search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ராகு/கேது தோஷம் நீக்கும் பரிகாரங்கள்
    X

    ராகு/கேது தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

    • 12 பாவகங்களில் ராகு, கேதுகள் அமர்ந்த கர்ம வினைப் பதிவுகளுக்கான விளக்கங்களை பார்க்க இருக்கிறோம்.
    • இரண்டு கட்டங்களை தன் கட்டுக்குள் வைத்துக் கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு/கேதுக்கள்.

    மனித குலத்தையே அச்சுறுத்தலோடு, பதட்டத்தோடு வைத்திருக்கும் ஒரு தோஷம் உள்ளது எனில் அது ராகு/கேது தோஷமாகும். ஒரு ஜாதகத்தில் உள்ள பன்னிரெண்டு கட்டங்களில் ஏதேனும் இரண்டு கட்டங்களை தன் கட்டுக்குள் வைத்துக் கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு/கேதுக்கள்.

    ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலையே பிரம்மாண்டப்படுத்தும் .கேது சுருக்கும். ராகு | கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகத்தையோ அல்லது அவயோகத்தையோ சந்திக்கின்றார்கள். மனிதனுடைய வாழ்வியல் மாற்றங்களை வழி நடத்தக் கூடிய கர்ம அதிகாரியாக ராகு, கேதுக்களை கூறலாம். ஏற்கனவே கடந்து வந்த ஜென்ம வாசனையின் அனைத்து நல்ல,கெட்ட சம்பவங்களையும் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிற ஜென்மத்தில் நடக்கும் அனைத்து நல்ல, கெட்ட செயல்களுடன் இணைத்து புதிய பதிவுகளை பதிவு செய்யும் வினைப் பதிவாளராகவும் அதற்கேற்றபடி வினை தூண்டும் கர்ம வினைகளைத் ஊக்கியாகவும் ராகு, கேதுக்கள் செயல்படுகின்றன. 12 பாவகங்களில் ராகு, கேதுகள் அமர்ந்த கர்ம வினைப் பதிவுகளுக்கான விளக்கங்களை பார்க்க இருக்கிறோம். இவை அனைத்தும் முன்ஜென்ம வினையின் தொடர்ச்சி. இதில் கொடுக்கப்பட்ட பலன்கள் அனைத்தும் அவரவர் ஜென்ம லக்னத்திற்கே உறியது. ராசிக்கு அல்ல.

    லக்னத்தில் ராகு 7-ல் கேது

    ஒருவரை வாழ விடாமல் செய்வது, தவறாக வழி நடத்துவது, கெட்ட பழக்கங்கள் ஏற்பட காரணமாக இருப்பது, தொழில் கூட்டாளியை ஏமாற்றிய குற்றம், திருமண விஷயத்தில் கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் ஏமாற்றிய வினையை தீர்க்க எடுத்த பிறப்பு என்று கூறலாம். இதன் பலனாக இந்த ஜென்மத்தில் கோச்சாரத்தில் லக்னத்தில் ராகு 7 ல் கேது வரும் போது சம்பந்தமே இல்லாத நபரால் பாதிக்கப்படுவது, மனவேதனைபடுவது, தொழில் கூட்டாளியால் ஏமாற்றப்படுவது, களத்திரத்துடன் கருத்து வேறுபாடு, திருமணம் தள்ளிப் போவது போன்ற பலன்கள் நடக்கும்.

    பரிகாரம்

    இது போன்ற பிரச்சனையை அனுபவிப்பவர்கள் பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைப்பதுடன் இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகரை செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல்-9 மணிக்குள் வழிபாடு செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

    2-ல் ராகு 8-ல் கேது

    நல்ல கணவன், மனைவியை பிரித்தவர்கள், தம்பதியினரை வாழ விடாமல் செய்தவர்கள், பொய் சாட்சி சொல்லி ஒரு குடும்பத்தை கெடுத்த வினையை தீர்க்க பிறந்த கர்ம வினைப் பிறப்பாகும். மேலும் ஒருவரை கெடுக்க மாந்தரீகம் செய்தவர்கள். உழைத்த கூலியை கொடுக்காதவர்கள், பொய் சொல்ல அஞ்சாதவர்களுக்கு இத்தகைய அமைப்பு ஏற்படுகிறது. இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு கோச்சாரத்தில் இரண்டில் ராகு 8-ல் கேது வரும் போது குடும்பத்தை விட்டு பிரியும் நிலை, தவறான வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் மனவேதனை தரும் மறு விவாகம் ஏற்படும். இதன் பலனாக இந்த அமைப்பு உடையவரின் திருமண வாழ்க்கையில் நெருடல், மனவேதனை, களத்தரத்துடன் பிரச்சனை இருக்கும்.

