல் பிளவுபட்டது. அன்றைய பிரதமர் இந்திராகாந்தி பெரும்பான்மையை இழந்தார். திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவரது ஆட்சி தொடர்ந்தது. வங்கதேச யுத்தம், மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கம் போன்ற நடவடிக்கைகளால் இந்திராவுக்கு ஆதரவு பெருகியது.

    அதைப்பயன்படுத்தி மக்களவையைக் கலைத்துவிட்டுத் தேர்தலை முன்கூட்டியே கொண்டுவர 1970-ல் திட்டமிட்டார் இந்திரா. 1971ல் திடீர்த் தேர்தல்! அண்ணாவின் மறை வுக்குப் பிறகு 1969ல் கலைஞர் முதல்வராகி இருந்தார். தனது தலைமையை உறுதிப்படுத்திக்கொள்ள சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார்.

    இந்தியாவில் முதல் மூன்று மக்களவையும் (1952, 57, 62) முழுக் காலமும் பதவியில் இருந்தன. நான்காவது மக்களவை (1967) முன்கூட்டியே கலைக்கப்பட்டது. அவசர நிலைக்குப் பின் ஐந்தாவது மக்களவையின் காலம் (1976) ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. 8, 10, 14, 15-வது, மக்களவைகள் முழுப் பதவிக் காலமும் நீடித்தன. 6, 7, 9, 11, 12, 13-வது மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன.

    இப்படி நிகழ்ந்ததால், 'ஒரே நேரத்தில் தேர்தல்' என்ற நடைமுறை முழுக்கச் சீர்குலைந்தது. 1999 ல் ஆட்சிக்கு வந்த பா. ஜனதா பிரதமர் வாஜ்பாய் சில மாதங்கள் முன்னதாக மக்களவையைக் கலைத்தார். மன்மோகன்சிங், நரேந்திர மோடி (1.0.) முழு ஆட்சிக்காலமும் பதவி வகித்தார்கள். நடப்பு மக்களவை முன்கூட்டியே கலைக்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது.

    மீண்டும் பழைய நிலைக்குப் போகவேண்டும் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி. எனவே "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" நிகழ்ச்சிநிரலை கையில் எடுத்து இருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நியமிக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் விலகிவிட்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் ஆகியோர் ராம்நாத் கோவிந்த்துடன் தொடர் ஆலோசனை செய்துவருகின்றனர்.

    "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" முறையைக் கொண்டுவருவதற்குக் கூறப்படும் காரணம் என்ன? நாடு முழுவதும் ஏதாவது ஒரு தேர்தல் எப்போதும் நடப்பதால் வளர்ச்சிப்பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், ஆறு, ஏழு ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மிச்சமாகும்.

    தேர்தல் செலவு என்பது மக்களாட்சியின் அடிப்படை!. பல,பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் மத்திய அரசு தேர்தல் செலவைப் பெரிதாக நினைக்கத் தேவையில்லை. கிட்டத்தட்ட 70 கோடி வாக்காளர்கள் இருக்கும் இந்தியா மாதிரியான பெரிய தேசத்தில் ஒரு வாக்காளருக்கு 100 ரூபாய் கூட தேர்தல் செலவு செய்ய முடியவில்லை என்றால் "பச்சப் புள்ள" கூட பக,பக என்று சிரிக்கும்! பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொண்டாலேபோதும்!

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆயுள் பாக்கி இருக்கிற பல சட்டமன்றங்களைக் கலைக்க வேண்டியிருக்கும். இப்போது தான் தேர்தல் நடந்து முடிந்த கர்நாடக அரசுக்குக் கிட்டத்தட்ட முழு ஆயுள் பாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த தேர்தல் 2026-ல் தான்! இப்படிப் பல மாநிலங்கள்!

    "இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்" என்று கூறுகிறது நமது அரசியலமைப்பின் முதல் ஷரத்து. எனவே "பாரதம்" என்ற பெயர் மாற்றத்தின் மூலம் அதையும் உடைத்துவிட்டு கூட்டாட்சிக் கோட்பாட்டை நீக்கி விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பெயர் மாற்றம் மூலம் பழமைவாதிகளைத் திருப்திப்படுத்திவிடலாம். அதே நேரத்தில் "மாநிலங்களின் ஒன்றியம்" என்பதை மாற்றியமைப்பதன் மூலம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்து விடலாம்!

