search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பலனை எதிர்பாராதே!
    X

    பலனை எதிர்பாராதே!

    • எதிர்பார்ப்புகள் எதுவுமின்றிச் செய்யக்கூடிய எந்தச் செயலும் சுமையாக இல்லாமல் சுகமாக மாறிப்போகும்.
    • கடமையைச் செம்மையாகச் செய்தால் போதும்; எந்தப் பலனும் தோல்வியாக அமையாமல் நன்மையாகவே பூக்கும்.

    பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வதில் ஆர்வம் காட்டும் அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    உழைப்பின் வியர்வை நெற்றியிலிருந்து நிலத்தில் விழுவதற்குமுன் உழைப்பிற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பழங்கால உழைப்பூதியக் கொள்கை குறிப்பிடுவதுண்டு. உழைப்பு என்றாலே அது ஊதியம் என்கிற பலனை எதிர்நோக்கிச் செய்யப்படுவதுதான். ஆனால் வாழ்க்கையில் மனிதராகத் தோன்றி நாம் செய்கிற எல்லாச் செயல்களுக்கும் ஏற்ற பலனையும், பாராட்டுக்களையும் உடனடியாக எதிர்பார்க்கக் கூடாது .

    நாட்டை ஆளும் மன்னன் ஒருவன் ஒரு ஞானியைப் பார்க்க அவரது ஆசிரமத்திற்குச் சென்றிருந்தான். அப்போது அவரைப் பார்த்துக் கேட்டான், "கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்று பகவத்கீதை கூறுகிறதே, நாட்டை ஆளும் மன்னன் நான், எனது ஆட்சித் திறத்தை மக்கள் எல்லோரும் பாராட்ட வேண்டும்! என்று எதிர்பார்க்கக் கூடாதா?.அது தவறா?". மன்னனின் கேள்வியைக் கேட்ட ஞானி, " உங்களின் இந்தக் கேள்விக்கு நான் சரியாகப் பதில் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் எனது ஆசிரமத்தில் ஒரு வாரம் விருந்தினராகத் தங்கியிருக்க வேண்டுமே! இயலுமா?" என்று கேட்டார். "ஓ! தாராளமாக!" என்று கூறிவிட்டு அங்கேயே பரிவாரங்களுடன் தங்கியும் விட்டான் மன்னன்.

    ஒருவாரம் ஆனது; ஞானியைப் பார்க்கச் சென்றான் மன்னன். " மன்னா! ஒரு வாரம் தங்கியிருந்தீர்களே! எங்கள் ஆசிரமச் சாப்பாடு எப்படியிருந்தது?" கேட்டார் ஞானி. " ஆஹா! பிரம்மாதம்!. இப்படியொரு சுவையான சாப்பாட்டை என் வாழ்நாளில் சாப்பிட்டதே இல்லை. ஆசிரமத்தில் உள்ள உங்களது தலைமை சமையல்காரரை, நான் நாட்டிற்குத் திரும்பும்போது உங்கள் அனுமதியுடன் உடன் அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளேன்; அதுமட்டுமல்ல!; அவரை எனது அரண்மனையின் தலைமைச் சமையல்காரராகவும் பணிநியமனம் செய்யவும் உத்தேசித்துள்ளேன்!" என்றான் அரசன்.