    பரிகாரம்

    இதற்கு பரிகாரமாக பொருளாதார பற்றாக்குறையால் திருமணம் செய்ய முடியாமல் இருப்பவர்களின் திருமணத்திற்கு உதவி செய்வதுடன் ஊரின் வடக்கு பகுதியில் உள்ள புற்றை செவ்வாய் கிழமைகளில் வழிபாடு செய்ய வேண்டும்.


    3-ல் ராகு 9-ல் கேது

    உடன் பிறந்தவர்களுக்கு உரிய பங்கை அபகரித்தவர்கள், உதவி செய்யக் கூடிய சக்தி இருந்தும் உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்யாதவர், அவர்களின் வாழ்க்கை அழிய காரணமாக இருந்தவர், வீண் வதந்தியை பரப்புதல் பேய், பிசாசு, செய்வினை என்று கூறி பணம் பறித்த குற்றம், நல்லவர் மனதை நடுங்க வைப்பது , தானம் கொடுப்போரை தடுப்பது போன்ற குற்றங்கள் அடங்கும். இதன் பலனாக இந்த பிறவியில் தங்களின் உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்மை செய்தால் அவப் பெயரே மிஞ்சும். கோச்சாரத்தில் 3-ல் ராகு 9-ல் கேது வரும் போது உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் முன்னோர்களின் சாபமும் ஏற்படும்.

    பரிகாரம்

    உடன் பிறந்தவர்களின் வாரிசுகளுக்கு தேவையான உதவியை செய்தல், வயதானவர்களுக்கு உணவு, ஆடை தானம் செய்தல், முன்னோர்களுக்கு முறையான திதி, தர்பணங்களை செய்து வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும்..

    4-ல் ராகு 10-ல் கேது

    தாயை பராமரிக்காத குற்றம், தாய் வழி உறவினர்களை அவமதித்த குற்றம், வீட்டில் வாடகைக்கு இருப்பவரை துன்புறுத்துதல், அதிக வாடகை வாங்குதல், தன்னிடம் வேலை பார்ப்பவரை அடிமைப்படுத்தி முன்னேனேற்றத்தை முடக்குதல், ஒருவரின் தொழிலை பாதிக்க செய்தல், ஒருவர் ஊரை விட்டு வெளியேற காரணமாக இருத்தல், மண் புற்றுக்களை இடித்தல் ஆகிய குற்றமுடைய அமைப்பாகும். இதன் பலனாக இந்த ஜென்மத்தில் சொந்த வீடு பாக்கியமின்மை, பல வீடு இருந்தும் வாடகை வீட்டில் வாழும் நிலை, தனது சொத்துக்களை பயன்படுத்த முடியாமல் வைத்து வேடிக்கை பார்க்கும் நிலை, அடிமைத் தொழில் செய்து கஷ்ட ஜீவனம் செய்யும் நிலை, சாதாரண தொழிலை கூட கடும் போராட்டத்துடன் நடத்த வேண்டிய நிலை வரும். கோச்சாரத்தில் 4-ல் ராகு/-10-ல் கேது வரும் போது வீடு வாகன பராமரிப்பால் இழப்பு அல்லது சொந்த வீட்டை இழத்தல், தொழிலை இழுத்து மூடும் நிலை போன்றவை ஏற்படும்.

    பரிகாரம்

    தாயை பராமரித்தல், தாய் வழி உறவினர்கள் வயதான பெண்களுக்கு தேவை அறிந்து உதவுதல் தெருவோரம் வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு குடிசை அமைக்க உதவுதல். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க செய்தல். ஜீவனத்திற்கு சிரமப்படுபவர்களுக்கு அடிப்படை தேவையை நிறைவு செய்ய உதவி வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

    ஐ.ஆனந்தி

    5-ல் ராகு 11-ல் கேது

    குல தெய்வத்தை குழி தோண்டி புதைத்தவர்கள், கோவில் சொத்தை கொள்ளையடித்தவர்கள், குரு காணிக்கை கொடுக்க மறுத்தவர்கள், குரு துரோகம் செய்தவர்கள், ஒருவரின் பூர்வீக சொத்தை அபகரித்தல், ஒருவருக்கு தொழிலில் லாபத்தை இழக்க செய்தல், காதலித்து ஏமாற்றிய குற்றம், ஒருவருக்கு வாரிசு உருவாக முடியாமல் செய்த கர்ம வினைப் பதிவாகும். இதன் பலனாக குழந்தை பிறப்பில் தடை, உடல் நலக் குறைவுடன் கூடிய குழந்தை பிறப்பது, குல தெய்வம் தெரியாமல் போவது , குல தெய்வ அனுக்கிரகமின்மை, பூர்வீக சொத்தை பயன்படுத்த முடியாதமை போன்றவைகள் ஏற்படும். இவர்களுக்கு கோச்சாரத்தில் 5ல் ராகு 11-ல் கேது வரும் போது குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு, குழந்தைகளால் மன உளைச்சல், மூத்த சகோதரர்களுக்காக பொருள் இழக்க நேருதல் அல்லது மூத்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு, குல தெய்வ வழிபாடு செய்ய முடியாமல் போகுதல் அல்லது வழிபாட்டு தலங்களுக்கு சென்று வரும் போது விபத்து ஏற்படும். தொழிலில் பெரும் பொருள் இழப்பு ஏற்படும்.