    பல்வேறு வட மாநிலங்களுக்கு 2023 கடைசியில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. 2024-ல் மேலும் பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 6 மாதம் முன்னதாகத் தேர்தல் அறிவிக்கத் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் போபால் நகரத்தில் சூசகமாகக் கூறிவிட்டார்.

    ஆகையால் 2023 செப்டம்பர் 18 -ந் தேதி துவங்க இருக்கும் சிறப்புக் கூட்டத் தொடரில் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு "ஒரே நாடு-ஒரே தேர்தல்" நடைமுறையை "நாட்டு நன்மைக்காக" கொண்டுவருகிறோம் என்று தேச பக்தர்கள் கூறினாலும் கூறுவார்கள் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. கூடவே "ஒரே நாடு.. ஒரே தேர்தல்" நடைமுறையின் முதல் கட்டமாக 9-10 மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்படலாம்! அல்லது ஒட்டு மொத்தமாகக் கூடத் தேர்தல் அறிவிக்கப்படலாம்! எல்லாம் மோடிக்கே வெளிச்சம்!

    தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், சி.பி.ஐ., சி.பி.எம்., பார்வர்ட் பிளாக், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அ.தி.மு.க. 2018-ல் எதிர்த்தது. இப்போது ஆதரிக்கிறது. இது தான் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்குமான வித்தியாசம், பிரதர்!

    மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் தான். 1983-ல் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆண்டறிக்கையை சமர்ப்பித்த போதே இது விவாதிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டின் சட்ட ஆணையத்தின் அறிக்கையிலும் உள்ளது.

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒரே நேரத்தில் பெருமளவிலான மனிதவளம் தேவைப்படும். அதிக எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை (VVPAT) இயந்திரங்கள் வேண்டும். அவற்றை வாங்க எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்? அவை ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் மாற்றப்பட வேண்டும்.. பாதுகாப்பாகச் சேமிக்கப்பட வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும்?

    தற்போது உள்ளாட்சித் தேர்தல்களை மாநிலங்கள்தான் நடத்துகின்றன அவற்றின் எண்ணிக்கை மிக, மிகப் பெரிய அளவு! அவற்றையும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்குள் கொண்டுவர முன்னாள் ஜனாதிபதி குழுவுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். பஞ்சாயத்துக்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே தேர்தல் என்றால் பாதுகாப்பு என்ன ஆகும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

    ஏதாவது ஒரு காரணத்தால் மத்திய அரசு கவிழ்ந்தாலோ, மாநில அரசு நடைபெறமுடியாமல் போனாலோ என்ன செய்வது? மக்களவைக்கும் சட்டப் பேரவைக்கும் வெவ்வெறு சமயத்தில் தேர்தல் நடக்கும் போது மாநிலப் பிரச்சினைகளைப் பரிசீலித்து வாக்களிக்கும் வாய்ப்பு உருவாகும். எனவே மாநில சுயாட்சியை இது பாதிக்கும். மத்திய மேலாதிக்கத்தை மேலும் அதிகப்படுத்துவதே இதன் நோக்கம் என்பது வெட்டவெளிச்சம்!

    வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தடையாக இல்லாமல் இருக்க விதிகளைத் நிறுத்தினாலே போதும். நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இரண்டு மாதம் தேவை என்றால் எல்லா மாநிலத்திலும் எதற்கு "பணி நிறுத்தம்" செய்ய வேண்டும். தேர்தல் பரப்புரைக் காலத்தை 10 நாட்களாகக் குறைக்கலாம்!

    இந்தியா என்பது ஒரே நாடு தான் என்றாலும் அது தேசங்களின் தேசம்! தனியொரு பிரதமரின் கனவுத் திட்டத்திற்காக நாடு சுமையை ஏற்க முடியாது.

    Next Story
    ×