search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கண்ணதாசன் எழுத்துக்களில் காமராஜர்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
    X

    கண்ணதாசன்

    கண்ணதாசன் எழுத்துக்களில் காமராஜர்- முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • தமிழகத்தை மூன்று முறை முதல்வராயிருந்து ஆண்டதாலே காமராஜரை மன்னனுக்கு ஒப்பாக வர்ணிக்கிறார் கண்ணதாசன்.
    • காமராஜர் ஆளவந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பட்டியலிட்டு, தாலாட்டுப் பாட்டாகப் பாடுகிறார் கண்ணதாசன்.

    எத்தனையோ புரட்சிகளை காமராஜர் செய்திருந்தாலும், நமது கருத்தினில் முதலாவதாகத் தோன்றுவது "கல்விப் புரட்சியே". ஒரு மனிதனுக்கு கல்விச்செல்வம் கிடைத்துவிட்டால் எல்லாச் செல்வமும் கிடைத்து விடும் என்பது காமராஜரின் நம்பிக்கை...

    "பள்ளிக்கூடத்துக்குப் போனா... சாப்பாட்டுக்கு எங்கே போறது" என்று மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் கேட்ட கேள்விதான் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு அடித்தளமாயிற்று. ஆக, கல்வி கற்க வேண்டுமென்றால், பசி இல்லாதிருக்க வேண்டுமென்ற அடிப்படை உண்மையைப் பற்றிச் சிந்தித்தார் காமராஜர். எனவே இலவசக் கல்வியும், மதிய உணவும் காமராஜருக்கு இரண்டு கண்களாகவே இருந்தன.

    காமராஜரை நான் ஒரு கடவுளாகத்தான் பார்க்கிறேன் என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ள கண்ணதாசன் "படிக்காத மேதை" படத்திலே...

    "பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக

    இருப்பவர் தெய்வமடி-தன்

    பசியைக் கருதாமல் பிறர்க்குக் கொடுப்போர்கள்

    தெய்வத்தின் தெய்வமடி"

    என்ற பாடல் வரிகளை காமராஜரை நினைத்துத்தான் எழுதியிருந்தார்.

    நடிகர் திலகம் சிவாஜியும், ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்து வெற்றிகண்ட "தாய்" என்னும் படத்திலே ஒரு பாட்டு...

    "நாடாள வந்தாரு... நாடாள வந்தாரு

    ராஜாங்கம் கண்டாரம்மா...

    கல்லாமை கண்டாரு... இல்லாமை கண்டாரு

    கல்லூரி தந்தாரம்மா... அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா"

    என்ற பல்லவியோடு ஆரம்பமே அமர்க்களமாய் தொடங்குகிற பாட்டு இது.

    பசி வந்தால் குழந்தைகள் அழத் தொடங்குவது இயல்பு தானே. ஆனால் விருதுநகரிலே ஒரு ஏழைக்குடும்பத்திலே பிறந்த ஒரு குழந்தையின் அழுகை... வித்தியாசமாக அழுததாக எழுதுகிறார் கண்ணதாசன்.

    "பாண்டி நாட்டுச் சீமையிலே-ஒரு

    பச்சைக் குழந்தை அழுததடி- அது

    பாலுக்காக அழவில்லை

    படிப்புக்காக அழுததடி..." என்று

    அந்தக் குழந்தை வேறு யாருமல்ல... சிவகாமி அம்மையார் பெற்றெடுத்த செல்லக்குழந்தைதான். அந்த குழந்தை நமது காமராஜர்தான் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் சூட்சமமாக உரைக்கிறார் கண்ணதாசன்.

    அந்தக் குழந்தை எப்படிப்பட்ட குழந்தை தெரியுமா? வீட்டுக்காக அழாமல் நாட்டுக்காக அழுத குழந்தை என்று நயம்பட உரைக்கிறார் கவிஞர்.

    "ஆடு மேய்க்கும் சிறுவனைக் கண்டு

    மனதும் உடலும் பதைத்ததடி...