    சிரித்துக்கொண்டே ஞானி பேசினார், " சமையல் என்று வந்துவிட்டால், உணவைச் சுவையாகச் சமைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு சமையல்காரரின் கடமை. எங்கள் சமையல்காரர் அவரது கடமையைச் சரியாகச் செய்திருக்கிறார்; அதற்கான பலனாக அவர் எதிர்பார்க்காமலேயே அவருக்கு அரண்மனையில் பணி கிடைத்துள்ளது. ஆசைப்படுவது என்பது வேறு; எதிர்பார்ப்பது என்பது வேறு!. ஆசைப்படுவதற்கு அடுத்த நிலைதான் எதிர்பார்ப்பது. ஆசைப்படுவதே தவறு என்னும்போது, அதற்கு அடுத்த நிலையிலே இருக்கக் கூடிய எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டே போவதென்பது பேராசையென்னும் பெருங்குழியில் தள்ளிப், பெருநஷ்டத்தையல்லவா உண்டுபண்ணி விடும்?. ஒரு செயலைப் பயனை எதிர்நோக்கிச் செய்தால், அதில் நாம் வெற்றிபெற முடியாமல்கூடப் போகலாம். அதேவேளையில், அந்தச் செயலைப் பயனை எதிர்பார்க்காமல் செய்தால், அதன்மூலம் நாம் அடையப்போகும் பலனை நிச்சயம் யாராலும் தடுக்கவும் முடியாது" உறுதியாகச் சொன்னார் ஞானி. மன்னன் தெளிவான பதிலைப் பெற்றுக்கொண்டான்.

    இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டு உலகம், செயல்கள் நடக்கின்றனவோ என்னவோ, அதற்கு முன்னதாகவே கைமேல் பலன் செயலை முந்திக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிற விரைவான உலகமாக இருக்கிறது. 'ஆரோகணம்' 'அவரோகணம்' என்று 'தொடக்கம்' 'முடிவு' குறித்து இசையுலகம் குறிப்பிடும். எந்தவொரு தொடக்கமும் மெதுமெதுவாகத் தொடங்கிப், பிறகு நிலைத்த கதியில் சென்று, நிறைவாக வேகம் குறைத்து மெதுமெதுவாகத் தேய்ந்து நின்று விட வேண்டும். ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகம் எடுத்தவுடனேயே அதிகபட்ச வேகத்தை அந்த வாகனம் எத்தனை நொடிகளின் பகுதிகளில் எட்டிப்பிடிக்கும்?. என்று கேட்கிற அவசர உலகமாக இருக்கிறது. கடமைகளின் செயல் வேகங்களைவிடப் பலன்களின் வேகங்கள் விரைவு மிக்கனவாக எதிர்பார்க்கப்படுகின்றன.

    பொதுவாக, நிகழ்வுகளின் பதிவாகப், புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன; குரல் பதிவுகள் செய்யப்படுகின்றன; வீடியோப் பதிவுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒருகாலத்தில், இவற்றைக் கலைக் கூடங்களுக்கு எடுத்துச் சென்றால் தான், புகைப்படங்களாக, ஒலித் தொகுப்புக்களாக, ஒலிஒளிப் படங்களாக கலையாக்கம் செய்து , ஆல்பங்களாகவோ, சிடிக்களாகவோ உருவாக்கி அடுத்தவர் பார்வைக்கு அனுப்பிவைக்க முடியும். பெரிய பெரிய புகைப்படக் கருவிகள், ஒலிவாங்கிகள், ஒலிப்பதிவு இயந்திரங்கள், வீடியோ கேமராக்கள் போன்றவை அடிப்படைத் தேவைகளாகவும் இருந்தன.

    இன்றைய அவசர டிஜிட்டல் உலகத்தில் செல்பேசி ஒன்றே போதுமானதாகக் கட்டமைக்கப் பட்டுவிட்டது. ஆண்ட்ராய்டு போனில் சகலமும் வந்து விட்டன. எடுக்கின்ற புகைப்படங்கள், வீடியோக்கள், குரல் இசைப் பதிவுகள் அனைத்தையும், முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், வாட்ஸ்அப், யூடியூப் என சகலத்தின் வழியாகவும் சகலத்தையும் அனுப்பிவிடும் மாயக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சொந்தப் பதிவேற்றங்கள் மட்டுமல்ல; அடுத்தவர் அனுப்பியவை; அடுத்தவர்க்கு அடுத்தவர் அனுப்பியவை என முன்மொழிந்து அனுப்புபவைகளும் உண்டு.

