search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சனிபகவானும் திருமணமும்
    X

    சனிபகவானும் திருமணமும்

    • மனிதர்களின் வாழ்வின் மகத்தான அத்தியாயம் திருமணமாகும்.
    • பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடிப்பதற்குள் பெரும் சங்கடத்தை அனுபவிக்கிறார்கள்.

    மனிதர்களின் வாழ்வின் மகத்தான அத்தியாயம் திருமணமாகும்.

    ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக அவசியமான ஒரு திருப்பமாகவும் ஆனந்தத்தை எதிர்நோக்கும் ஆரம்ப நிகழ்ச்சியாகவும் அமைவது திருமணம். அதனால் கல்யாணம் என்று சாதாரணமாகச் சொல்லாமல் "திருமணம்" என்று சொல்கிறார்கள். கடவுள்களின் திருமணத்தைக் கூட திருக்கல்யாணம் என்று தான் அழைக்கிறோம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்வு மனிதர்களுக்கு விசேஷம் நிறைந்ததாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். சுமார் 30-40 வருடங்களுக்கு முன்பு இரண்டு குடும்ப பெரியவர்கள் கூடிப் பேசினால் ஒரு திருமணம் நிச்சயமாகும். ஒரு திருமண வீட்டில் இரண்டு, மூன்று திருமணம் முடிவாகும். அதே போல் ஒரே ஒரு வரன் தான் பார்ப்பார்கள் அந்த வரனே திருமணமாக முடிந்துவிடும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரன் பார்த்தப் பிறகு திருமணம் நடக்கும். அந்த அளவிற்கு கள்ளம், கபடம், சூது இல்லாமல் மனிதர்கள் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணம் மிக சாதாரண நிகழ்வாக இருந்தது. ஒரு குடும்பத்தில் 5,6 பிள்ளைகளுக்கு குறையாமல் இருப்பார்கள். திருமணத் தடை என்றால் என்னவென்றே தெரியாது. இந்த கலியுகத்தில் வீட்டுக்கு ஒன்று அதிகபட்சம் இரண்டு பிள்ளைகளே உள்ளனர்.

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடிப்பதற்குள் பெரும் சங்கடத்தை அனுபவிக்கிறார்கள்.குறைந்தது நூறு ஜாதகம் பார்க்கிறார்கள். பல மேட்ரிமோனிகள் மூலம் உலகம் முழுவதும் வரன் தேடுகிறார்கள்.

    திருமணம் முடிந்தபாடு இல்லை. பொதுவாக இந்த நூற்றாண்டில் ஆண்களுக்கு சளைக்காமல் பெண்களும் சகல துறைகளிலும் பிரகாசிக்கிறார்கள். ஆண்களும், பெண்களும் தங்கள் தகுதிக்கு தகுந்த வரன் தேடியும் திருமணத் தடையை அதிகரிக்கிறார்கள். நல்ல வாழ்க்கைத் துணையே ஒருவருக்கு வரப்பிரசாதம். ஆணோ, பெண்ணோ வாழ்க்கை துணையே வாழ்நாளின் அச்சாணி. ஒரு மனிதனின் கர்ம வினைக்கு ஏற்ப வாழ்நாளை சுப / அசுபமாக மாற்றுபவர் சனி பகவான். கோட்சாரம், ஜனன கால ஜாதக ரீதியாக திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 5, 7, 8, 12-ம் இடத்தில் அமரும் போது திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகிறார். நம்மில் பலர் செவ்வாய், ராகு/கேது தோஷத்தால் மட்டுமே திருமணம் தடைபடுகிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்கள். சனி பகவானாலும் திருமணம் தாமதமாகிறது என்பதே நிதர்சனமான உண்மை.திருமணத்திற்கு முன் / பின் மனித வாழ்வை இயக்கும் மகத்தான சக்தி சனி பகவானகும். திருமணம் தொடர்பான பாவகங்களில் அமரும் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள்.

    ஜென்ம லக்னத்தில் அமர்ந்த சனி பகவானால் தோற்றப் பொலிவு குறைவாக இருக்கும். சிந்தித்து செயல்படும் தன்மை இன்றி சோம்பல் மிகுதியாக இருக்கும். 7-ம் இடத்தை பார்ப்பதனால் காலம் தாழ்ந்தே திருமணம் நடைபெறும். அத்துடன் தன் திறமைக்கும் தகுதிக்கும் சம்பந்தம் இல்லாமல் மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு இருப்பதால் எதிர்பார்ப்பிற்கு இணையான வரன் கிடைக்காது.

    களத்தரத்திற்கு ஆரோக்கிய குறைபாடு இருக்கும். இதனால் திருமணத்திற்கு பிறகு தம்பதியரிடம் ஒற்றுமைக் குறைவு அதிகமாகும். லக்னத்தில் நிற்கும் சனியின் பார்வை 3-ம் இடத்திற்கு இருப்பதனால் மனோதிடம் மிகக் குறைவாக இருக்கும். 10-ம் இடத்தை பார்ப்பதால் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவு செய்ய தேவையான பொருளாதாரம் இன்றி கஷ்ட ஜீவனமாக இருக்கும்.