    வளரும் பிள்ளை தற்குறியானால்

    வாழ்வது எப்படி என்றதடி...

    பெற்ற தாயையும் மறந்ததடி-அது

    பிறந்த பொன்னாட்டை நினைந்ததடி

    உற்றார் உறவினர் யாரையும் மறந்து

    உலகைக் காக்க துணிந்ததடி..."

    என்று எழுதியதோடு நின்றுவிடவில்லை கண்ணதாசன். மேலும் அந்த குழந்தை (காமராஜர்)யின் சிறப்பை எழுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் நமது காமராஜர்.

    கல்யாணம் செய்யவும் எண்ணமில்லை- ஒரு

    காசுக்கும் பணத்துக்கும் ஆசையில்லை...

    எல்லார்க்கும் எல்லாமும் வேண்டுமென்றே -தினம்

    எண்ணுவதல்லாமல் ஏதுமில்லை...

    பிறப்பில் பச்சை தமிழனடி-அவரைப்

    பெரியவர் என்போம் நாங்களடி... அந்த

    கர்மவீரனைக் காலாகாந்தி

    என்றழைப்பார் இந்திய மக்களடி...

    என்று முடிகிறது அந்தப்பாட்டு.

    இப்படி, கவிதைகளிலும், திரைப்படப் பாடல்களிலும் காமராஜரைத் தூக்கிப்பிடித்து எழுதிய பாடல்களோடு கண்ணதாசன் மனம் நிறைவடைந்திடவில்லை.

    தன்னுடைய திரை உலக செல்வாக்கினைப் பயன்படுத்தி, இசையமைப்பாளர்கள் ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் கணேஷ் ஆகியோர் இசையில், பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.எஸ். சவுந்தர்ராஜனைப் பாட வைத்து சில பாடல்களைப் பதிவு செய்தார் கண்ணதாசன். அப்போது எம்.எல்.ஏ.ஆக இருந்த கண்ணதாசனின் இனிய நண்பர் ஓ.என்.சுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில் அவை அனைத்தும் இசைத் தட்டுக்களாக வெளிவந்து, தமிழகம் எங்கும் ஒளிபரப்பாயின.

    "இளைய பாரதத்தில் உள்ள

    மனிதர் கோடி கோடியே

    இவனும் அந்த காந்தியென்று

    ஏற்றினார்கள் பாடியே...

    எளிய வாழ்க்கை வாழுகிற

    தமிழன் நாட்டு சாதியே

    இன்னும் என்ன அவனில்லாமல்

    ஏது இங்கு நீதியே..."

    இந்தப் பாட்டில் "அவன்" என்ற சொல் காமராஜரைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தியுள்ளார் கண்ணதாசன்.

    "கண்படைத்த மனிதர் யாவும்

    காமராஜரைத் தொடர்கவே

    மண்படைத்த புகழ்த் தலைவன்

    மகிமை காக்க வருகவே...

    கொடுமை தீர்க்கும் தலைவனாக

    குடிசை தந்த கோபுரம்

    கொள்கை என்ற தெய்வமாகக்

    குடியிருக்கும் ஆலயம்...

    அடிமை தீர்க்க சிறைகள் தோறும்

    தவமிருந்த காவலன்

    அள்ளி வந்த பதவி யாவும்

    அறுத்தெறிந்த நாயகன்..."

    என்று பல்வேறு கோணங்களில் காமராஜரைப் படம் பிடித்து எழுதியுள்ளார் கண்ணதாசன். இன்னும் ஒருபடி மேலே போய் நர்மதை ஆற்றங்கரையில் காந்தியும், கங்கை ஆற்றங்கரையில் நேரு பிரானும் பிறந்தது போல, தமிழ்த் தென்றல் தவழுகிற தென்பாண்டி நாட்டில் காமராஜர் பிறந்தார் என்று இன்னொரு கவிதையில் வருணிக்கிறார் கண்ணதாசன்.