    இந்த டிஜிட்டல் தளங்களில் அனுப்பி வைப்பதோடு மட்டும் இந்த வேலைகள் நின்றுவிடுவதில்லை; அப்படி நின்றுவிட்டால், 'கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!' என்கிற கோட்பாடு இங்கே கனஜோராகக் காப்பாற்றப்படுகிறது என்கிற முடிவுக்கு நாம் வந்து விடலாமே!. முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளம், வாட்ஸ்அப், யூடியூப் போன்றவற்றில் செய்திகளை அனுப்பிவிட்டுத், தொடர்ந்து நொடிக்கொருதரம் அவற்றைத் திறந்து, "இதுவரை எத்தனை விருப்பங்கள் வந்திருக்கின்றன? எத்தனை கருத்துக்கள் பதிவிடப்பட்டிருக்கின்றன? எத்தனை எண்ணிக்கையில் வீடியோக்கள் சுழலவிடப் பட்டிருக்கின்றன? இவர்களில் யார் யார் நமக்கு வேண்டியவர்கள்? யார் யார் புதியவர்கள்? காலையில் ஒரு நண்பனுக்கு 'வெகு பிரம்ம்மாதம்!' என்று ரொம்பச் சாதாரணமான செய்திக்குக் கருத்துத் தெரிவித்திருந்தோமே அவன் நமக்குப் பிரதிபலனாக ஏதேனும் பாராட்டுக் கருத்துத் தெரிவித்திருக்கிறானா?" என்று நெஞ்சம் பதைபதைக்கக், கண்கள் பரபரக்கப் பார்த்துப் பார்த்துப் பதற்றமடைகிறார்களே! இதை எங்கே போய்ச் சொல்ல?.

    ஒரு விதையை நட்டுவைத்துவிட்டு, அது செடியாகி, மரமாகிப், பூப்பூத்துக், காய் காய்த்துப் பழமாகும்வரை காத்திருக்கும் ஒரு பாமரக் கிராமத்து மனிதனுக்கு இருக்கக் கூடிய பொறுமைகூட, இன்றைய நாகரிக நகர மனிதனுக்கு இல்லையென்னும்போது, கடமையைச் செய்துவிட்டுப் பலனை எதிர்பாராத பண்பை அவனிடம் எப்படி எதிர்பார்ப்பது?.

    இன்றைய அவசர உலகில் மட்டுமல்ல, எதையுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் எந்தக் காலத்திற்கும் வந்துசேரக்கூடிய பெரும் சாபம் 'பரபரப்பு' 'பதற்றம்' 'அமைதியின்மை' 'ரத்த அழுத்தம்' மன அழுத்தம்' 'கொழுப்பு' 'சர்க்கரை' 'மாரடைப்பு' போன்ற நோய்கள்தாம். எதிர்பார்ப்புகள் எதுவுமின்றிச் செய்யக்கூடிய எந்தச் செயலும் சுமையாக இல்லாமல் சுகமாக மாறிப்போகும்; கடமை என்பதே எதிர்பார்ப்புகள் எதுவுமின்றிச் செய்யப்படுவதுதான்; அப்படிச் செய்யும்போது விளைவு நேர்முறையானாலும் எதிர்மறையானாலும் மனம் எந்தச் சலனத்திற்கும் ஆளாகாமல் அமைதியாகவே இருக்கும்.

