என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
கண்ணன் காட்டிய வழி!
- சூரியாஸ்தமனம் ஆகிவிட்டால் போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது அக்கால மரபு.
- அர்ச்சுனன் வேறுவழி தெரியாமல் தன் அண்ணன் தர்மபுத்திரரை நோக்கி வில்லை வளைக்கலானான்.
பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே மகாபாரதப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம். பாண்டவர் அணியில் உடன் இருந்து அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான் பரந்தாமன் கண்ணன்.
தன் பக்தையான பாஞ்சாலியின் வேண்டுகோளின்படி பாண்டவர்களைக் காப்பதே கண்ணனின் குறிக்கோளாக இருந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாண்டவர்களுக்கு வந்த இடையூறுகளை ஒவ்வொரு விதத்தில் நீக்கிக் கொண்டிருந்தான்.
அன்றைய போர் முடிந்துவிட்டது. சூரியாஸ்தமனம் ஆகிவிட்டால் போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது அக்கால மரபு. அதனால் இரு தரப்பிலும் போர் நிறுத்தப்பட்டுவிட்டது. இருள் சூழத் தொடங்கிவிட்டது.
பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனனைத் தவிர தருமன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய மற்ற நால்வரும் போர்க்களத்தில் இருந்து தங்கள் பாசறைக்கு ஒவ்வொருவராகத் திரும்பி விட்டார்கள்.
ஆனால், எங்கே இன்னும் அர்ச்சுனனைக் காணோம்? கட்டாயம் இன்று கர்ணனைக் கொன்றுவிட்டு வருகிறேன் என்று வீர சபதம் செய்துவிட்டுப் போனவன் அல்லவா அவன்?
பஞ்ச பாண்டவரில் மூத்தவரான தர்மபுத்திரர், தம்பி அர்ச்சுனன் வரவுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். கர்ணனை இன்றேனும் அவன் கொன்றிருக்கமாட்டானா என்று செய்தியறிய அவரிடம் பேராவல்.
`பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவி இரண்டும் கலந்தே குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல்முடிப்பேன் யான், அது செய்யுமுன்னே முடியேன்!' என்று சபதமிட்டிருந்த தேவி பாஞ்சாலி, தலைவிரிகோலமாக அர்ச்சுனன் வரவை எதிர்பார்த்துப் பாசறையின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருள் மயங்கும் அந்த அந்தி நேரத்தில் தொலைதூரத்தில் நிழலோவியம் போல அர்ச்சுனன் மெல்ல நடந்துவருவது தெரிந்தது. அதைக் கண்டு துள்ளி எழுந்தார் தர்மபுத்திரர்.
`என் அன்புத் தம்பி அர்ச்சுனா! இன்றேனும் கர்ணனைக் கொன்றாயா?' மிகுந்த ஆவலுடன் கேட்டார்.
`நாளை கொன்றுவிடுவேன் அண்ணா!'
- அருகே நெருங்கிவந்த அர்ச்சுனன் உதடுகளில் இருந்து கொஞ்சம் தயக்கத்துடன் வந்தது பதில்.
தர்மபுத்திரருக்குக் கடும்கோபம். என்ன இது? இன்னும் கொல்லவில்லையா கர்ணனை? துரியோதனனை நெருங்க ஒட்டாமல் அவனுக்குக் கவசம் போல் இருப்பவன் அல்லவா மாவீரனான கர்ணன்?
கர்ணனைக் கொன்றால் தானே அடுத்து துரியோதனனைக் கொல்ல முடியும்? அப்போதுதானே போர் முடியும்? அப்போதுதானே பாஞ்சாலியின் கை அவளது அவிழ்ந்த கூந்தலை முடியும்? போர் நீண்டுகொண்டே போகிறதே?
கர்ணனைக் கொல்வதில் ஏன் இந்தத் தாமதம்? தம்பி அர்ச்சுனன் வீரம் என்பது இவ்வளவு தானா? ஒவ்வொரு நாளும் இன்று கர்ணனைக் கொல்வேன் என்று சொல்லிவிட்டுத் தான் போருக்குப் புறப்பட்டுச் செல்கிறான். ஆனால் ஒவ்வொரு நாளும் கர்ணனைக் கொல்லாமலே திரும்புகிறான்!
எல்லை மீறிய கோபத்தால் தர்மபுத்திரரின் நாவில் இருந்து விபரீதமான ஒரு வாக்கியம் குதித்துக் கொண்டு புறப்பட்டது.
`அர்ச்சுனா! இன்றுமா நீ கர்ணனைக் கொல்லவில்லை? உன் கையில் உள்ள காண்டீபம் என்ற வில் - அந்த வில் என்ன வில்லா இல்லை புல்லா? நாணமில்லாமல் அதற்கு நாண் வேறு ஒரு கேடா?'
அடடா! தர்மபுத்திரர் நாவில் அன்று சனி புகுந்துகொண்டதோ? விவரம் தெரிந்த அவரே இப்படிக் கேட்டுவிட்டாரே!
