search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாராகியை வழிபடுங்கள் எதிரிகளை வெல்லலாம்!
    X

    வாராகியை வழிபடுங்கள் எதிரிகளை வெல்லலாம்!

    • புராணங்கள் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 4 தடவை நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • ஆஷாட நவராத்திரி நாட்களில் வாராகியையும் சப்த மாதர்களையும் வழிபட வேண்டும்.

    ஆதிபராசக்தியின் அம்சமான துர்க்கை அம்மன். அசுரர்களை அழித்து மக்களை காத்து அருள்வதை கொண்டாடும் வகையில் அமைந்ததே நவராத்திரி. புராணங்கள் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 4 தடவை நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    இதில் சித்திரை மாதம் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரியும் புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்திரியும் முக்கியமானது. அதுபோல ஆனி மாதம் ஆஷாட நவராத்திரியும் தை மாதம் சியாமளா நவராத்திரியும் முக்கியமானதுதான்.

    சாரதா நவராத்திரியில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு தலா 3 நாட்கள் வழிபாடு செய்வது வழக்கம். சியாமளா நவராத்திரி நாட்களில் ராஜமாதங்கியை வழிபட வேண்டும். வசந்த நவராத்திரி நாட்களில் லலிதா திரிபுர சுந்தரியை 9 நாட்களும் வழிபட வேண்டும்.

    ஆஷாட நவராத்திரி நாட்களில் வாராகியையும் சப்த மாதர்களையும் வழிபட வேண்டும். சிறப்புக்குரிய இந்த நவராத்திரியை வாராகி நவராத்திரி என்றும் சொல்வார்கள்.

    ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் கையில் உள்ள பஞ்ச பாணங்களில் இருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மகாவாராகி எனப்படும் அம்மன். சேனைகளுக்கு தலைவியாக அன்னையை பாதுகாப்பவளாக விளங்கும் இவள், வராக முகத்துடன் இருப்பதால் வாராகி என்று அழைக்கப்படுகிறாள். பிராஹ்மீ, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணீ, சாமுண்டீஸ்வரி என்னும் சப்த மாதர்களில் இவள் ஆறாவதாக பூஜிக்கப் படுபவள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களில் நெற்றியில் இரண்டு கண்புருவங்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஞா சக்கரப்பகுதிக்கு வாராகியே தேவதையாவாள்.

    ஆனி (ஆஷாட) மாதம் வளர் பிரதமை முதல் நவமி வரையில் உள்ள 9 நாட்களும் வாராகி நவராத்திரி எனப்படுகிறது.

    அந்த நவராத்திரி நாளை (6-ந் தேதி) தொடங்குகிறது. நாளை முதல் 10 நாட்களுக்கு அதாவது 15-ந் தேதி வரை இந்த வாராகி நவராத்திரியை கொண்டாட வேண்டும். இந்த நாட்களில் சப்த கன்னியர் வழிபாடு குறிப்பாக வாராகி வழிபாடு மிகுந்த புண்ணியங்களை தரும்.


    குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் நிகழும் பஞ்சமி திதி (10-7-2024 புதன்) ஸ்ரீ வாராகி தேவியை தரிசிக்க சிறப்பான நாளாகும்.

    இந்த நாட்களில் ஸ்ரீ மகா வாராகியை அபிஷேகம் அர்ச்சனை, பூஜை, மந்திர ஜபம், ஸ்தோத்ர பாராயணம் ஹோமம் செய்து வழிபாடு செய்யலாம். இதனால் சிறந்த பேச்சுத் திறன் கிடைக்கும், ஜாதகப்படி செவ்வாய், ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். எங்கும் எதிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

    மேலும் ஸ்ரீ மகாவாராகியை தரிசிப்பவருக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதையொட்டியே வாராகிக்காரனோடு வாதாடாதே என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    இந்த நவராத்திரி 9 நாட்களும் ஸ்ரீ மகாவாராகியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரைத் தண்டு அல்லது வாழைத் தண்டால் திரி செய்து நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பட்டுத் துணி சாத்தி, 1. பஞ்சம்யை நம:, 2. தண்டநாதா'யை நம:, 3. சங்கேதாயை நம:, 4.சமயேஸ்வரியை நம:, 5. சமய சங்கேதாயை நம 6.வாராகியை நம:, 7.போத்ரிண்யை நம:, 8. சிவாயை நம:, 9. வார்த்தாள்யை நம:, 10.மகாசேனாயை நம:, 11. ஆக்'ஞா சக்ரேஸ்வர்யை நம:. 12.அரிக்'ன்யை நம:, என்னும் 12 நாமங்களைச் சொல்லி சிவப்பு பூக்களால் பூஜை செய்ய வேண்டும்.

    தோல் உரிக்காத கருப்பு உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும், சக்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு வந்தே வாராக வக்த்ராம் என்னும் மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு முறையாக பக்தியுடன் ஸ்ரீ வாராகியை நவராத்திரி 9 நாளும் பூஜை செய்பவர்கள், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் நோய், எதிரி மற்றும் அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.