    ஜென்ம லக்னத்திற்கு இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் குடும்பம் அமைவதையே தடை செய்வார் அல்லது காலதாமதமான திருமணம் அல்லது திருமணத்திற்கு பின் கருத்து வேறுபாடு உருவாகும். வாக்கு ஸ்தானத்தில் சனி என்பதால் கடுமையான வார்த்தைப் பிரயோகமே தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டை மிகுதிப்படுத்தும். ஆரோக்கிய சீர்கேட்டிற்கான பல்வேறு தீய பழக்கங்கள் உடையவராக இருப்பார். சனி 3-ம் பார்வையாக 4-ம் இடத்தை பார்ப்பதால் இல்லற சுகத்தில் தடை ஏற்படுத்துவார். 8-ம் இடத்தை பார்ப்பதால் தம்பதியரிடையே வம்பு வழக்கு அந்நியோன்யம் இன்மை மிகும். 11-ம் இடத்தை பார்ப்பதால் களத்திரத்தின் மூலம் ஆதாய பங்கம் ஏற்படுத்துவார். பலருக்கு இரண்டாம் தரமான (தாரம்) குடும்பத்தால் நரக வேதனையை தரும் சம்பவங்களை நிகழ்த்துவார்.

    ஜென்ம லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் அமரும் சனிபகவான் பூர்வ புண்ணிய பாக்கியத்தை தடை செய்வார். குழந்தை பாக்கியத்தை தாமதப்படுத்துவார் அல்லது குழந்தைகளால் மன வேதனையைத் தருவார். பலருக்கு புத்திர சோகத்தால் வாழ்நாளே வெறுமையாரும். 5-ம் இடத்தில் அமர்ந்த சனிபகவான் 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் காலதாமத திருமணம் நடக்கும். அல்லது தம்பதிகளிடம் புரிதல் குறைவுபடும். 11ம் இடத்தைப் பார்ப்பதால் தன வரவு கட்டுப்படுத்தப்படும். திருமண வாழ்வில் மூத்த சகோதர, சகோதரிகளின் தலையீடு மிகுதியாக இருக்கும். 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தை பார்பதால் திருமணத்தைடையை சந்திப்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் குடும்ப உறுப்பினர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதிப்பார்கள்.

    ஜென்ம லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் அமரும் சனி பகவான் குறைந்த பட்சம் 32 வயது வரை திருமணத்தை தடை செய்வார். வயது வித்தியாசமான களத்திரம் அல்லது வயதான களத்திரம் அல்லது முதுமையான தோற்றமும், தோற்ற பொலிவு அற்ற வரனையும் தருவார். சிலருக்கு காதல் கலப்பு திருமணத்தை தருவார். 9-ம் இடத்தை பார்பதால் தன் குலத்தவரால் / பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படாத அங்கீகரிக்கப்படாத திருமணமாகவும் இருக்கும். பாக்கியஸ்தான வலிமையை குறைக்கும். சனியின் பார்வை லக்னத்திற்கு இருப்பதால் ஜாதகருக்கு சுய முடிவு எடுக்கும் தன்மை குறையும். ஜாதகரின் செயல்பாடுகள் சீராக இருக்காது. 4ம் இடத்தை பார்ப்பதால் ஒழுக்க குறைவால் வியாதிகளால் சுகம், ஆரோக்கியம் கெடும்.

    ஜென்ம லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் அமர்ந்த சனி பகவான் நித்ய கண்டம் பூரண ஆயுளைத் தருவார். கடக, சிம்ம லக்னத்தவர்கள் திருமணம் நடந்ததையே கதையாக சொல்வார்கள். திருமணத்திற்கு பிறகு தினமும் வம்பு, வழக்கு சச்சரவு அதிகபட்சம் விவாகரத்து வரை கொண்டு செல்வார். 10-ம் இடத்தை பார்ப்பதால் சிறிய வருமானத்திற்கு அதிகமாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். 2-ம் இடத்தை பார்ப்பதால் குழப்பமான குடும்ப சூழ்நிலை, பொருளாதார பற்றாக்குறை, வாயினால் வம்பை வரவழைத்துக் கொள்ளுதல் போன்றவை இருக்கும். 5-ம் இடத்தை பார்ப்பதால் குழந்தை பாக்கிய குறைவு , புத்திர சோகம், புத்திரர்களால் ஆதாயமின்மை இருக்கும்.