அர்ச்சுனன் தன் வில்லைப் பழிப்பவர்களை உடனே கொல்வது என்று ஒரு `வாழ்நாள் சபதம்' செய்திருக்கிறானே? அவன் அப்படிச் சபதம் செய்திருக்கும் செய்தி தர்மபுத்திரர் உள்பட ஏனைய பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் அறிந்தது தானே?
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழி உண்மையாகி விட்டதே? கர்ணன் இன்னும் கொல்லப்படவில்லை என்ற ஆத்திரத்தில் அண்ணாவே சொந்தத் தம்பியின் வில்லைப் பழிக்கலாமா?
சாந்த ஸ்வரூபியான தர்மபுத்திரர் இன்று அவசரத்தில் தன் நிலை தடுமாறியது ஏன்? விதி விளையாடுகிறதா?
இனி என்ன நடக்கும்? பீமன், நகுலன், சகாதேவன் இவர்களோடு பாஞ்சாலியும் தவித்துக் கொண்டு காத்திருந்தாள்.
தன் வில்லான காண்டீபம் பழிக்கப் பட்டதைக் கேட்டு விக்கித்துப் போன அர்ச்சுனன் மெல்ல தர்மபுத்திரரிடம் வினவினான்:
`அண்ணா! நான் என்ன செய்வது இப்போது? நீங்கள் தான் அறிவுறுத்த வேண்டும்! என் சபதப்படி என் வில்லைப் பழிப்பவர்கள் யாராயினும் நான் கொல்ல வேண்டுமே? இப்போது நீங்கள் அல்லவா என் வில்லைப் பழித்துவிட்டீர்கள்?'
தர்மபுத்திரர் திகைப்புடன் நாக்கைக் கடித்துக் கொண்டார். சிறிதுநேரம் என்ன செய்வதென்றறியாமல் யோசித்தார்.
அவர் தர்மத்தின் வடிவமல்லவா? பின் ஒரு தெளிவோடு கம்பீரமாகச் சொல்லலானார்:
`பார்த்தனே! என்ன செய்வேன்? ஆத்திரத்தில் நிலைமறந்து வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன். நடந்தது நடந்துவிட்டது. நாவில் இருந்து புறப்பட்ட வார்த்தைகளைத் திரும்பப் பெற இயலாது. நல்லது. இன்றே இப்போதே உன் சபதப்படி நீ என்னைக் கொன்றுவிடு. உன் சபதம் நிறைவேறுவது மிக முக்கியம். ஆனால் மறக்காமல் நாளையேனும் கர்ணனைக் கொன்றுவிடு!' என்றார்.
அர்ச்சுனன் வேறுவழி தெரியாமல் தன் அண்ணன் தர்மபுத்திரரை நோக்கி வில்லை வளைக்கலானான்.
பாஞ்சாலி திகைத்தாள். அவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.
என்ன நடக்கிறது இங்கே? விரோதிகளை அழிக்கவேண்டிய அம்பு சொந்த அண்ணனையே அழிப்பதா? அன்பு செலுத்த வேண்டிய இடத்தில் அம்பு செலுத்துவதா?
அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கிருஷ்ண பக்தி. துகில் உரியப்பட்ட மிகவும் இக்கட்டான தருணத்தில் அவள் மானத்தைக் காப்பாற்றியது அவளது கிருஷ்ண பக்தி தானே?
அவளுக்கு எந்தத் துயரம் நேர்ந்தாலும் உடனே உதவிக்கு வரக் கூடியவன் கண்ணன் ஒருவன் தானே? அவனை அழைக்க முடிவு செய்தாள்.
`கண்ணா! கண்ணா!' என்று கதறலானாள்.
*துவாரகைக் கண்ணன் ஓடோடி வந்தான். பக்தையின் குரலுக்கு ஓடி வருவதை விடவும் கடவுளுக்கு வேறென்ன வேலை?
எல்லாம் தெரிந்த கண்ணன் ஏதும் தெரியாததுபோல் என்ன நடந்ததென்று கேட்டான். நேர்ந்துள்ள சங்கடமான நிலைமையை, பாஞ்சாலி, விழிகளில் பெருகிய கண்ணீருடன் விவரித்தாள்.
'அவ்வளவுதானே? அர்ச்சுனன் யுதிஷ்டிரனைக் கொல்லட்டும்!' என்றான் குறும்பாய்க் கண்சிமிட்டிக் கொண்டே கண்ணன்.
பாஞ்சாலி, `இதுதானா நீ என்னை ரட்சிக்கிற லட்சணம்? உனக்குத் தெய்வமென்று ஏன் பெயர் வைத்தார்கள்? என் கணவரின் உயிரைக் காக்காமல் அப்புறம் நீ என்ன காக்கும் கடவுள்?' என்று சீறினாள்.
கடவுளிடம் கோபம் கொள்ளவும் கூட பக்தனுக்கு உரிமை உண்டல்லவா?
கண்ணன் புல்லாங்குழலைக் கையில் தட்டிக்கொண்டு தன் முத்துப் பற்களைக் காட்டிக் கலகலவென்று நகைத்தான்.
