search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனாவின் 40 ஆண்டு கலைப்பயணம்: மலரும் நினைவுகள்...
    X

    மீனாவின் 40 ஆண்டு கலைப்பயணம்: மலரும் நினைவுகள்...

    • அந்த காலகட்டத்தில் தான் `நெஞ்சங்கள்' படத்துக்காக சிவாஜி சாருடன் நடிப்பதற்காக ஒரு குழந்தை நட்சத்திரத்தை தேடி இருக்கிறார்கள்.
    • என்ன பாப்பா நல்லா இருக்கியா? என்று மேஜர் சுந்தரராஜன் சார் கேட்டபடி `என்ன பாப்பா சினிமாவில் நடிக்க வர்றீங்களா... என்று கேட்டு சிரித்தார்.

    நடிகை மீனா...!

    குழந்தை நட்சத்திரமாக தனது கலை உலக பயணத்தை தொடங்கியவர். சினிமா சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட நடிகர் திலகம் சிவாஜி முதல் இந்த கால ரஜினி வரை முன்னணி நட்சத்திரங்களோடு ஜொலித்து கொண்டிருப்பவர்.

    40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது கலைப்பயணம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத தடம் பதித்தவை. தனது திரை வாழ்க்கையின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

    மீனாகுட்டி...

    `என்னம்மா... அம்மாவின் குரல் கேட்டதும் வீட்டின் ஒரு அறைக்குள் இருந்து கையில் கிடைத்த கலர் பென்சில்களால் ஒரு நோட் புக்கில் ஓவியம் வரைவதாக நினைத்து கிறுக்கி கொண்டிருந்த நான் குரல் கொடுத்தேன்.

    மூன்றரை வயதில் வரைவது என்றால் கிறுக்குவது தானே... `இங்கே வாயேன்...' மீண்டும் அம்மாவின் குரல் கேட்டதும் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அம்மா இருந்த அறைக்குள் ஓடி சென்று அவர் முன்பு ஆஜரானேன்.

    அம்முகுட்டி இந்த டிரெஸ்சை போட்டுக்கோங்க... என்று அம்மா ஒரு பிராக்கை எடுத்து போட சொன்னதும், லீவு நாளிலும் அம்மா ஸ்கூலுக்கு அனுப்ப போவதாக நினைத்து `இன்னிக்கு லீவுதானேம்மா...' என்று செல்லமாக சிணுங்கினேன்.

    என் எண்ணத்தை புரிந்து கொண்ட அம்மா `ஸ்கூலுக்கு இல்லடி செல்லம்...' என்றார்.

    வேற எங்கம்மா போறோம்...?

    ஒரு அங்கிளுக்கு `ஹேப்பி பர்த்டே' அங்கதான் போறோம்.

    ஹேப்பி பர்த்டேன்னா சாக்லேட்லாம் தருவாங்கதானே...?

    கண்டிப்பா தருவாங்க! என்றவர் அடுத்த சில நிமிடங்களில் எனக்கு டிரெஸ் போட்டு ரெடியாக்கிவிட்டார்.

    காரில் ஏறி அமர்ந்ததும் கார் புறப்பட்டது. சிறிது நேரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. இறங்கினோம்.

    நிறைய கார்கள் அணிவகுத்து நின்றன. நிறைய ஆண்களும், பெண்களும் திரண்டு நின்னாங்க. எல்லோரும் கைகளில் பூமாலை, சால்வை அல்லது பரிசு பொட்டலம் என்று ஏதாவது ஒன்றை வைத்திருந்தார்கள்.

    அந்த கூட்டத்துக்கு இடையே அம்மா என்னையும் கையை பிடித்து அழைத்து சென்றார்.

    பெரிய பங்களா வீடு. வீட்டுக்குள் சென்றதும் உயரமாக ஒரு அங்கிள் நின்று கொண்டிருந்தார். அம்மா என்னை தூக்கி வைத்துக்கொண்டு ஒரு மாலையை கையில் தந்து அந்த அங்கிளுக்கு போடு என்றார்.