    "நேருவின் பின்னால் யார்என நாடு

    ஏங்கிய வேளையில் தாங்கிய மன்னன் இவனம்மா

    அறுபது கோடி மாந்தரை நாடி

    அவர்தம் வாழ்வில் அமைதியைத் தேடி

    அல்லும் பகலும் சிந்தனை செய்தான் அவனம்மா

    ஆக்கிய அளவில் இவன் போல் தலைவன் எவனம்மா...?"

    என்று கேள்விமேல் கேள்வி கேட்டு காமராஜரை வியந்து பாராட்டுகிறார் கண்ணதாசன்.

    "மண்ணாசை பொன்னாசை

    மன்னனுக்கு இல்லையடி-ஒரு

    மகராசியைக் கைப்பிடிக்கும்

    எண்ணமும் இல்லையடி

    சந்நியாசி கோலம் கொண்ட

    சமரச ஞானியடி-அவரின்

    சந்தோசம் பிள்ளைகளுக்கு

    நல்கும் கல்வியடி"

    என்று காமராஜரின் துறவு மனப்பான்மையையும் கல்வி மனப்பான்மையையும் படம் பிடித்துக் காட்டுகிறார் கண்ணதாசன்.

    முனைவர் கவிஞர் இரவிபாரதி

    முனைவர் கவிஞர் இரவிபாரதி

    மீண்டும் காமராஜர் ஆளவந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பட்டியலிட்டு, தாலாட்டுப் பாட்டாகப் பாடுகிறார் கண்ணதாசன்.

    "இருக்க இடமும் வரும்

    எல்லோர்க்கும் வாழ்வும் வரும்

    எரிக்கும் விளக்கினிலே

    எப்போதும் ஒளியும் வரும்...

    காலத்தால் அமைதி வரும்

    காணாத வாழ்வும் வரும்

    காமராஜர் ஆள வந்தால்

    கண்ணீர்க்கு முடிவு வரும்

    காலம் வரும் கண்ணே-நீ

    கண்துயில்வாய் முன்னே..."

    இந்தத் தாலாட்டும் ஜி.கே.வெங்கடேஷ் இசையமைக்க வாணி ஜெயராம் குரலில் தமிழ்நாடெங்கும் ஒலித்தது.

    "செந்தமிழர் மைந்தர்களே சிந்தனை செய்க" என்று தொடங்குகிறது ஒரு பாட்டு. அந்த பாட்டிலே...

    "பாசமகன் சிறையிருந்தான். பன்னிரெண்டாண்டு- ஒரு

    பத்தாண்டு வாழ வைத்தான் மண்ணினை ஆண்டு

    ஆசையுடன் தமிழருக்கு அறிவினைத் தந்து -ஜாதி

    அத்தனையும் ஒன்று என்றும் உயர்வினைத் தந்து...

    காலம் பார்க்க அவனுக்கில்லை கைக்கெடிகாரம்-நல்ல

    காலத்தையே நிர்ணயிக்கும் அவனதிகாரம்

    ஆலமரம் போலிருக்கும் அவன் உபகாரம்-அவன்

    ஆண்டநாளில் இருந்ததில்லை உள்விவகாரம்..."

    ஓய்வு ஒழிச்சலின்றி நேரம் பார்க்காமல் உழைத்த அந்த தலைவனின் கையில் சொந்தமாக ஒரு கைக்கெடிகாரம் கூட இருந்ததில்லை. ஆலமரம் போல் அனைவர்க்கும் நிழல் தந்து ஆதரித்தவன் என்று காமராஜருக்கு புகழாரம் சூட்டுகிறார் கண்ணதாசன்.

    "கண்ணனை அடைந்து கதிபெற்ற மாந்தர்கள்

    கண்டோம் பல கோடி- எங்கள்

    மன்னனின் திறத்தால் வாழ்வடைந்தோர்கள்

    மண்ணிடை பல கோடி...

