search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருமணம்-குழந்தைபேறு கிட்டும்: ஆடிபூர மகிமையும் வழிபாடும்
    X

    திருமணம்-குழந்தைபேறு கிட்டும்: ஆடிபூர மகிமையும் வழிபாடும்

    • நமது எல்லாக்குறைகளுக்கும் ஆடிமாதம் வரும் பூரத்தில் வழிபட்டால் நிச்சயம் நிவர்த்தி கிடைக்கும்.
    • ஆடிப்பூரத்தை சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் கொண்டாடுகின்றனர்.

    ஆனந்த வாழ்வு என்றால் என்ன? உடல் ஆரோக்கியம், உள் அமைதி, செல்வ வளம், திருமணம், நல்ல புத்திர பாக்கியம், பிணியில்லா வாழ்வு இவை அத்தனையும் கிடைத்தால் அதுவே ஆனந்த வாழ்வு எனலாம். ஆனால் இவை அனைத்தும் ஒருங்கே கிடைக்கப்பெற்றவர்கள் மிகக் குறைவுதான்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். இந்த குறைகள் நீங்கி நிறைவான வாழ்வு பெற என்ன வழி என்று ஏங்கும் நெஞ்சங்களுக்கு நல்ல செய்தி இதோ!

    ஆம், நமது எல்லாக்குறைகளுக்கும் ஆடிமாதம் வரும் பூரத்தில் வழிபட்டால் நிச்சயம் நிவர்த்தி கிடைக்கும். ஆடிப் பூர மகிமையை பற்றி காண்போம்..

    ஆடி பூரம் என்றால் என்ன?

    உலகில் மனிதர்கள் உடலால், மனதால் அடையும் துன்பங்களை சரி செய்து, இன்பமாக வாழச் செய்வதற்கு உலகத்தை இயக்கும் சக்திவடிவமான "உலகன்னை" இவ்வுலகிலே தோன்றிய நன்நாள் ஆடிப்பூரம் என்று புராணங்கள் கூறுகின்றன.

    அதே நாளில்தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தாக கூறப்படுகின்றது. எனவேதான் ஆடிப்பூரத்தை சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் கொண்டாடுகின்றனர்.

    இந்த நன்நாளில் அம்பிகை உலகிற்கு விஜயம் செய்து மனிதர்களுக்கு அருள் புரிவாள் என்று நமது வேத சாஸ்திரம் கூறுகின்றது.

    சித்தர்கள், முனிவர்கள் இந்த நாளில்தான் உலக சேஷமத்திற்காக தங்களது தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் கூறுகின்றது.

    பூரம் நட்சத்திர மகிமை

    பூரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரையும் நேசிப்பார்கள்.

    சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதன்.எனவே தான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தியானித்து அவரையே மணந்தாள்.

    சுக்கிரன் அருள் இருந்தால்தான் மனதிற்குப்பிடித்தவரை கைபிடிக்க முடியும். சுக்கிரன் அருள் இருந்தால்தான் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழமுடியும். எனவேதான் பூர நட்சத்திரத்தில் விரதம் இருந்தால் திருமணவரம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர்.

    அதுவும் ஆண்டாள், உமாதேவி அவதரித்த ஆடிப்பூரத்தில் விரதம், பிரார்த்தனை, கோவில் வழிபாடு செய்தால் அன்னையின் அருள் மழையில் நாம் நிச்சயம் நனையலாம். சகல சவுபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    பெருமானையே கணவனாக நினைத்து மாலையை சூடிக்கொடுத்த சுடர்கொடியாளை ஆடிப்பூர நன்னாளில் தரிசனம் செய்தால் திருமணவரம் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை, புத்திர பாக்கியம் கிடைக்கும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை கிடைக்கும்.

    வழிபடும் முறை:

    அம்பிகை அவதார நாள் மற்றும் அம்பிகைக்கு வளைகாப்பு நடைபெறும் உன்னத நாள்தான் ஆடிப்பூரம். அன்றைய தினம் காலையில் குளித்துவிட்டு சுத்தமான உடை அணிந்து 6 மணியளவில் பூஜை பணிகளை தொடங்க வேண்டும்.

    வீட்டில் உள்ள அம்பிகை படம் ,எந்த அம்பிகையானாலும் சரி.. அந்த அம்பிகை படத்தை நன்கு சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் சாற்றி ஒரு மணப்பலகையில் கோலமிட்டு அதில் கிழக்குமுகமாக வைக்கவும்.

