search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நெய்க்குளத்தில் அம்பிகை உருவம்
    X

    நெய்க்குளத்தில் அம்பிகை உருவம்

    • ஆலயத்தின் நான்கு புறங்களிலும் தேரோடும் அழகிய வீதிகள் உள்ளன.
    • திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் பேரளம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது திருமீயச்சூர் திருத்தலம்,

    தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள் பெருங்கோவில், மாடக்கோவில், மணிக்கோவில் என பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஆலயத்தினுள்ளேயே மற்றொரு ஆலயம் உள்ள அமைப்பை இளங்கோயில் என்று சொல்வார்கள்.

    கும்பகோணம் அருகே திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் ஆலயம் இத்தகைய இளங்கோவில் அமைப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தில் அருணாசலேஸ்வரரை மேகநாதசுவாமி என்றும், லலிதாம்பிகையை சாந்த நாயகி என்றும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு பார்த்த மேகநாத சுவாமி ஆலய ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் நான்கு புறங்களிலும் தேரோடும் அழகிய வீதிகள் உள்ளன. தேர்நிலைக்கு அருகில் தென்திசை நோக்கி சித்தி விநாயகர், தனி ஆலயத்தில் கோவில் கொண்டிருக்கிறார்.

    அதன் அருகில், சந்ததித் தெருவில் சூரியன் உருவாக்கிய சூரிய தீர்த்தம் உள்ளது. சூரியன் இத்தலத்தில் கஜவாகனனாக ஈசனை வழிபட்டதால் ஆலய விமானம் யானையின் பின்பாகம் போன்ற கஜப் ருஷ்ட அமைப்புடன் மூன்று கலசங்களுடன் காட்சி அளிக்கிறது.

    வெளிப்பிரகாரம் கடந்து உள்ளே சென்றால் மேகநாதர் கலைநயத்துடன் காட்சி தருகிறார். கோவிலில் லலிதாம்பிகைக்கு தனி சந்நதி உள்ளது. அங்கு அகலமான கருவறையில் நடு நாயகமாக வலதுகாலை மடித்து, இடதுகாலை கீழே பீடத்தில் ஊன்றி திருவாசி பளபளக்க, வெள்ளி சிம்மாசனத்தில் பேரெழிலுடன் அமர்ந் திருக்கிறாள் லலிதாம்பிகை.


    லலிதா சகஸ்ர நாமம் இந்த தலத்தில்தான் உருவாக்கி அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    காசியப்ப முனிவரின் மனைவிகளான கத்துருவும் வினதையும் மழலை வரம் வேண்டித் தவம் இருந்தார்கள். வினதைக்கு பட்சி ராஜனான கருடனும் கத்துருவுக்கு உடற் குறையுள்ள அருணனும் பிறந்தனர். அதனால் மனம் நொந்த

    அவர்கள் இறைவனிடம் மீண்டும் சரணடைந்தனர். அப்போது பறவை குழந்தை மகா விஷ்ணுவின் வாகனமான கருடனாக பெரிய திருவடியாகும் பேறு பெற்றது.

    கத்துருவின் குழந்தை அருணன் சூரியனின் சாரதியாக பதவி பெற்றார். அருணன் உடற் குறையுள்ளவராக இருந்ததால், அதை நிவர்த்தி செய்து கொள்ள விரும்பினார். தன் விருப்பத்தை நிறைவேற்றவல்ல ஈசனை தரிசிக்க, மோகினி வடிவம் கொண்டு அருணன் சென்றபோது, அவள் அழகில் மயங்கிய இந்திரன் அவள் மீது முறையற்ற காதல் கொண்டான்.

    இதனால் இறைவனின் சாபத்தை இந்திரன் பெற்றான். இந்த செய்தி அறிந்த சூரியனுக்கோ தன் சாரதியை மோகினியாக பார்க்க ஆசை வந்தது. கதிரவனுக்கு காமம் தலைக்கேற, மீண்டும் மோகினி வடிவமெடுக்க அருணனை வற்புறுத்தினான்.

    இதைத் தெரிந்துகொண்ட ஈஸ்வரன் சூரியனை சபித்தார். சூரியன் உடல் கறுமையாகி உலகம் இருண்டு விட்டது. தன் தவறை உணர்ந்து ஈசனிடம் மனமுருக வேண்டிக் கொண்டான் சூரியன். மீண்டும் மீண்டும் இறைவனை சரணடைந்து மனமுருக வேண்டினான்.

