search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உசுரே நீ தானே!
    X

    உசுரே நீ தானே!

    • கடந்த மூன்று மாதங்களாக முயற்சி செய்து ஒரு மாப்பிள்ளையும் பார்த்து விட்டான்.
    • உண்மையை சொல்லப் போனால், இந்த லேசான பயம்தான் அவர்களுக்குள் காதலையும் வரவழைத்தது.

    "அவங்க பின்னாடி துரத்தி வந்து கிட்டு இருக்காங்க... சீக்கிரம் போங்க...! சீக்கிரம் போங்க...!"

    திவ்யா கத்த கத்த வேகமாய் சென்று கொண்டு இருந்த அந்த கார் இன்னும் வேகம் பிடித்தது.

    காருக்குள் திவ்யா. அருகில், இன்னும் சற்று நேரத்தில் வீட்டுக்குத் தெரியாமல், திருச்செந்தூரில் திருமணம் செய்து கொள்ள போகும், அவளுடைய இரண்டு வருட காதலன் டேவிட் அமர்ந்திருக்கிறான். அவர்களுடன் டேவிட்டின் நண்பர்கள் செந்தில், தியாகு,நெல்சன் மூவரும் உடன் இருக்கின்றனர்.

    காரை ஓட்டிக் கொண்டிருக்கும் நெல்சன், பின்னால் திரும்பி திவ்யாவிடம், "திவ்யா... உன் அண்ணன் பெருமாள் சும்மா இருக்க மாட்டானா? ஏன் இப்படி அவன் பிரண்ட்ஸை கூப்பிட்டுகிட்டு மூணு பைக்ல ஆறு பேரா சேஸ் பண்றான். இது என்ன சினிமாவா?" என கூற,

    "இங்க பாரு... நீ மேஜர். உன் இஷ்டத்துக்கு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கலாம்... எதுக்கு இப்படி தடுக்கணும்னு திரியுரான் உங்க அண்ணன்?" என செந்தில் கேட்க, முட்டி வரும் கண்ணீரை அடக்கியபடி திவ்யா,

    "அது ஏனோ நான் ஒரு கிறிஸ்டின் பையன காதலிக்கிறேன்னு ஆரம்பத்துல சொன்ன நாளில் இருந்து அப்பாக்கு பிடிக்கல... அம்மாவுக்கும் புடிக்கல... எங்க அண்ணனுக்கு பிடிக்கல.. அவங்க ஒத்துக்கிட்டு இருந்தா... இப்ப நான் ஏன் திருட்டுத்தனமா போய் தாலி கட்டப்போறேன்...?"-என சொல்ல...

    அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாய் செந்தில், "இப்ப கூட உன் இஷ்டப்படி, அதுவும் இந்து முறைப்படி திருச்செந்தூரில் தாலி கட்டறதுக்கு ஒத்துக்கிட்டு தான் டேவிட்டே வருகிறான். அது கூட உன் அண்ணனுக்கு புரியல... இத தடுக்குறதுக்கு ஐஞ்சு தடியன் களை கூட்டிட்டு துரத்திட்டு வரான் பாரு!" என கூற,

    அப்போது பின்னால் திரும்பி பார்த்த தியாகு, "டேய்... பக்கத்துல வந்துட்டாங்கடா நம்ம இனிமே மெயின் ரோட்டில் போய் பிரயோசனம் கிடையாது. வண்டிய ரைட்ல வுடு!" என சொல்ல, அந்த கார் பக்கத்தில் இருந்த சந்துக்குள் விரைகிறது.

    விடாமல் பின்னால் வந்து கொண்டிருக்கும் திவ்யாவின் அண்ணன் கும்பலும் துரத்துகிறது. திவ்யாவின் அண்ணன் ஒரு எம்.எல்.ஏ.விடம் கிட்டத்தட்ட பி.ஏ.வாக இருக்கிறவன். இந்து பற்று அதிகம் உள்ள ஒருவன்.

    தன் தங்கை திவ்யா, ஒரு கிறிஸ்தவனை காதலிக்கிறாள் என்று தெரிந்த நாளிலிருந்து, எப்படியாவது அவர்கள் காதலை தடுத்து, ஒரு இந்துவுக்கு தன் தங்கையை கல்யாணம் முடித்து வைக்க , பகீரத பிரயோசனம் செய்தான்.