    அம்பிகைக்கு செந்நிறமலர்கள் உகந்தவை. எனவே அரளி பூ, ரோஜா பூ, தாமரை மலரால் அலங்கரிக்கலாம்.பின் கண்ணாடி வளையலை மாலையாக கோர்த்து அம்பிகை படத்தில் சாத்தவும். அப்படி சாற்றும் பொழுது ஒற்றைப்படையில் சாற்றுங்கள். அதாவது 27 வளையல்கள், 29 வளையல்கள், 31 வளையல்கள் என இருக்க வேண்டும்.

    பிரசாதமாக வளைகாப்பு விழாவில் போடும் கலவைசாதமாக 5 வகைகள், 7வகை, 9 வகை,என மூன்று வகை சாதமாக செய்து படைக்கலாம். அப்படி அதிகமாக பிரசாதம் செய்ய முடியாதவர்கள் சர்க்கரைப் பொங்கல் மட்டும் பிரசாதமாக படைக்கலாம்.

    மஞ்சள், குங்குமம், சந்தனம், வெற்றிலைபாக்கு, தேங்காய், பழம் வைக்கவும். விளக்கேற்றி வைத்து உங்களுக்கு தெரிந்த அம்பாள் சுலோகங்கள், மந்திரங்களை உள்ளன்புடன் உச்சரிக்கவும். இதோ மிக எளிமையான மந்திரம்..

    "ஓம் சக்தி

    பரா சக்தி

    ஜெகன் மாதா

    ராஜ ராஜேஸ்வரி சரணம்"

    என்ற மந்திரத்தை ஆறுமுறைகள் உச்சரிக்கவும். பின் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து தீபாராதனை காட்டி வழிபடவும். அதன்பின்னர் மணப்பலகையில் உள்ள அம்பிகை படத்தை பக்தியுடன் எடுத்து பூஜையறையில் மாட்டவும்.

    பூஜை முடிந்தவுடன் வளையல்களை கைகளில் போட்டு புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் புத்திரபாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்யவும். திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் அமையட்டும் என்று பிரார்த்திக்கவும்.


    பி.கிருஷ்ணன் பாலாஜி

    குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தால் அந்த பெண்ணை அந்த மணையில் கிழக்கு முகமாக அமரச்செய்து நலங்கு என்ற சம்பிரதாய முறையில் குங்குமம், மஞ்சள் இட்டு தேங்காய் வெற்றிலைபாக்கு, பழம், பெண்ணிற்கு கொடுக்கவும். அதற்கு முன்பாக படத்தில் உள்ள வளையலை பெண்ணிற்கு கையில் போட்டு விடவும்.

    பின்னர் தேங்காய் பழத்தை அந்த பெண் தனது சேலை முந்தானையில் வைத்து அம்மனைப் பார்த்து நின்று, "இந்த மடி நிறைந்தது போல் எனக்கு புத்திரபாக்கியம் கொடுக்க வேண்டும். அடுத்த வருடத்திற்குள் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்" என்று பிரார்த்தனை செய்யவும். இது புத்திரபாக்கியத்திற்கான பிரார்த்தனை.

    திருமணம் ஆகவேண்டுமெனில் பூஜை செய்துவிட்டு அம்பிகை முன்பாக அமர்ந்து கொண்டு பெண்ணாக இருந்தால் எனக்கு நல்ல கணவன் அமையவேண்டும் என்றும் ஆணாக இருந்தால் எனக்கு விரைவில் நல்ல பெண் அமைய வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யவும்.

    கணவன் மனைவி பிரிந்திருந்தாலோ, கருத்துவேறுபாடுகள் இருந்தாலோ, மேற்கூறிய பூஜை செய்து அம்பிகையிடம் உள்ளம் உருகி பிரார்த்தனை செய்யவும். தம்பதியர் சேர்ந்து வாழ கருணை புரிதாயே என்று பிரார்த்தனை செய்யவும். பின்னர் பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்களுக்கும், அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுக்கவும்.

    காலையில் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இந்த பூஜையை செய்யவும். நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்கள் அன்றைய தினம் பழம் மட்டும் சாப்பிடலாம். சுகர், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பலவீனமானவர்கள் பூஜை முடித்து விட்டு சாப்பிடலாம் தவறில்லை.

