search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பயமே ஜெயம்!
    X

    பயமே ஜெயம்!

    • பயமற்ற வாழ்க்கையில் ஒழுக்கம் இருக்காது.
    • பயம் என்பதே ஒழுக்கம்தான்.

    'உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு, பயம் உங்களுக்கு உதவுகிறது. பயம் என்பது கோழைத்தனம் அல்ல; புத்திசாலித்தனம்.'

    -ஓஷோ

    துடிப்பான ஓர் இளைஞன். பன்னிரெண்டாம் வகுப்பு வரை, அவனிடத்தில் 'கெட்ட பழக்கம்' என்று பெரிதாக எதுவும் இருந்ததில்லை. 'டியூஷன் கிளாஸ்' என்று சொல்லிவிட்டு, சில திரைப்படங்களுக்குத் திருட்டுத்தனமாகச் சென்று வந்திருக்கின்றான். அவ்வளவுதான்!

    ஆனால், கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாளிலேயே, ஒரு புதிய பழக்கம் அவனைத் தொற்றிக் கொண்டது. பல்வேறு நண்பர்களின் அறிமுகம். பள்ளியின் கெடுபிடிகளைக் கடந்து வந்துவிட்ட உற்சாகம். 'பெரிய மனிதன்' ஆகிவிட்டது போன்ற ஓர் உணர்வு. அதன் அடையாளமாய், புகைபிடிக்கும் பழக்கம் ஆரம்பமானது.

    அந்தப் பழக்கம் அவனுக்குள் ஒருவித கிறுகிறுப்பையும் திமிரையும் ஏற்படுத்தியது. 'இதுகூட இல்லை என்றால், கல்லூரி வாழ்க்கை அர்த்தமற்றது' என்று எண்ணத் தோன்றியது. சிகரெட் சுவையை அவன் ரசித்தான்; சிலாகித்தான்.

    கண்ணியமான பெற்றோர். கனிவும் கண்டிப்பும் கொண்டவர்கள். அவனின் புகைப்பழக்கம் அவர்களுக்குத் தெரியவர, அதிர்ந்து போனார்கள். பெரிதும் கவலை கொண்டனர்.

    அவனிடம் பக்குவமாகப் பேசினார்கள். புகைப்பழக்கம் கூடவே கூடாது என்று எச்சரித்தனர். 'இப்போதே விட்டுவிட வேண்டும்' என்று அவர்கள் சொல்ல, அவன் தலையாட்டினான். 'இனி தொடவே மாட்டேன்' என்று உறுதி அளித்தான்.

    அந்த உறுதிமொழி அவன் உள்ளத்திலிருந்து வரவில்லை; உதட்டிலிருந்து வந்தது. புகைப்பழக்கம் தொடர்ந்தது. சிகரெட் புகையில் மனம் லயித்தான். அந்தந்த நேரத்தில் சிகரெட் பிடித்தாக வேண்டும். இல்லை என்றால், பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தது.

    ஆலோசனைகள் அவனுக்கு அற்பமாகத் தெரிந்தன. அனைத்தையும் புறந்தள்ளினான். சிகரெட் புகைப்பதனால் ஏற்படக்கூடிய பயங்கரமான பின்விளைவுகளைப் பற்றிய எண்ணமே அவனிடத்தில் இல்லை.

    கல்லூரிப் படிப்பை முடித்துப் பல ஆண்டுகளாய் புகைப்பழக்கம் அவனை விட்டபாடில்லை. நண்பர்கள் கூடிவிட்டால், பாட்டும் இசையும் புகையும் அதகளப்படும். பொதுவாக, ஒருவனின் ரசனைகளில் மாற்றம் ஏற்படுவது கடினம்.

    ஆனால், அந்த இளைஞனின் வாழ்வில் திடீரென ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பல்லாண்டு காலப் புகைப்பழக்கம் பட்டென்று நின்று போயிற்று. எப்படி?

    ஒருநாள் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவு படுபயங்கரமாக இருந்தது.

    அகோரக் காட்சிகள் நிறைந்த ஓர் இடம். அங்கு இருக்கின்ற அனைவருமே மரண நோயாளிகள். பலருக்குக் கைகால்கள் உருகி வழிந்து கொண்டிருந்தன. சிலரின் மார்புப் பகுதியிலிருந்து குபுகுபு என்று புகை வெளியேறிக் கொண்டிருந்தது. பலருடைய முகத்தில் சதையே இல்லை. பற்கள் மட்டும் தெரிகின்றன. எல்லோரின் கைகளிலும் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. ஒரே அழுகுரல், அலறல்!

    தியாரூ

    பயத்தில் கத்தியபடி அவன் எழுந்துவிட்டான். கண்டது கனவா தரிசனமா...கலங்கினான். உடலெங்கும் வியர்த்துக் கொட்டியது. நெஞ்சு படபடத்தது. கைகால்கள் குழலாடின. அச்சம் தொண்டையைக் கவ்வியது. வார்த்தை வரவில்லை. தட்டுத் தடுமாறி எழுந்து நின்று, நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். குளித்து வந்தவன்போல் நனைந்திருந்தான்.