    திவ்யாவிடம் நல்லவிதமாக பேசி, அவளை மூளை சலவை செய்து, அந்த காதலை மறக்கடிக்க செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய ,வெகுண்டு எழுந்தான் .

    அடுத்து அவனது முடிவு-அப்பாவின் சம்மதத்துடன் திவ்யாவுக்கு ஒரு இந்துப் பையனை திருமணம் செய்து வைப்பது தான்!

    அதற்கு கடந்த மூன்று மாதங்களாக முயற்சி செய்து ஒரு மாப்பிள்ளையும் பார்த்து விட்டான். மாப்பிள்ளை, தென்காசி பக்கம் மேலகரத்தில் சொந்த வியாபாரம் செய்யும் ஒரு இந்து பையன்.

    பெண்பார்க்கும் வைபவம் நடப்பதற்கு ஏற்பாடு செய்யும் சமயத்தில்தான், திவ்யா இப்படி ஒரு முடிவை எடுத்தாள். தன் காதலன் டேவிட்டிடம் யாருக்கும் தெரியாமல் பேசினாள்.

    இயக்குநர் A.வெங்கடேஷ்

    "எங்க வீட்ல எனக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க... எனக்கு உன்ன தான் புடிச்சிருக்கு !உன் கூடத்தான் வாழ்வேணு முடிவு பண்ணிட்டேன். ஆனா ஒண்ணு..என் கழுத்துல நீ தாலிய ஒரு இந்து கோவில்ல வைச்சுத்தான் கட்டணும்... ஓகேயா?" எனக் கேட்க,

    கொஞ்சம் கூட யோசிக்காம டேவிட்,"திவ்யா... இங்க பாரு, எங்க வீட்ட பொறுத்த வரைக்கும், என் காதலுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. உங்க அப்பா, உங்க அண்ணன், உங்க அம்மா எல்லாருக்கும் தான் நான் கிறிஸ்டின் என்ற ஒரே காரணத்துக்காக என்னை பிடிக்கவில்லை. எனக்கு எம்மதமும் சம்மதம்! உன் இஷ்டப்படி கல்யாணத்தை இந்து. கோவில்ல வைச்சு பண்ணிடலாம்..." அவனும் ஒத்துக்கொண்டான்.

    இதோ! அவர்கள் எடுத்த முடிவுபடி, திருச்செந்தூர் நோக்கி காரில் சென்று கொண்டு இருக்க, அவளது அண்ணன் பெருமாள், தன்நண்பர்களுடன் விரட்டிக் கொண்டிருக்கிறான்.

    திடிரென்று நெல்சன் காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, "எல்லாரும் இறங்குங்க.. நான் சொல்றபடி கேளுங்க. வண்டியை விட்டு எல்லோரும் இறங்குங்க..." என பரபரப்பாக கத்த, எல்லோரும் இறங்க, ஒரு மார்க்கெட் மாதிரி இருக்கக்கூடிய ஒரு ஏரியாவுக்குள், இவர்களை வேகமாக அழைத்துக் கொண்டு, நெல்சன் செல்ல, அனைவரும் கூட்டத்திற்குள் கலந்து விடுகிறார்கள்.

    இப்போது துரத்தி வந்த திவ்யாவின் அண்ணன் கோஷ்டி, கார் ஓரிடத்தில் பார்க் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து இறங்கி, காரை திறக்க முயல, கார் லாக் செய்யப்பட்டிருக்கிறது.

    திவ்யாவின் அண்ணன் பெருமாள், "டேய்... பிரில்லியண்டா காரை பார்க்கிங்ல போட்டு, இறங்கி கூட்டத்துல எஸ்கேப் ஆகி போயிட்டாங்கடா... விடக்கூடாது... வாங்கடா!..."

    அவர்கள் சுற்று முற்றும் எந்த பக்கம் போயிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்க, அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர், "என்ன தம்பி யாரை தேடுறீங்க..." என கேட்க,

    "இல்லைங்க ஐயா... ஒரு பொண்ணு... கூட ஒரு நாலு பசங்க... அப்படி யாராவது போனத பாத்தீங்களா..."

    "இதோ... இந்த பஜார்தெரு வழியா போயி, அந்த கடைசி சந்துல போறாங்க..."- அவர் கையை காட்ட,

    "டேய்... வாங்கடா..." அவர் காட்டிய திசையில் பெருமாள் ஓட, அவனது நண்பர்கள் அவனை தொடர்ந்தனர்.