    நான் மாலையை போட்டதும் தலையை குனிந்து வாங்கினார். அப்படியே என் கன்னத்தையும் லேசாக கிள்ளியபடி தட்டிக்கொடுத்தார்.

    அவர் தான் திரை உலகை ஆண்ட சக்கரவர்த்தி சிவாஜி என்பதோ... அதுதான் அவரது இல்லமான `அன்னை இல்லம்' என்பதோ அந்த வயதில் எனக்கு புரியவில்லை.

    தி.நகர் தெற்கு போக்ரோட்டில் அமைந்துள்ள அன்னை இல்லம் திரை உலகினருக்கு கோவில் மாதிரி. திரை உலக ஜாம்பவானை அவரது இல்லத்திலேயே அந்த சின்ன வயதிலேயே சந்திக்கும் பாக்கியத்தை உங்கள் மீனா பெற்றிருக்கிறேன்.

    அந்த இல்லத்தில் இருந்துதான் எனது திரை உலக பயணமும் தொடங்கியது.

    அந்த காலகட்டத்தில் தான் `நெஞ்சங்கள்' படத்துக்காக சிவாஜி சாருடன் நடிப்பதற்காக ஒரு குழந்தை நட்சத்திரத்தை தேடி இருக்கிறார்கள். அதுவரை குழந்தைகள் யாரும் அவர்களுக்கு `செட்' ஆகவில்லை.

    பிறந்த நாள்விழாவில் என்னை பார்த்த சிவாஜி சாருக்கு அந்த கதா பாத்திரத்துக்கு என்னை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றி இருக்கிறது. ஆனால் அன்று அவர் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. வழக்கபோல் நானும் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தேன்(எல்.கே.ஜி தான்).

    சில நாட்கள் கழித்து பட தயாரிப்பு குழுவினர் எங்களை வீட்டிற்கு வந்து சிவாஜி சார் கூப்பிடுவதாக என்னை அழைத்து சென்று இருக்கிறார்கள். அன்னை இல்லத்தில் அவரை நானும் எனது அம்மாவும் சந்திக்க சென்ற போது தான் தங்கள் படத்துக்கு ஒரு குழந்தை நட்சத்திரம் தேவைப்படுவதாகவும், அதில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் சிவாஜி சார் அம்மாவிடம் தெரிவித்து இருக்கிறார். அங்கு இருந்த மேஜர் சுந்தரராஜன் சாரிடமும் சிவாஜி சார் இந்த பொண்ணை தான் நமது படத்திற்கான கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்து இருக்கிறேன் என்றார்.

    உடனே அருகில் நின்ற அம்மாவிடம் `என்ன மல்லிகா உங்க பொண்ணா... என்று கேட்டுக்கொண்டு என் பக்கம் திரும்பி `என்ன பாப்பா நல்லா இருக்கியா? என்று மேஜர் சுந்தரராஜன் சார் கேட்டபடி `என்ன பாப்பா சினிமாவில் நடிக்க வர்றீங்களா... என்று கேட்டு சிரித்தார்.

    புகழின் உச்சத்தில் இருந்தவர் சிவாஜி. அவருக்கு மரியாதை செய்ய வந்தவர் அம்மா. அப்படி இருக்கும் போது அவருடன் நடிக்க தன் பிள்ளைக்கு வாய்ப்பு கிடைப்பதை மறுப்பாரா? உடனே ஓ.கே. சொல்லி இருக்கிறார்.

    அம்மாவும் காங்கிரசில் இருந்ததால் சிவாஜி சாருக்கு நன்கு அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

    சினிமா... நடிப்பு... என்பதெல்லாம் அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்து இருக்கவில்லை என்பதைவிட புரியும் வயதில் அப்போது நான் இல்லை என்பதே உண்மை.

    (மலரும் நினைவுகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கிறேன்.)

    Next Story
    ×