    அத்தருணத்தில்தான் தன்னை அவன் உணர்ந்தான். வாங்கி வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து, ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்தான். புகைப்பழக்கத்தை அன்று விட்டவன், அதன்பின் தொடவே இல்லை.

    ஆயிரம்பேர் அறிவுரை சொன்னாலும் ஏற்காத ஒரு மனம், ஒரே இரவில் எப்படி மாறியது? பயம்தான், வேறென்ன! கனவில் கண்ட கோரக் காட்சிகள், அவனுக்குள் நரகவதை பயத்தை ஏற்படுத்தின. அந்த பயம்தான், அவன் தவறை அவனுக்கு உணர்த்தி எச்சரித்தது. அழிவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு, அந்தப் பயமே அவனுக்குப் பலமான சக்தியாக மாறியது.

    எனவே, பயம் நல்லது. தேவையற்ற ஒன்றில் ஈடுபடுவதற்கு முன்னரே, ஏற்படுகின்ற பயம் மிகவும் நல்லது. ஏனெனில், ஆரம்பத்திலேயே அது நம்மைத் தடுத்து நிறுத்தி, ஆபத்திலிருந்து நம்மை விலக்கிவிடுகிறது.

    மாணவனுக்கு ஆசிரியர் மீது பயம் இல்லை என்றால், படிப்பு மண்டையில் ஏறாது. பயமற்ற வாழ்க்கையில் ஒழுக்கம் இருக்காது. ஒழுக்கமற்ற வாழ்க்கையில் உயர்வு இருக்காது.

    பயம் என்பதே ஒழுக்கம்தான். அந்த ஒழுக்கம் இல்லாததால்தான், இன்று சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    பிள்ளைகளுக்குப் பெற்றோரிடத்தில் பயமில்லை. பெற்றோருக்குப் பிள்ளைகளைக் கண்டிக்க முடியவில்லை. பையன் எங்கே போகிறான், என்ன செய்கிறான், எப்போது வருகிறான் என்பதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குப் பல பெற்றோர்கள் விரும்புவதில்லை. இன்று அப்படி ஒரு நிலை!

    கண்மூடித்தனமாகத் திரிவதில் சிலருக்கு ஆனந்தம். முட்டி மோதி மூக்குடைந்து போகும்வரை, அவர்கள் ஆபத்தை உணர மாட்டார்கள். வவ்வாலுக்குப் பார்வைத்திறன் மிகமிகக் குறைவு. தெளிவாகப் பார்க்க முடியாது. எனவே, அது ஒலியை உன்னிப்பாகக் கவனிக்கிறது. பறக்கும் போது ஒலிகளை எழுப்பிக் கொண்டே பறக்கின்றது.

    'அல்ட்ரா சவுண்ட்' என்னும் இந்த ஒலி, எதிரில் இருக்கும் பொருள், உயிரினம் போன்றவற்றில் பட்டு வவ்வாலிடத்திற்கு அதிவேகமாகத் திரும்பிவரும். அதன்மூலம், தனக்கு எதிரில் பொருளோ எதிரியோ இருப்பதை அறிந்து, உடனடியாகத் திசையை மாற்றிக் கொண்டு வவ்வால் பறந்துவிடும்.

    தலைகீழாய்த் தொங்குகின்ற வவ்வாலுக்கு, அப்படி ஓர் அற்புதமான நுண்ணறிவு. ஆனால், மனிதன்? மதி மயங்குகிறான். விழித்துக் கொண்டே பள்ளத்தில் போய் விழுகின்றான். சிறகுகள் முறிபடும் வலியை அவன் உணர்வதில்லை. ஆறறிவையும் மழுக்கிவிட்டபின், வாழ்வைக் குறித்த பயம் எங்கிருந்து வரும்!

    மரத்தடியில் குருவைச் சுற்றி அவரின் சீடர்கள் அமர்ந்திருந்தனர். குரு அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார்.

    'வாழ்க்கையில் துணிச்சல் மட்டும் போதாது; துணிச்சலுடன் பயமும் அவசியம்' என்றார்.

    சீடர்களுக்குப் புரியவில்லை. ஒருவரையொருவர் பார்த்தனர். குருவிடம் கேட்பதற்குத் தயங்கினர். குரு புரிந்து கொண்டார்.

    'என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா, கேளுங்கள்' என்றார்.

    ஒரு சீடன் எழுந்து நின்றான்.

    'குருவே, துணிச்சலும் பயமும் இருதுருவங்கள். அவை எப்படி இணைந்திருக்க முடியும்?'

    குரு அமைதியாக இருந்தார். பின்னர் சொன்னார்:

    'நீ ஆற்றுக்குப் போகும் போது அங்கு பெருவெள்ளம். அக்கரையில் ஒரு சிறுவன் சிக்கிக் கொண்டான். அவனை இக்கரைக்குக் கொண்டுவர வேண்டும். நீ என்ன செய்வாய்?'