`பொறு பாஞ்சாலி பொறு! அர்ச்சுனன் தர்மபுத்திரரைக் கொல்லட்டும். ஆனால் நிஜத்தில் கொல்ல வேண்டாம். சாஸ்திரப்படிக் கொல்லட்டும். அப்படிக் கொன்றால் அவன் சபதம் நிறைவேறியதாகவும் ஆகும். உண்மையில் யுதிஷ்டிரர் இறக்கவும் தேவையில்லை!'
கண்ணனின் பேச்சைக் கேட்டு, இப்போது அர்ச்சுனன் உள்ளிட்ட அனைவரும் திகைத்தார்கள்.
`அதெப்படி சாஸ்திரப்படிக் கொல்வது?'
அர்ச்சுனன் வியப்போடு வினவினான். கண்ணன் சொல்லலானான்:
`அர்ச்சுனா! நம்மிலும் வயதில் மூத்தவர்களையும் முன்னோடிகளையும் காலமானவர்களையும் ஏக வசனத்தில் தாறுமாறாகப் பேசினால் அது அவர்களைக் கொன்றதற்குச் சமானம். உன்னிலும் வயதில் மூத்த யுதிஷ்டிரரை ஏகவசனத்தில் மரியாதைக் குறைவாக நீ பேசுவாயாக. அதை யுதிஷ்டிரரின் காதுகள் கேட்கட்டும்.
அப்படியானால் சாஸ்திரப்படி நீ அவரைக் கொன்றதாக ஆகும். உன் வில்லைப் பழித்தவர்களைக் கொல்வது என்ற உன் சபதம் நிறைவேறியதாகக் கொள்ளப்படும்! யுதிஷ்டிரன் உயிர் துறக்காமலிருக்க இதுதான் ஒரே வழி!'
கண்ணன் சொன்ன இந்த யுக்தி பஞ்ச பாண்டவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அர்ச்சுனன் தன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, தான் எப்போதும் பெரும் மரியாதை செலுத்தும் தன் அண்ணா யுதிஷ்டிரரை ஏக வசனத்தில் பேசித் திட்டலானான்.
தன் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு அர்ச்சுனன் தன்னைத் திட்டும் திட்டுதல்களை யுதிஷ்டிரர் மனமுவந்து ரசிக்கலானார். சற்றுநேரம் திட்டி சாஸ்திரப்படி கொலைக்குச் சமமான செயலைச் செய்த பிறகு அர்ச்சுனனிடம் கடும் சோர்வு ஏற்பட்டது.
`என் அண்ணனைக் கொல்வதற்குச் சமமான செயலைச் செய்தபின்னர் நான் உயிர்வாழ விரும்பவில்லை கண்ணா! நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்!'
அர்ச்சுனன் தன் வில்லைத் தன்னை நோக்கியே திருப்பினான். இந்த விந்தையான திருப்பம் அங்கிருந்த அனைவரையும் திகைக்க வைத்தது. பாஞ்சாலி வழக்கம்போல் கண்ணனைச் சரணடைந்தாள். கண்ணன் நகைத்தவாறே அர்ச்சுனனிடம் சொல்லலானான்:
`உன் அண்ணனைப் பழித்த பிறகு நீ உயிர்வாழ விரும்பவில்லை. தற்கொலை செய்துகொள்ள எண்ணுகிறாய். அவ்வளவு தானே? நல்லது. அதற்கும் வழி இருக்கிறது. சாஸ்திரப்படித் தற்கொலை செய்துகொண்டுவிடு. உன் உயிர் பிழைக்கும். ஆனால் நீ தற்கொலை செய்துகொண்டதாகவும் ஆகும்!'
பஞ்ச பாண்டவர்கள் திகைத்தார்கள். அடேயப்பா! கண்ணனுக்கு என்னென்ன சாஸ்திரமெல்லாம் தெரிந்திருக்கிறது!
`அதெப்படி சாஸ்திரப்படித் தற்கொலை செய்துகொள்வது?'
அர்ச்சுனன் கேட்டான். கண்ணன் சிரித்துக்கொண்டே சொல்லலானான்:
`அர்ச்சுனா! உன்னை நீயே தற்புகழ்ச்சியாகப் பேசிக் கொள். உன் ஆற்றல்களைப் பற்றி நீயே புகழ்ந்துகொள். தற்புகழ்ச்சி என்பது தற்கொலைக்குச் சமானம்!'
அப்படி அர்ச்சுனன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு, தற்கொலை செய்துகொள்ளாமல் சாஸ்திரப்படித் தப்பித்தான் என்கிறது மகாபாரதம்!
வயதில் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பதையும் தற்புகழ்ச்சி பேசாமல் அடக்கத்தோடு வாழ்வது அவசியம் என்பதையும் புரிந்துகொண்ட பாஞ்சாலி, தன் கணவர்களான தருமபுத்திரரையும் அர்ச்சுனனையும் உயிர் போகாமல் காப்பாற்றிய கண்ணக் கடவுளை நோக்கி நன்றியுடன் இருகரம் கூப்பி வணங்கினாள்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்