    பூஜை அறையில் வாராகி அம்மனின் திருவுருவப் படம் அல்லது சிலை முன்பு விளக்கேற்றி தினமும் இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் வாராகி அம்மனை வணங்கி வரலாம். இரவு நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் கூட செய்யலாம். வாராகி அம்மன் வழிபாட்டை புதியதாக தொடங்கும் பக்தர்கள் வாராகி அன்னை பிறந்த திதியான வளர்பிறை பஞ்சமி அன்று வழிபாட்டினை தொடங்கினால் மிக சிறப்பு.

    வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து 108 முறை வாராகி அம்மனின் காயத்ரி மந்திரம் அல்லது வாராகி அம்மனின் மூல மந்திரத்தை கூறி அன்னையை மனதார வேண்டி ஜெபிக்கலாம்.

    தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம், அன்னை நிச்சயமாக நம் எண்ணத்தை நிறைவேற்றி நம்மை ஆசீர்வதிப்பாள். பெண்கள் மாதவிடாய் காலத்தில் 4 முதல் 5 நாட்கள் இடைவெளி விட்டு, பிறகு விட்ட நாட்களிலிருந்து வழிபாட்டினை தொடரலாம்

    வாராகியிடம் எனக்கு இது வேண்டும் தாயே கொடு என்று கேட்கலாம். ஆனால், வேறொருவரை கெடு என்று தேவியிடம் வேண்டக்கூடாது. ஏனெனில், கண்ணிமைப்போல் காக்கும் அன்னைக்கு நம் சத்ருபக்தி தெரியாமலா போய்விடும். நமக்கு தீங்கு செய்பவர்களை வாராகி பார்த்து கொள்வாள். நம் மனத்தில் பொய், வஞ்சம், இதெல்லாம் இருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், வாராகி அதில் உடனே அமர்ந்து அருள்புரிவாள்.

    வாராகியை வழிபடுபவர்களுக்கு மூவுலகிலும் எதிரிகள் இல்லை. வாராகியை வழிபட்டால், எடுத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். எல்லாமே வெற்றியைத் தரும். அனைத்து எதிர்ப்புகளும் மறைந்துவிடும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்! வாராகியை வழிபடுபவர்களை தீய சக்திகள் தொடாது. வாராகியை சரணடைவதன் மூலம் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விரைவில் விடுபடலாம். வாராகி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளை எல்லாம் துவம்சம் செய்து தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் அனைத்திலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம். வாராகி அன்னை கூப்பிட்ட குரலுக்கு வந்து நமக்கு உதவுவாள்.

    வாராகி தேவி, பார்ப்பதற்குத் தான் கரடுமுரடான முகம் கொண்டிருக்கிறாள். ஆனால் உண்மையில் சாந்த நாயகிதான் இவளும். வீட்டுப் பூஜை அறையில் வாராகி தேவியின் படத்தையோ, சிலையையோ தாராளமாக வைத்து வணங்கலாம் மற்றும் பூஜித்து வரலாம்.

    வெள்ளிக்கிழமையன்று வாராகி அம்மனை வழிபடுவதன் மூலம், மாங்கல்ய பாக்கியமும், உங்கள் வியாபாரத்தில் லாபமும் அதிகரிக்கும்.

    ஞாயிற்றுக் கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டு வந்தால், நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். திங்கட்கிழமை நன்னாளில் விரதம் இருந்தால் மனநலம் தொடர்பான பிச்சனைகள் அனைத்தும் நீங்கும் என கூறப்படுகிறது.

    செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்தால் வீடு, நிலம், வழக்கு போன்ற சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.புதன்கிழமைகளில் விரதம் இருப்பவர்களுக்கு கடன் சிக்கல்கள் நீக்கி விடிவாள் இந்த வாராகி.

    வியாழக்கிழமையில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், கல்வியில் முன்னேற்றம், குழந்தை பாக்கியம் போன்றவை கிடைக்கும். மேலும், கையில் எடுத்த எந்த காரியத்திலும் வெற்றி பெற வாராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நினைக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

    வாராகி அம்மனுக்கு விரதம் இருக்க நினைப்பவர்கள், வாராகி தேவியை வணங்கி விரதத்தை ஆரம்பிக்கலாம். விரத நாட்களில், கேசரி, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் புராணம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் வாராகி தேவிக்கு நைவேத்தியம் செய்யலாம். மேலும், வெள்ளரிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றையும் வைவேத்தியமாக செய்து வழிபடலாம்.

    வாராகி அம்மனுக்கு உகந்த நிறம் பச்சை நிறம் என்பதால், விரதம் இருக்கும் நாட்களில் பச்சை நிற விரிப்பின் மீது அமர்ந்து, இலுப்பை எண்ணையைத் தீபமாக ஏற்றி வழிபடலாம். அப்படி தீபம் ஏற்றும் பொழுது கிழக்கு நோக்கி ஏற்றினால், வடக்குப் பக்கம் அமர வேண்டும். வளர்பிறை பஞ்சமி திதி திருநாளன்று வாராகி அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால் தீய சக்திகள் விலகி நன்மைகள் ஏற்படும்.

    வளர்பிறை பஞ்சமி திதியில், வாராகி தேவியை மனதார வணங்குங்கள். குடும்பமாக வீட்டில் அமர்ந்து தீபம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி, காத்தருள்வாள் வாராகி தேவி.

    Next Story
    ×