    'நான் ஆற்றில் குதித்துச் சென்று, அந்தச் சிறுவனை பத்திரமாக இக்கரைக்குக் கொண்டு வந்துவிடுவேன்'.

    'ஆற்றில் இறங்கினால், உன்னை வெள்ளம் இழுத்துச் சென்றுவிடுமே'.

    'அப்படி சும்மா இறங்கிவிடுவேனா? ஆற்றங்கரையில் உள்ள மரத்தில், பெரிய கயிற்றின் ஒரு முனையைக் கட்டி, மறுமுனையை என் இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொள்வேன். இரண்டு பேரைக் கரையில் நிறுத்தி, கயிற்றை நன்கு பிடித்துக் கொள்ளச் சொல்வேன். அதன்பின் ஆற்றில் இறங்கி அக்கரைக்குச் சென்று, அந்தச் சிறுவனை மீட்டு வருவேன்' என்றான் சீடன்.

    குரு கலகல என்று சிரித்தார்.

    'சீடனே, ஓர் உண்மை உனக்குப் புரிகிறதா? ஆற்றின் அக்கரையில் இருக்கும் ஓர் உயிரை மீட்கத் தயாரானாய். அது உன் துணிச்சல். அதே சமயம், வெறுமனே ஆற்றில் இறங்கிவிட்டால் வெள்ளம் இழுத்துச் சென்றுவிடுமே என்று அஞ்சினாய். எனவே, விவேகத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறாய். பார்த்தாயா? இங்கு ஒரு செயலை நிறைவேற்றுவதில் துணிச்சலும் பயமும் இணைந்திருக்கிறதே' என்றார் குரு.

    சீடன் வியப்புடன் குருவைப் பார்த்தான். குரு புன்னகைத்தார்:

    'துணிச்சல் என்பது வேகம். பயம் என்பது விவேகம்' என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார் குரு.

    பலரிடம் துணிச்சல் இருக்கிறது. ஆனால், பின்விளைவுகளைப் பற்றிய பயம் இல்லை. அதனால்தான், எவ்வித யோசனையுமின்றி படுபாதகச் செயல்களில் இறங்கிவிடுகின்றனர். இறுதியில், ஆபத்தான கண்ணிகளில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் திணறுகிறார்கள். தம்மைச் சார்ந்திருப்பவர்களையும் தவிக்கவிட்டு விடுகிறார்கள்.

    ஒருவரைக் கொலை செய்வதற்கு அரிவாளைத் தீட்டுகின்றவன், தன்னைத் துணிச்சல் மிக்கவனாக எண்ணிக் கொள்கிறான். அந்த மதியீனம் அவனை மிருகமாக்குகிறது. பயம் அற்றுப் போகிறது. சர்வ சாதரணமாகக் கொலை செய்கிறான். பின்னர், கம்பி எண்ணுகிறான்.

    எவன் ஒருவனுக்குத் தன்மீது, தன் குடும்பத்தின் மீது அன்பும் அக்கறையும் இல்லையோ, அவன் எந்தப் பழிபாவங்களையும் செய்யத் தயங்க மாட்டான். அதனால் ஏற்படுகின்ற மோசமான விளைவுகள், பலரையும் அல்லவா பாதிப்புகளுக்கு உட்படுத்திவிடுகின்றன.

    திருடுகின்றவனுக்கு என்னதான் மனமோ! நள்ளிரவில் திரிகின்றான். யாரோ ஒருவரின் வீட்டுப் பூட்டை உடைத்து, உள்ளே நுழைகின்றான். கையில் அகப்பட்டதைச் சுருட்டுகின்றான்.

    நல்ல சம்பளம் வாங்குகின்றவன்கூட லஞ்சம் வாங்குகின்றான். அகப்பட்டுக் கொண்டாலும் சிரிக்கின்றான். வெட்கம் என்பதே இல்லை. அவனுக்கு மட்டுமா அவமானம்? அவன் குடும்பத்திற்கே அவமானம்தானே.

    பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகின்றவர்களுக்கு, மனசாட்சி மரத்துப் போகின்றதே. அழுகுரலை அவன் செவிகள் கேட்பதில்லை. பின்வருபவைகளைப் பற்றி அவன் சிந்திப்பதே இல்லை.

    இப்படி, தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் நடைபெறுகின்ற பொல்லாத செயல்களுக்குக் காரணம் என்ன? பயமின்மை; ஒரே காரணம் அதுதான்.

    ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதற்கும், இந்தச் சமூகத்தை ஆபத்துகளில் இருந்து மீட்பதற்கும் தேவையான ஒரே ஆயுதம்; தீமைகளுக்கு அஞ்சுகின்ற பயம்! அந்தப் பயமே, வாழ்வின் ஜெயம். ஆக, பயம் நல்லது. ஏனெனில், பயம் என்பது கோழைத்தனம் அல்ல; புத்திசாலித்தனம்.

    போன்: 9940056332

    Next Story
    ×