    தென்தமிழ்ச் சோலை மன்னனை ஈன்றாள்

    திருமகள் சிவகாமி-அந்த

    அன்னையின் மகனால் நன்நலம் பலவும்

    அடைந்தவர் பல கோடி

    மண்மலர் மதுரை நம்பிய தெய்வம்

    மங்கள மீனாட்சி - அவன்

    கண்ணருளாலே தமிழர்கள் நாட்டில்

    பொங்கிடும் அவனாட்சி..."

    தமிழகத்தை மூன்று முறை முதல்வராயிருந்து ஆண்டதாலே காமராஜரை மன்னனுக்கு ஒப்பாக வர்ணிக்கிறார் கண்ணதாசன். "அவனாட்சி" என்ற வார்த்தையும் காமராஜரை குறிக்கும் வண்ணமாகவே எழுதியுள்ளார் கண்ணதாசன்.

    இப்படியெல்லாம் வர்ணித்து... வர்ணித்து, ஆசை தீரும் அளவுக்கு கண்ணதாசன் எழுதிக்குவித்த கவிதைகளும், பாடல்களும், கட்டுரைகளும் ஏராளம்! ஏராளம்!

    இப்படிப்பட்ட பாசமும், நேசமும் கொண்டிருந்த கண்ணதாசன் மீது காமராஜர் கொண்டிருந்த அன்பும், அக்கறையும் மகத்தானது.

    "எனது பிறந்தநாளான ஜூன் 24-ம் தேதியன்று முதல் வாழ்த்து தலைவர் காமராஜரிடம் இருந்துதான் வரும். அன்றைய தினம் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தால் (அப்போதெல்லாம் அலைபேசி என்பதே இல்லை) அது பெருந்தலைவருடைய வாழ்த்தாகத்தான் இருக்கும். அந்த வாழ்த்தில் எனக்கு கிடைக்கிற சந்தோசத்திற்கு ஈடு சொல் இவ்வுலகில் எதுவுமே இல்லை என்கிறார் கண்ணதாசன்.

    அந்த வாழ்த்து தலைவர் என் கழுத்திற்குச் சூட்டிய மணிமகுடமாகவே எடுத்துக் கொள்வேன். அந்த அளவுக்கு அவருடைய ஆன்மாவோடு எனது ஆன்மா ஐக்கியப்பட்டிருந்தது.

    அவரை நான் தாயாகப் பார்த்தேன், தந்தையாகப் பார்த்தேன், தெய்வமாகப் பார்த்தேன், அதற்குப்பிறகுதான் தலைவனாகப் பார்த்தேன் என்று எழுதுகிறார் கண்ணதாசன்.

    ஏற்கனவே உள்ள பழக்க வழக்கங்களினால் மிகவும் கெட்டுப்போயிருந்த உடல்நலம், பெத்தட்டீன் ஊசி போடுவதால் மிக மிக மோசமாகி விட்டது. யார் சொன்னால் இதனை அப்பா நிறுத்துவார் என்று யோசித்த எனது பிள்ளைகள் நேராக காமராஜரிடமே சென்று முறையிட்டார்கள்.

    உடம்பை கவனமாக பார்த்துக்குங்க என்று நானும் பலமுறை சொல்லி விட்டேன். என்னைப் பார்க்க வரும் போதெல்லாம் இதைத்தானே சொல்லித் திட்டிருக்கேன். இந்தப் பாவி கேட்க மாட்டேங்கிறாரே? இனிமேல் யார் சொல்வது என்று ஆத்மார்த்தமாக ஆதங்கப்பட்டு தனது வேதனையை எனது குழந்தைகளிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் காமராஜர். அது மட்டுமல்ல எனக்கு வேண்டிய நண்பர்களிடமெல்லாம் நாசூக்காக சொல்லியனுப்பி இருக்கிறார். என் மீது தலைவர் கொண்டிருந்த அக்கறையை, அன்பை, தெய்வ பந்தமாகவே பார்க்கிறேன் என்று எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

    அடுத்த வாரம் சந்திப்போம்

    - கவிஞர் இரவிபாரதி

    Next Story
    ×