என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்... 45
- நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
- நானும், மீனாவும் அவரிடம் பேச தயங்கி சற்று தூரத்தில் ஒதுங்கி அமர்ந்து இருந்தோம்.
எவ்வளவு உச்சத்தை தொட்டாலும் இளமைக்காலமும் அந்த காலத்து மலரும் நினைவுகளும் எப்போதுமே இனிமையானவை. சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாகத்தான் இருக்கும்.
நான் தமிழ் சினிமாவில் கால்பதித்த காலம்... அதாவது 1988-களில் ரஜினி சார் சூப்பர் ஸ்டாராக திரை உலகில் வலம் வந்து கொண்டிருந்தார். எனது முதல் படமே அவரோடு இணைந்து நடிப்பதாக அமையும் என்பது நான் எதிர்பாராதது.
'தர்மத்தின் தலைவன்' படத்தில் அவருடன் நடித்த காலம் மறக்க முடியாதது. தொடர்ந்து 'மன்னன்', நாட்டுக்கு ஒரு நல்லவன், பாண்டியன், அண்ணாமலை என்று அவரோடு ஜோடியாக நடித்த படங்களும் 'ஹிட்'. அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களும் 'ஹிட்'. இன்றளவும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து கொண்டிருக்கிறது.
பாண்டியன் படத்தில் வரும் 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் ஒய்யலாலா...' என்று படகில் இடம்பெற்ற டூயட் பாடல் காட்சியை சொல்வதா...? என்னையே கற்பனையில் கவிஞர் வடித்த 'கொண்டையில் தாழம்பூ... கூடையில் என்ன பூ... குஷ்பூ...' என்ற பாடலை நினைத்து மகிழ்வதா?
அந்த காலகட்டத்தில் ரஜினி சாருடன் நான் நடித்த அத்தனை படங்களும் வெற்றிப்படங்கள். எந்த காலத்திலும் ரசிக்கும் படங்கள் என்பதில் சந்தேகமில்லை. மறக்க முடியாத அந்த காலங்களை மீண்டும் அசைபோட்டு பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு வாய்ப்பும் தேடி வந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு 'அண்ணாத்த' படத்தில் ரஜினி சாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு தான் அது. அதை கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்த நிலைவேறு. அவர் இருந்த நிலை வேறு.
இப்போது அவருடன் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கும்? முன்பு போல் இருப்பாரா? ஜாலியாக பேசுவாரா? என்ற பல கேள்விகள் என் மனதில் எழுந்தது. ஆனால் எந்த கேள்விக்கும் விடை மட்டும் தெரியவில்லை. அண்ணாத்த படப்பிடிப்பின் முதல் நாள்... படப்பிடிப்பு தளத்தில் நான், மீனா எல்லோரும் ஆஜர் ஆனோம்.
அந்தகாலத்தில் படப்பிடிப்புக்கு 5 நிமிடம் தாமதமாக வந்ததற்கே 'சாரி' கேட்டவர் ரஜினி. இப்போது எப்படி இருப்பார்...? நினைத்துக் கொண்டிருந்தபோதே ரஜினி படப்பிடிப்பு தளத்துக்குள் வந்தார். மணியை பார்த்தேன் ஒரு நிமிடம் கூட காலதாமதம் இல்லை. அதே காலந்தவறாமை... அதே சுறுசுறுப்பு... கொஞ்சம் கூட மாறவில்லை. அவரால் மட்டும் எப்படி முடிகிறது.
நானும், மீனாவும் அவரிடம் பேச தயங்கி சற்று தூரத்தில் ஒதுங்கி அமர்ந்து இருந்தோம். எங்களை பார்த்ததும் எழுந்து அருகில் வந்தார். என்ன இப்படி என்னை மட்டும் தனியாக விட்டு விட்டு நீங்க இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டே எங்கள் அருகில் அமர்ந்து பேசத் தொடங்கினார். அப்புறம் எங்கள் தயக்கம் விலகி ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நாங்கள் ஜோடி சேர்ந்த படம். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். ரசிகர்கள் மட்டுமா? நானும் தான்...!
படம் ரிலீஸ் ஆனது. முதல் நாள்... முதல் காட்சி... படத்தை பார்க்கவும், ரசிகர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை பார்க்கவும் ஆசைப்பட்டேன். அதற்காக சென்னை காசி தியேட்டருக்கு சென்றேன்.