    பெருமாள் நண்பர்களுடன் ஓடி வருவதைப் பார்த்த டேவிட் நண்பன் நெல்சன், "டேய்... பெருமாள் நம்மள பாத்துட்டு துரத்தி வரான்டா... டக்குனு பதுங்குவோம்!..."

    அவர்கள் ஒரு கடைக்குள் பதுங்க, ஒளிந்து இருக்கும் அவர்களை கிராஸ் செய்து, பெருமாளும் அவன் நண்பர்களும் ஓடுகிறார்கள். வேறொரு வழியாக வெளியே வந்த திவ்யா, டேவிட் மற்றும் டேவிட்டின் நண்பர்கள் மூன்று பேரும், அங்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறுகிறார்கள் .

    "பக்கத்தில் எந்த இந்து கோவில் இருக்கோ... அங்க போங்க..." என நெல்சன் கூற, "அருணாசல சுவாமி கோவில் இருக்கு... அங்க போலாமா?" என ஆட்டோகாரன் கேட்க," போங்க... போங்க..."ஆட்டோக்காரனை வேகப்படுத்த, ஆட்டோ மின்னலாய் செல்கிறது.

    அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் பெருமாளும், அவன் நண்பர்களும் தேடிக்கொண்டிருக்க, பெருமாளின் போனில் மெஜெஜ் ரிங் அடிக்கிறது.

    அவன் போனை எடுத்து பார்க்க, அதில் , "புதுத்தெரு அருணாசல சுவாமி கோவில்!"-என இருக்கிறது. அதை பார்த்த பெருமாள் கத்துகிறான். "அவங்க திருச்செந்தூர் கோவில் போகலடா... வாங்கடா...''

    அவர்கள் அங்கிருந்து வேகமாக கிளம்ப, இப்போது அருணாச்சலம் சுவாமி கோவில் முன்பு வந்து ஆட்டோ நிற்க, இவர்கள் இறங்குகிறார்கள்.

    திவ்யா கிட்டத்தட்ட டேவிட்டை இழுத்துக்கொண்டு கோவிலுக்குள் ஓடுகிறாள். கூடவே நண்பர்கள் ஓடுகிறார்கள். இரண்டு மாலைகளை வாங்கி கொண்டு, நண்பர்கள் ஓடி வர, ஹேண்ட் பேக்கில் தயாராக வைத்திருந்த தாலிய எடுத்து டேவிட்டிடம் கொடுக்கிறாள் திவ்யா.

    வேகமாக அவர்கள் கோவிலுக்குள் செல்ல முயல, கோவில் வாசலில், அவர்களை நிறுத்திய பூசாரி, "வீட்டுக்கு தெரியாம கல்யாணமா? அப்படி வந்தமா... போனமான்னெல்லாம்ல்இந்த கோவில்ல கல்யாணம் பண்ண முடியாதும்மா... அதுக்கெல்லாம் பார்மாலிட்டிஸ் இருக்குது...

    முதல்ல நீங்க சப் ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ்ல ரிஜிஸ்டர் பண்ணணும்... அந்த ரிஜிஸ்ட்றேஷன் நம்பர கொண்டு வந்து கோவில்ல காட்டி பணம் கட்டணும். அதுக்கு பிறகு நோட்டிஸ் போர்டுல இன்னார் இன்னார்க்கு கல்யாணம் அப்படின்னு ஒட்டி, அப்ஜெக்ஷன் எதுவும் வரலேனா 15 நாள் கழிச்சு கல்யாணம் பண்ணலாம். முறை எதுவும் தெரியாமல் திடீர்னு வந்து கல்யாணம் பண்ணணும்னா எப்படி? என சொல்ல ,

    "என்ன செய்வது?" என எல்லோரும் முழிக்க, டேவிட் கையை பிடித்து இழுத்து சென்ற திவ்யா, அங்கு கோவில் வாசலில் இருக்கக்கூடிய பிள்ளையார் முன்னாடி நிறுத்தி, "இங்க பாரு டேவிட்... யோசிக்க நேரமில்லை... இப்போ நல்ல நேரம் தான்... உடனே என் கழுத்துல தாலிய கட்டு" எனக் கூற, ஒரு கணம் டேவிட் திகைக்க, "என்ன யோசிக்கிற... எங்க அண்ணன் எப்ப வேணா வந்து நிப்பான்... கட்டு!"