    ஜென்ம லக்னத்திற்கு பனிரெண்டாம் இடத்தில் அமர்ந்த சனி பகவான் இல்லற இன்பத்தை குறைப்பார். கேதுவுடன் சேர்ந்த சனி பகவான் இல்லற இன்பத்திற்கு தகுதி இல்லாதவராக்குவார். துறவு மனப்பான்மை மேலோங்கும். 2-ம் இடத்தை பார்ப்பதால் சமுதாயத்திற்கு தெரியாத ரகசியமான குடும்ப வாழ்வை வாழ வைக்கும். 6-ம் இடத்தை பார்ப்பதால் குடும்ப உறுப்பினர்களால் பொருள் இழப்பு மிகுதியாக இருக்கும். 9-ம் இடத்தை பார்ப்பதால் (7-க்கு 3 பாவத் பாவம் ) ரகசிய குடும்பத்திற்கு அடங்கி அவமானப்பட்டு தலைமறைவாகும் நிலையும் ஏற்படும். 12-ல் சனி இருப்பவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் நிலையே அதிகம்.

    வெளிநாட்டில் வாழ்பவர்களாக இருப்பார்கள் அல்லது சிலர் சிறையிலும் வாழ்க்கையை கழிக்க நேரலாம். இவர்கள் சிறிது காலமாவது தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள்.

    மேலே கூறிய 1, 2,5,7,8,12-ல் அமர்ந்த சனி பகவானுக்கு லக்ன சுபர், குருவின் சம்பந்தமோ இருந்தால் பாதிப்பு இருக்காது. மேலும் அவருடன் இணைந்த கிரகம், நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும் பலன்கள் மாறுபடும். எனவே திருமணப் பொருத்தம் பார்க்கும் போது சனி நின்ற நிலைக்கு மிகவும் முக்கியத்துவம் தர வேண்டும். சனி தோஷத்தை சரி செய்யும் அமைப்பு உடைய ஜாதகத்தை இணைக்க வேண்டும்.

    மேலும் இது போல் பாதிப்பு உடையவர்களுக்கு ஏழரைச் சனியின் காலத்தில் அல்லது கோட்சார சனி ஜனன கால சுக்கிரனை தொடர்பு கொள்ளும் காலத்தில் திருமணத் தடை அகன்று திருமணம் நடைபெறும்.

    இது ஒருபுறம் இருக்க ஏழரை, அஷ்டமச் சனி காலத்தில் திருமணம் செய்யலாமா? திருமணம் நடக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

    நடை முறை வாழ்க்கையில் ஏழரை, அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணம் நடப்பதையும் பார்த்திருக்கிறோம். இந்த காலகட்டத்தில் திருமணம் செய்து சீரும் சிறப்புமாக வாழ்பவர்களையும் பார்கிறோம். சிக்கி சின்னா பின்ன மானவர்களையும் காண்கிறோம்.

    ஏழரைச் சனியும் திருமணமும்

    ஏழரை சனிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை .பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு சுப நிகழ்வுகள் இந்த காலகட்டத்தில் எளிமையாக நடந்து விடும். ஏழரை சனியின் காலத்தில் தான் ஆணிற்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம், உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைப்பார்?

    பெண்களுக்கு கணவர், புகந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார்.

    சுய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தசா புக்தி சாதகமாக இருந்தால் ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது. தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையாத காரணத்தால் ஏழரை சனியின் மேல் பழிபோடுகிறார்கள். அல்லது சுயவிருப்பு வெறுப்பு காரணமாக ஏழரை சனி வந்தால் திருமணம் செய்யக் கூடாது என 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள். பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு கூட ஏழரை சனியின் காலத்தில் திருமணம் தானாக நடந்து விடும்.

    அஷ்டமச் சனியும் திருமணமும்

    ராசிக்கு எட்டாம் இடத்தில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை இரண்டாமிடமான தனம்,வாக்கு, குடும்பஸ்தானத்திற்கு இருப்பதால் வாய் கொடுத்து மாட்டிக் கொள்பவரைப் போல தேவையற்ற வம்புக்கு சென்று தானே அதில் மாட்டிக் கொள்வர். அதாவது வம்பு, வழக்கு, தகராறில் ஈடுபடுதல், பிறர் விஷயங்களில் கலகம் செய்ய நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தனக்கு ஏற்பட வேண்டிய இன்பமான நிலையை தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.மேலும் ஜனன கால ஜாதக ரீதியாக சாதகமற்ற தசை புத்தி நடப்பவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத இடர்களை சந்திக்க நேரும் என்பதால் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்

    எனவே ஏழரை சனியின் காலத்தில் முயற்ச்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும்.ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

    ஜனன கால ஜாதக ரீதியான சனி பகவானால் திருமணத் தடை இருப்பவர்கள், சரியான திருமண வாழ்வு அமையாமல் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் சனிக்கிழமை திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட திருமணத் தடை அகலும். திரு மணத்திற்குப் பிறகு இல்லறம் நல்லறமாகும்.

    Next Story
    ×