    அதற்கு இறைவன், 'திருமீயச்சூர் சென்று சூர்ய புஷ்கரணி என்னும் நீர்நிலையை உருவாக்கி, பூஜைகள் செய்' என்று ஆணையிட்டார். அதன்படி தலையில் எருக்கு இலை, அறுகம்புல், பசுஞ் சாணம் முதலியவற்றை வைத்துக் கொண்டு சங்கல்பம் செய்து விசேஷமாக பூஜைகள் செய்தான். ஏழு மாதம் இப்படிச் செய்தும் அவன் உடலின் கறுமையும், கடுமையும் மாறவில்லை. ஈஸ்வரனை நோக்கி கதறினான்.


    சுவாமியும் அம்பாளும் ஏகாந்தமாக இருக்கும் ஒரு அமைதியான வேளையில் சூரியனின் அலறல் அபஸ்வரமாக ஒலித்தது. அம்பாளுக்கு கோபம் வந்து சூரியனை சபிக்க நினைத்தபோது ஈசன் அவளைத் தடுத்தார்.

    'இப்போதுதான் சாப விமோசனம் பெறும் நிலைக்கு வந்திருக்கிறான் சூரியன், மீண்டும் சபித்தால் உலகம் இருளில் மூழ்கிவிடும். எனவே நீ சாந்தமடைந்து, உலகம் பிரகாசிக்கத் தவமிருப் பாயாக!' என்று கேட்டுக் கொண்டார்.

    அம்பிகையும் சாந்த நாயகியாக அதாவது லலிதையாக திருமீயச்சூர் பகுதியில் தியான கோலம் கொண்டாள். அன்னை பராசக்தியின் உத்தரவின் பேரில் வசின்யாதி வாக் தேவதைகள் தோன்றி லலிதா சகஸ்ரநாமம் எனும் லலிதையைப் புகழும் தோத்திரத்தை இத்தலத்தில் பாடி அரங்கேற்றினர்.

    அதில் வரும் ஸ்ரீமாதா எனும் முதல் நாமத்தின்படி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய், இந்த அகிலத்திற்கே அன்னையாய் திருயேச்சூர் தேவி அருள்கிறாள்.

    ஹயக்ரீவர் சொற்படி அகத்திய முனிவர், திருமீயச்சூர் வந்தார். சூரியன் அப்போது சாந்த நாயகிக்கு பூஜை செய்து கொண்டிருந்ததை பார்த்தார். தானும் அள்னையை வணங்கி, லலிதா நவரத்ன மாலை' என்கிற பாடல் தொகுப்பைப் பாடினார்.

    லலிதா நவரத்ன மாலையை இத்தலத்தில் பாடினால் லலிதா சகஸ்ரநாம பாராயண பலன் கிட்டும் என்பார்கள். இத்தேவியின் சந்நதி, கொலுமண்டபம் போல, ஒரு ராஜதர்பார் போல் தோற்றமளிக்கிறது. அழகு, கம்பீரம், கருணை தவழ பேரெழிலுடன் தேவி அமர்ந்திருக்கும் காட்சியில் நம் மனம் கரைந்து போகும்.

    காண்பவரைப் பரவசப்படுத்தும் தரிசனம் இந்த தலத்தில் கிடைக்கும். சாந்நித்யம் நிறைந்த இந்த சந்நதி பக்தர்களை நெக்குருக வைத்து கண்களில் நீர் திரள வைப்பது நிஜம். மனதில் நினைக்கும் கோரிக்கைகளை எல்லாம் நிறை வேற்றித் தருவது மனோன்மணி, அந்த மனோன்மணி வடிவில் பக்தர்களின் கோரிக்கை எதுவானாலும் நிறைவேற்றித் தருகிறாள் இந்த லலிதாம்பிகை.

    சித்ரா பவுர்ணமியும் சுவாதி நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாள் மிக விசேஷமானது. அன்று வானில் இருந்து விழும் மழைத்துளி சிப்பியினுள் நுழைந்தால் அது நல்முத்தாக மாறிவிடும். அந்நாள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அந்த நந்நாளில் இத்தல லலிதாம்பிகைக்கு ருயேச் ஆரம் அணிவிக்கப்பட்டு வழி பாடுகள் நடைபெறுவது வழக்கம்.

