search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முன்னோர்கள் நல் ஆசி வழங்கும் மகாளய அமாவாசை
    X

    முன்னோர்கள் நல் ஆசி வழங்கும் மகாளய அமாவாசை

    • குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
    • சூரியன், ராகு சேர்க்கை தந்தை வழி பித்ரு தோஷத்தாலும், சூரியன் கேது சேர்க்கை தாய் வழி பித்ரு தோஷத்தாலும் ஏற்படுகிறது.

    குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும். ஜோதிட ரீதியாக லக்கினம் ஜாதகரை குறிக்குமிடமாகும். லக்கினத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக் குறிக்கும் இடமாகும். ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாம் பாவம் தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்குமிடமாகும். எனவே தந்தையும், தந்தை வழி முன்னோர்களும் தெய்வத்திற்கு சமமானவனாவான்.

    ஒரு குறிப்பிட்ட பாவகத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவகம் அந்த குறிப்பிட்ட பாவத்திற்கு எதிராக செயல்படும் அல்லது அந்த குறிப்பிட்ட பாவகத்தால் ஏற்படும் கெடு பலனை அழிக்கும். இந்த ஜென்மத்தில் பிறவிக் கடனால் அனுபவிக்கும் கர்மங்களைக் குறிப்பது பத்தாம் பாவமாகும். அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஒன்பதாம் பாவகம் பாக்கிய ஸ்தானமாகும். ஆக பூர்வ ஜென்ம கர்மக் கடனால் ஏற்படும் இடையூறுகளில் இருந்து விடுபட உதவுவது பித்ருக்கள் வழிபாடாகும். தாய், தந்தையின் மூலம் முன்னோர்களின் மரபணுவைப் பெறும் ஒரு மனிதன் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும் , சாந்தி அடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் பித்ரு கர்மாக்களை செய்ய வேண்யது முக்கிய கடமையாகும்.

    பிதுர் தோஷம் நீங்காமல் எந்த பரிகாரங்கள் செய்தாலும் பலன் கிடைக்காது. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும். பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும்.

    ஜோதிட ரீதியாக பித்ரு தோஷத்தை உணரும் வழிகள்:-

    லக்னம் ( ஜாதகர்) பூர்வ புண்ணிய ஸ்தானம் (ஐந்தாமிடம்) பாக்கிய ஸ்தானம் (ஒன்பதாமிடம்) போன்ற இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகத்தை வைத்தும் பித்ரு தோஷத்தை தெளிவாக உணர முடியும்.

    சூரியன், ராகு/ கேது, மாந்தி சம்பந்தம் 9-ம் அதிபதி ராகு/கேது, மாந்தி சம்பந்தம் சூரிய, சந்திர கிரகணத்திற்கு 7 நாட்களுக்கு முன், பின் பிறக்கும் குழந்தைகளுக்கு கடுமையான பித்ரு தாக்கம் உண்டு. சூரியன், ராகு சேர்க்கை தந்தை வழி பித்ரு தோஷத்தாலும், சூரியன் கேது சேர்க்கை தாய் வழி பித்ரு தோஷத்தாலும் ஏற்படுகிறது.

    ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேதுக்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் முன்வினைகளை பிரதிபலிப்பவை. மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும். அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டும். ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்கள் ஆகும்.

    பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திரு மணம், குழந்தை பாக்கியம் வீடு, வாகன யோகம் போன்ற சுப பலன்கள் எளிதில் நடக்காது.

    ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

    தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும். ஒரே குடும்பத்தில் சிலரை மட்டும் பித்ரு தோஷம் தாக்குமா?

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என்பது தவறான கருத்து. ஒரு தாய், தந்தைக்கு பிறந்த 4 ஆண்கள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டும் பித்ரு தோஷ தாக்கம் அதிகமாக இருக்கும். முன்னோர்களின் மரபணு சம்பந்தம் ஒருவரின் உடலில் எந்த அளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் பித்ரு தோஷ தாக்கத்தின் வலிமையில் மாற்றம் ஏற்படும். ஆனால் பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும். நம் அண்ணன் கஷ்டப்படுகிறான், தம்பி கஷ்டப்படுகிறான். நாம் நிறைய புண்ணியம் பண்ணி இருக்கிறோம். அதனால் நன்றாக இருக்கிறோம் என்று யாரும் நினைத்து விட முடியாது. அந்த பிறவிக்குள் ஏதாவது ஒரு கால கட்டத்திற்குள் நிச்சயம் பாதிப்பு உண்டு. அவர் பாதிக்கப்படவில்லை என்றால் அவரின் வாரிசுகள் பல மடங்காக பாதிக்கப்படுகிறார்கள். வசதிகள் கொட்டி கிடக்கும். ஆனால் அதை அனுபவிக்க பாக்கியமற்ற வாரிசுகள் உருவாகும். கொடுத்து கெடுக்கும் யோகம். இதுவும் ஒரு வகையான பித்ரு தோஷம். நமக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது என்று யாரும் வருந்த வேண்டாம். ஒரே தாயின் வயிற்றில் உருவாகிய வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்படும். காலம் மட்டும் மாறுபடும்.