நான் வருவதை அறிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் மேடம், மேடம் என்று பேசத்தொடங்கினார்கள். ஆனால் நானோ படம் பார்க்கும் எண்ணத்தில் குறியாக இருந்ததால் அவர்களை சிரமப்பட்டு தாண்டி சென்று தியேட்டரில் படம் பார்த்தேன். படம் நன்றாக அமைந்திருந்தது. மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது.
ரஜினியோடு நடித்தபோது இளமைக்கால நினைவுகள் எப்படி வந்ததோ அதேபோல் உண்மையாகவே மீண்டும் இளமை பருவத்துக்கு சென்ற அனுபவமும் ஒருமுறை ஏற்பட்டது. அது தான் எடை குறைப்பு விவகாரம்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வது, உடல் பயிற்சிகள் செய்வது கலைஞர்களுக்கு முக்கியம். நானும் உடல் எடை குறைவதற்காக சில மாதங்களாக கடினமான உடல் பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டேன். அதற்கு முக்கிய காரணம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடல் எடை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.
மருத்துவர்கள் ஆலோசனையில் தான் எடையை குறைத்தேன். எனது புதிய தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினேன். பெரும்பாலும் சேலைகளில் பார்த்த ரசிகர்கள் 'மாடர்ன்' உடையில் பார்த்ததும் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார்கள்.
கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் பிரதிபலனின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்ற எனது மகிழ்ச்சியையும் பகிர்ந்தேன். மற்றவர்களுக்கும் பலன் அளிக்கட்டுமே என்பதற்காக தான் சமூல வலைதளத்தில் வெளியிட்டேன்.
லண்டனில் உள்ள பாரம்பரியமிக்க நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்த எனது மகளின் படிப்பு காலம் நிறைவடைந்ததையொட்டி சென்றிருந்தேன். என் மகளாலும் என்னைப்போல் சுயகாலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. அது கூடுதல் மகிழ்ச்சியை தந்தது.
அப்போது தான் லண்டன் நகரில் நான் சென்ற படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன்.
அந்த படத்தை பார்த்துதான் ரசிகர்கள் விதவிதமாக விமர்சித்தார்கள்.
'குஷ்புவா இது... நம்ப முடியவில்லையே', 'சின்னதம்பியில் பார்த்த அதே குஷ்புவை பார்க்கும் போது எவ்வளவு சந்தோசம்' என்றெல்லாம் தங்கள் கருத்துக்களை பதிவிட்டார்கள். கிண்டல் செய்தவர்களும் உண்டு.
ஆனால் ஒரே ஒரு விஷயம்தான் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்த தோற்றத்தை இன்றும் மறக்காமல் ஒப்பிட்டு பேசியது. அதாவது ரசிகர்கள் மனதில் என்றும் எனக்கு தனி இடம் இருக்கிறது என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. என்றும் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
சின்னத்திரையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். அந்த வரிசையில் 'மீரா' என்ற தொடரில் நடித்து வருகிறேன்.
மீரா தொடரில் நடிப்பது மட்டுமின்றி , தொடருக்கான கதையையும் எழுதியுள்ளேன். முதன்மை கதாபாத்திரங்களான மீரா கதாபாத்திரத்தில் நானும், கிருஷ்ணன் கதாபாத்தி ரத்தில் சுரேஷ் சந்திர மேனனும் நடிக்கிறோம். இத்தொடர் மூலம் ஒரு எழுத்தாளராகவும் மற்றும் கருத்துருவாக்கம் செய்வதிலும் நான் பெருமை கொள்கிறேன். எனது கனவு செயல்திட்டங்களில் இதுவும் ஒன்று. உறுதியான, சுதந்திரமான மற்றும் சுயசார்புள்ள ஒரு பெண்ணைச் சுற்றிய ஒரு கதையை தமிழ் தொலைக்காட்சி தளத்தில் சொல்ல வேண்டுமென்பது எனது நீண்ட கால விருப்பம். மீரா நெடுந்தொடரில் இதை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்த கதாபாத்திரத்தோடு பார்வையாளர்கள் தங்களை தொடர்புபடுத்திப் பார்த்து உத்வேகம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
ஒரு பெண்ணாக, பெண்கள் உறுதியானவர்களாக, சுதந்திரமானவர்களாக, சுய சார்புடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை.
பல சமயங்களில் பெண்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து விடுகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, வழிகாட்ட வேண்டும் என்பதே என் எண்ணம். அதுபோல் மீராவும் இருப்பாள்...
(மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...)
அடுத்த வாரம்.....
ttk200@gmail.com
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்