    பரிகாரம்

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை தானம் செய்வதுடன் வயதில் மூத்தவர்களின் நல்லாசி பெற வேண்டும். அத்துடன் தங்களுக்கு தொழிலில் வரும் லாபத்தில் சிறு பகுதியை வயதான முதியோர் இல்லங்களுக்கு தர வேண்டும். பராமரிப்பு இல்லாத கோவில்களை பராமரிக்க நிதி உதவி செய்ய வேண்டும்.

    6-ல் ராகு 12-ல் கேது

    அநியாயமாக ஒருவரின் மேல் ஏற்படுத்தும் தவறான வழக்கு, தன் கடனை மற்றவர் மேல் திணிப்பது, அல்லது பண மோசடி ஏற்படுத்துதல், ஒருவரின் திம்மதியை கெடுத்தது, நோயுள்ளவர்களுக்கு உதவாமை , நோய்க்கு தவறான மருந்து கொடுப்பது ஆகிய காரணங்களே இந்த வினைப் பதிவிற்குரிய அமைப்பாகும். இதன் பலனாக இந்த ஜென்மத்தில் வழக்கிற்கு மேல் வழக்கு, கடன், நோய், எதிரி தொல்லை இருந்து கொண்டே இருக்கும். கோச்சா ரத்தில் 6-ல் ராகு 12-ல் கேது வரும் போது கடுமையான கடன் பிரச்சினை, பண இழப்பு, இனம் புரியாத நோய் , செய்வினை தாக்கம் ஏற்படும்.

    பரிகாரம்

    கருட வழிபாடு, காளி வழிபாடு, கால பைரவர் வழிபாடு செய்வதுடன் தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கடும் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை செய்பவர்களுக்கு மருத்துவ செலவிற்கு உதவ வேண்டும்.

    7-ல் ராகு லக்னத்தில் கேது

    பிறர் மனைவியை விரும்பியவர்கள், களத்திரத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், பெண் பித்தர்கள், கூட்டாளியை ஏமாற்றுதல், சட்டத்திற்கு புறம்பான செயல்களை ஆதரித்தது போன்ற செயல்களால் தோன்றிய வினைப் பதிவாகும். இதன் பலனாக திருமண வாழ்வில் குழப்பம், தம்பதியினர் கருத்து வேறுபாடுடன் வாழ்வது கூட்டாளிகளால் ஏமாற்றப்படுதல், பணத்தை பறிகொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் ஏற்படும். கோச்சாரத்தில் 7-ல் ராகு லக்னத்தில் கேது வரும் போது களத்திரத்தை பிரிதல், வம்பு, வழக்கு தொழில் கூட்டாளிகளால் பிரிவினை வம்பு வழக்கு , ஏமாற்றபடுதல் , மரியாதைக்கு பங்கம் எற்படும்.

    பரிகாரம்

    சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு மாலை நேரத்தில் அருகம்புல் அர்ச்சனை செய்வதுடன் ஞாயிறு தோறும் ராகு காலத்தில் கால பைரவருக்கு உளுந்த வடை மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். சுமங்கலி பெண்களிடம் நல்லாசி பெற வேண்டும்.

    8-ல் ராகு 2-ல் கேது

    பேராசையை தூண்டி ஒருவரின் வாழ்வை கெடுத்தல், தவறான வார்த்தைகளால் பிறருக்கு மனவேதனை செய்தல் , பொய் சொல்லி பணம் பறித்தல் , நம்பிக்கை துரோகம், நம்பிக்கை மோசடி ஆகிய செயல்களால் தோன்றிய கர்ம வினையாகும். இதன் பலனாக அடிக்கடி விபத்து, கண்டம், தற்கொலை உணர்வு , பண இழப்பு ஏற்படலாம். கோச்சாரத்தில் 8-ல் ராகு 2-ல் கேது வரும் போது வருமானக் குறைவு, வருமானம். நின்று போகுதல், கொடுத்த பணம் வராமல் போவது, குடும்பத்தில் நிம்மதியின்மை வறுமை, தகுதி குறைவான இடத்தில் வேலை பார்க்கும் நிலை, விபத்து ஏற்படும்.

    பரிகாரம்

    தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை நித்திய பிரதோச வேளையில் சிவ தரிசனம் செய்வதுடன் சனிக்கிழமைகளில் உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    (தொடர்ச்சி அடுத்த வாரம்...)

    செல்: 98652 20406

    Next Story
    ×