    ஆடிப்பூரத்தன்று கோவில் வழிபாடு:

    ஆடிப் பூரத்தன்று எந்த அம்பிகை கோவிலுக்கும் செல்லலாம். உங்கள் வீட்டின் அருகிலுள்ள அம்பிகை கோவிலுக்கு சென்று கண்ணாடி வளையல்கள் இரண்டு டஜன் மூன்று டஜன் வாங்கி கொடுங்கள். அதனை அம்பிகையின் பூஜையில் வைத்து வாங்கி அதனை சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுங்கள். முடியாதவர்களுக்கு உங்கள் சக்திக்கு ஏற்ப அன்னதானம் செய்யுங்கள்.

    பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர வழிபாடு

    ஆடி பூர தினத்தில் பூமா தேவியே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மணந்து அவருடன் ஒன்றிணைந்தவர். எனவே இந்த தினத்தில் திருவரங்கம் கோவில் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சென்று பெருமாள், ஆண்டாளை வழிபட்டு வந்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்ந்து வாழ வழி பிறக்கும். இந்தக் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டு அருகிலுள்ள அம்பிகை கோவில் சென்று மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே போதும்.

    ஆடிப்பூரமும் அம்மனுக்கு வளைகாப்பும்

    நமது புராணங்கள் கூற்றின்படி பங்குனி மாத உத்திரத்தில் அம்மனுக்கு திருமண உற்சவம் நடத்துவார்கள். அதன்படி ஆடிமாதம் ஐந்தாவது மாதமாகும். பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு ஐந்தாவது மாதம், ஏழாவது மாதம், அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு நடத்துவது வழக்கம்.

    அந்த வகையில் பங்குனி மாதம் உத்திரத்தில் அம்பிகைக்கு திருமணம் நடத்தினால் ஆடி மாத பூரத்தில் கருவுற்ற ஐந்தாவது மாதம் என்ற ஐதீகத்தில் ஆடி பூரத்தில் எல்லா அம்பிகை ஆலயங்களிலும் வளையல் காப்பு விழா கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் தவிர திருக்கழுக்குன்றம், திருநெல்வேலி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல ஆலயங்களில் ஆடிபூரம் விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த வருடம் ஆடி பூரம் நாள்-நேரம்

    நாளை ஜூலை மாதம் 22-ந் தேதி, ஆடி மாதம் 6-ந் தேதி, சனிக்கிழமை ஆடிபூரமாகும் (ஆடிபூரம் நட்சத்திரம் ஆரம்பமாவது ஆடி 5, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.59 மணி முதல் முடிவு சனிக்கிழமை ஆடி 6, மாலை 4.58 மணி வரை)

    பூஜைக்கு உகந்த நேரம்

    நம் இல்லத்தில் மங்கலகரமான செயல்கள் திரும்ப, திரும்ப நடக்க வேண்டுமெனில் குளிகை காலத்தில் பூஜை செய்ய வேண்டும்.எனவே சனிக்கிழமை ஆடி-6-ந் தேதி காலை 6 மணி முதல் 7.41 மணிவரையிலான குளிகை காலத்தில் வீட்டில் பூஜை செய்ய உகந்த நேரமாகும். விரதம் நிறைவு செய்வது மாலை 5 மணிக்கு நிறைவு செய்யவும்.

    நல்ல வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும் பொழுது அதனை நாம் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனித குலத்திற்கு வேண்டும் வரங்களை அள்ளிக் கொடுக்க பூமாதேவியே அம்பிகை வடிவில் அவதரித்த ஆடிப் பூர நாளில் நாம் வீட்டில் பூஜை செய்தோ, அம்பிகை கோவிலுக்கு சென்றோ வழிபட்டு நமக்கு வேண்டிய சகல சம்பத்துக்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    நாம் பிரார்த்தனை செய்யும் பொழுது நமது சித்தர்கள் அருளிய முத்திரையுடன் பிரார்த்தனை செய்தால் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும். அந்த வகையில் ஆடிப்பூரம் அன்று வீட்டில் பூஜை நிறைவு செய்ததும் குபேர முத்திரையில் ஒரு ஐந்து நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.நன்மை பயக்கும்.

    பஞ்சமி திதியும் ஆடி பூரமும்

    இந்த வருடம் ஆடி பூரம் அன்றுதான் பஞ்சமி திதியும் வருகிறது. இது மிகவும் விசேசமாக கருதப்படுகிறது. எனவே இந்த ஆடி பூரத்தில் வராகி அம்மனையும் வழிபட்டு வளம் பெறலாம்.

    Next Story
    ×