    டேவிட் அவள் கழுத்தில் தாலியை கட்டி முடிக்கவும், கரெக்டாக தாலி கட்டி முடியவும் வந்து நின்றான் பெருமாள், தன் மொத்த கேங்குடன் !

    தாலி கட்டி முடித்தது... கல்யாணம் நடந்து விட்டது... என்ற தைரியத்தில் பெருமாளை ஒரு தைரியப் பார்வையுடன் எதிர் கொள்ள தயாராக நின்றாள் திவ்யா.

    அவள் அருகில் வேகமாக வந்த பெருமாள் டேவிட்டையும் திவ்யாவையும் மாறி மாறி கோபமாக பார்த்தான். அவள் கழுத்தில் தொங்கும் அந்த புதிய தாலி, அவனைப் பார்த்து கேலியாக சிரிப்பது போல் இருந்தது. பெருமாளின் முகம் இறுகியது.

    திவ்யா முகத்தின் அருகே வந்தவன் "இப்ப கூட... இங்கேயே உன்னை வெட்டிப்போட்டு எனக்கு போக முடியும். ஆனா, எப்போ நான், அப்பா, அம்மா, யாரும் வேண்டாம்னு முடிவு பண்ணி, இவன் முக்கியம்னு வந்துட்டியோ.. அதுவும் தாலிய... அவன் கையால வாங்கிட்டியோ... அப்பவே முடிஞ்சு போச்சு ..உனக்கும் எனக்கும் உள்ள அண்ணன்-தங்கை உறவு! இனி எனக்கு நீ தங்கச்சியே இல்லை... நான் உன் முகத்தில் முழிக்கவே மாட்டேன்...''- என கோபமாக சொல்லிவிட்டு அவன் திரும்பி சென்று பைக்கை எடுத்து செல்கிறான்.

    கிட்டத்தட்ட அழும் நிலைமைக்கு வந்துவிட்ட திவ்யாவை தொட்டு ஆறுதலாக தட்டிக் கொடுக்கிறான் டேவிட்.

    பக்கத்தில் வந்த தியாகு, "மாப்பிள்ளை... இப்ப டென்ஷன் ஓவர் ! நாம அருணாச்சலம் கோவில்ல போய் தான் கல்யாணம்கட்ட போறோம் என்கிறத நான் தான் திவ்யா அண்ணனுக்கு மெசேஜ் அனுப்பினேன்"- என கூற திவ்யா அதிர்ந்து பார்க்க,

    "ஆமா திவ்யா... சும்மா விரட்டிக்கிட்டே இருப்பான்... உருட்டிக்கிட்டே இருப்பான்... நாம இவனுக்கு பயந்து பயந்து ஓடணுமா? இதோ தாலியை கட்டியாச்சு... பெருமாள் உன் உறவை உதறிட்டு போய்ட்டான்ல... இனி நோ டென்ஷன். என்ன..நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் ஒண்ணா எப்படி வாழ்ந்து காட்டுறீங்க என்பதை பொறுத்து தான் உங்களுடைய காதல் ஜெயிச்சதா இல்லையானு தெரியும்'' என கூற,

    இடைமறித்த நெல்சன், "டேய்... வாய மூடு...இப்பதான் கல்யாணம் பண்ணிருக்காங்க அதுக்குள்ள பயமுறுத்தாத...," என கூற, திவ்யாவும் டேவிட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

    இதுவரை காதலர்களாக இருந்த அவர்கள் இப்பொழுது கணவன்-மனைவி! இனிமேல் நிதர்சன வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற பயம் அவர்களுக்கு லேசாக வரத் தொடங்கியது. உண்மையை சொல்லப் போனால், இந்த லேசான பயம்தான் அவர்களுக்குள் காதலையும் வரவழைத்தது.

    ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே டேவிட்டை முதன்முதலாக தன் தோழி மேரியின் வீட்டில், அவளது அண்ணணாக பார்த்தபோது, திவ்யாவுக்கு, அவனை பார்த்தாலே பிடிக்கவில்லை. பார்த்தாலே பிடிக்காமல் போன டேவிட் மீது காதல் வந்தது - ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான்!

    (தொடரும்)E-Mail: director.a.venkatesh@gmail.com

    Next Story
    ×