    விஜயதசமியின் போது நான்கு மூட்டை அரிசியில் சர்க்கரைப் பொங்கல் தயாரித்து, அதன் நடுவில் நெய்க்குளம் அமைத்து தேவியின் முன்பு படைப்பார்கள். அர்ச்சகர் கற்பூர ஆரத்தி காட்டும் போது அந்த நெய்க்குளத்தில் தேவியின் பிம்பத்தைத் தரிசிப்பது அபூர்வமான வாய்ப்பு.

    சூரியன் பூஜை செய்ததால் சித்திரை மாதம் 21 முதல் 27ம் தேதிவரை தினமும் அதிகாலையில் பெறும் சூரிய கிரகணங்கள் ராஜகோபுரம் வழியாக கொடிக்கம்பம், பலிபீடம், மகாமண்டபம், ஸ்நபன மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து கருவறையில் ஈசனின் மீது படர்வது அற்புதமான நிகழ்வு.

    இந்த பூஜையில் அகத்தியர் எந்த வடிவிலாவது வந்து கலந்து கொள்வதாக ஐதீகம், அப்போது மேகநாத சுவாமிக்கு நெல்லிக்கட்டைகள் ஊறிய நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. சூரியனைப் போலவே எமதர்மராஜனும் சனீஸ்வரரும் மேகநாத சுவாமியிடம் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தனர்.

    அதனால் எமனுக்கு உகந்த சதய நட்சத்திரத்தன்று சுவாமிக்கு எமலோக விருட்சமான பிரண்டையை உணவாக்கி சாதத்துடன் கலந்து அன்னதானம் செய்து, தாமரை இலையில், சங்கு புஷ்பத்தை வைத்து அர்ச்சனை செய்தால் உடல் நோய்களும் பாவங்களும் அகலும் என்பது ஐதீகம், திருமியச்சூரில் ஈசனுக்குத்தான் செய்த விசேஷ பூஜை பற்றியும் அதனால் தான் பெற்ற பலனையும் நசிகேதனுக்கு எமதர்மன் சொன்னாராம். இக்கோவிலைப் பற்றியும் அதில் உறையும் ஈசன் பற்றியும் நாவுக்கரசர் பாடி இருக்கிறார். திருஞான சம்பந்தப் பெருமானாலும் பாடல் பெற்ற தலம் இது.

    பிரதானக் கோவிலும் இளங்கோவிலும் பிற்கால சோழர்காலத்து திருப்பணியாகும். திருச்சுற்றை வலம் வரும்போது கோபத்துடன் எழுந்து செல்லும் அம்பிகையை அரவணைத்து வலக்கரத்தால் அம் பிகையின் முகவாயைப் பிடித்து சாந்தப்படுத்தும் ஈசனின் சிற்பம் மனதை கவர்கிறது. பக்தர்கள் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நின்று பார்த்து அந்த சிற்பத்தை ரசித்து விட்டுத்தான் செல்வார்கள். அவ்வளவு அழகு.

    இவரை ஷேத்ரபுராணேஸ்வரர் என அழைக்கின்றனர். கோவிலைச் சுற்றியுள்ள கோஷ்ட சிற்பங்கள் சில பிரமிப்பூட்டுகின்றன. அதில் ரிஷபாருட சிற்பத்தை குறிப்பிட்டுக் கூறலாம்.

    வடக்குப் பிரகாரத்தில் அஷ்டபுஜ துர்க்கை, அன்னை லலிதையைப் போலவே சாந்த வடிவாக தரிசனம் அளிக்கிறாள். பக்தர்களுக்கு இல்லற நலம், குழந்தைகளின் கல்வி, செய் தொழிலில் மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள், குறைவற்ற உடல்நலம், போன்றவற்றை அருளி பாதுகாக்கிறாள் இத்தலத்து லலிதாம்பிகை.

    கும்பகோணத்திலிருந்தோ மயிலாடுதுறையிலிருந்தோ திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் பேரளம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது திருமீயச்சூர் திருத்தலம். அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    Next Story
    ×