    ஒரு மனிதன் யாருக்கெல்லாம் திதி கொடுக்க வேண்டும் தந்தை வழி மூதாதையர் 6 பேர்,தாய் வழி மூதாதையர் 6 பேர் என மொத்தம் 12 பேருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    பித்ரு வர்க்கம் என்பது

    ஆண்கள்:- பிதா - தந்தை பிதாமகர் - தாத்தா (தந்தையின் தந்தை) பிரபிதாமகர் - தாத்தாவின் தந்தை.

    பெண்கள்:- மாதா - தாயார், பிதாமகி - பாட்டி (தந்தையின் தாயார்), பிரபிதாமகி - கொள்ளுப் பாட்டி ( தந்தையின் பாட்டி)

    மாத்ரு வர்க்கம் என்பது

    ஆண்கள்

    மாதா மகர் - தாத்தா (தாயின் தந்தை)

    மாது பிதாமகர் - தாயின் தந்தையின் தந்தை

    மாதுபிரபிதாமஹர் - தாயின் தாத்தாவின் தந்தை

    பெண்கள்

    மாதா மகி - பாட்டி (தாயின் தாயார்)

    மாதுபிதாமகி - தாயின் பாட்டி

    மாதுபிரபிதாமகி - தாயின்

    கொள்ளுப் பாட்டி மேலே கூறிய இந்த 12 பேர் தவிர்த்து ஆண் வாரிசு இல்லாமல் சாந்தி அடைய சிரமப்படும் ஆத்மாக்களான மனைவி, மகன் | மகள் (18 வயதிற்கு மேல்)தந்தையின் சகோதர |சகோதரிகள் (அத்தை, சித்தப்பா) தந்தையின் சகோதரரின் மனைவி (பெரியம்மா / சின்னம்மா) உடன் பிறந்த சகோதர/ சகோதரிகள் ( அண்ணன் / தம்பி) தாயின் சகோதர/ சகோதரிகள் (மாமா, பெரியம்மா, சித்தி) தந்தை, தாத்தா போன்றவர்களின் மூத்த, இளையதார மனைவிகள் போன்றவரின் ஆத்மா சாந்தி அடைய உதவி செய்ய தர்ப்பணம் செய்வது ஒருவரின் கடமை.

    அவர்களை வசூ, ருத்ர, ஆதித்ய ரூபத்தில் வழிபட்டு பித்ரு பூஜை செய்ய வேண்டும்.

    பிதுர் தோஷமும் பரிகாரங்களும்

    ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒரு ராசிக்குள் பிரவேசிக்கிறார். ராசி சக்கரத்தின் தென் மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், பித்ருக்கள் விடுதலையாகி தங்கள் உறவுகளை நாடி வீடுகளுக்கு வருகின்றனர். அந்த புரட்டாசி மாதத்தில் 3 தலைமுறை தந்தை வழி, தாய் வழி முன்னோர்களையும் ஆத்மார்த்தமாக நினைத்து தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, முன்னோர் ஆத்ம சாந்திக்காக வழிபாடு செய்ய வேண்டும்.

    புரட்டாசி 7-ம் நாள் (24. 9.2022) சனிக்கிழமை சதுர்த்தசி திதி பாவம் நீக்கும் நாளாகும். எதிர்கால தலைமுறைக்கு நன்மை சேர்க்கும் பாக்கியம் மிகுந்த நாளாகும். சதுர்த்தசி திதியும், சனிக்கிழமையும் இணைந்த இந்த நாள் பல வருடங்களாக தீராத, தீர்க்க முடியாத பித்ரு தோஷம் உள்ளவர்கள் மற்றும் துர்மரணம், கொடிய நோயால் இறந்தவர்களுக்கு இந்நாளில் செய்யப்படும் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் உடனடி பலன் தரும்.

    ஸ்ரீ சுப கிருது வருடம் புரட்டாசி 8-ம் தேதி 25.9.2022 ஞாயிற்று கிழமை மகாளய அமாவாசை நாளாகும்.

    பிதுர் வழிபாட்டுக்கு மிகச் சிறப்பு வாய்ந்த நாளான மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை மற்ற எல்லா அமாவாசை நாட்களைக் காட்டிலும் அதிக பலன் தரும். 1 வருட திதி, தர்ப்பணம் செய்த பலனும், முன்னோர் ஆசியும் கிடைக்கும்.

    புரட்டாசி அமாவாசையன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர், முன்னோர்களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு, பூஜை, திதி , தர்ப்பணம் செய்யலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருச்செந்தூர், வேதாரண்யம், திருவையாறு, கொடுமுடி, பவானி கூடுதுறை, தாமிரபரணி போன்ற இடங்களும் , வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பதற்கு சிறப்பானதாக கருதப்படுகிறது. இறந்தநாள், திதி தெரியாதவர்களும், மாதாந்திர அமாவாசையன்று திதி கொடுக்க முடியாதவர்களும் மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும்.

    முறையான பித்ரு பூஜை ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் நிச்சயம் அகற்றி விடும். ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை பரிகாரங்களை செய்பவர்கள், தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் தொடர் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எனவே, மகாளய பட்சம் என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் உரிய வழிபாடு செய்தால் புண்ணிய பலன் தலைமுறைக்கு வந்து சேரும்.

    Next Story
    ×