    ஒரு நாட்டின் ராஜாவை அரண்மனையில் பார்க்க வந்திருந்தார் அமைச்சர். ஒரு ஆப்பிள் பழத்தை நறுக்கிக் கொண்டிருந்த ராஜா, அமைச்சரைப் பார்த்ததும் அவசரத்தில் கையின் சுண்டுவிரலை நறுக்கிக் கொண்டார். அப்போது அரசரைப் பார்த்து ' எல்லாம் நன்மைக்கே!" என்று கூறினார் அமைச்சர். அரசருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது; இருந்தாலும் அரண்மனை வைத்தியர் வந்து கட்டுப்போட்டுவிட்டுச் செல்லும் வரை பொறுத்துக் கொண்டார். " என்ன அமைச்சரே! நான் சுண்டுவிரலை நறுக்கிக் கொண்டிருக்கிறேன் நீங்கள் என்ன எல்லாம் நன்மைக்கே! என்று நக்கலாகக் கூறுகிறீர்கள்?" அரசர் கேட்டார். அரசே! எல்லாம் நன்மைக்கே! என்பது நான் அடிக்கடி கூறும் சுபாவப் பேச்சு! அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்!. நல்லது. என்னைத் தற்போது நீங்கள் அவசரமாக வரச் சொன்னதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?" பவ்யமாகக் கேட்டார் அமைச்சர்.

    " அமைச்சரே! முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், பரிவாரங்களும் ஏதுமில்லாமல் திடீரெனக் காட்டிற்குத் தனியாக வேட்டைக்குச் செல்லலாமெனத் தீர்மானித்திருக்கிறேன்!. நீங்கள் வேண்டுமானால், என்னோடு இணைந்து கொள்ளலாம்!. கிளம்புங்கள்! ரெண்டுபேரும் வேட்டைக்குச் சென்று வருவோம்! என்று வேட்டைக்கு மந்திரியையும் அழைத்தார் ராஜா. " அரசே! மன்னிக்க வேண்டும்!. எனக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அரசாங்க வேலைகள் நிறைய இருக்கின்றன; நான் இங்கிருந்து அவற்றைக் கவனிக்க வேண்டும்; நீங்கள் வேண்டுமானால் திட்டமிட்டபடி, காட்டிற்கு நீங்கள் மட்டும் வேட்டைக்குச் சென்று வாருங்கள்!" என்றார் அமைச்சர்.

    இதைக் கேட்ட அரசருக்குக் கோபம் வந்துவிட்டது." உங்களுக்கு வேலை இருக்கிறது! என்றால், நான் ஏதோ வேலையற்றுப்போய் வேட்டைக்குப் போகிறேன் என்று கேலியா பேசுகிறீர்கள்?. யாரங்கே! இந்த அமைச்சரைப் பிடித்து, நான் காட்டிலிருந்து திரும்பி வரும்வரை சிறையில் போடுங்கள்!' என்று உத்தரவிட்டான் மன்னவன். " எல்லாம் நன்மைக்கே!" என்று கூறிவிட்டுச் சிறைக்குச் சென்றார் அமைச்சர். காட்டின் எல்லைவரை பரிவாரங்களோடு சென்ற அரசர், காட்டிற்குள் அவர்மட்டும் தனியாக வில் அம்பு சகிதம் வேட்டைக்கு நுழைந்தார்.

    நடுக்காட்டிற்குள் அரசர் இருக்கும்போது நரமாமிசம் சாப்பிடும் காட்டு மனிதர்களிடம் மாட்டிக்கொண்டார். அன்று பவுர்ணமி நாள்; அவர்களின் குலதெய்வத்திற்கு அரசரைப் பலிகொடுத்து, அவர் உடம்பை விருந்தாக உண்பது என முடிவெடுத்தனர் காட்டு மனிதர்கள். பலி கொடுக்கும் மனித உடம்பில் ஒச்சம் குறை எதுவுமில்லாமல் இருக்கிறதா? என ஒருவன் பரிசோதனை செய்தான்; அரசரின் சுண்டுவிரல் நறுக்கப்பட்டதைப் பார்த்ததும் அரசரை அந்தக் கூட்டம் பலிகொடுக்காமல் நிராகரித்து விடுவித்து விட்டது.

    தப்பித்தோம் பிழைத்தோம் என அரண்மனை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த அரசரின் மனவோட்டத்தில், 'சுண்டுவிரல் ஒச்சத்தால் நாம் பலியிலிருந்து தப்பித்தோம்! எல்லாம் நன்மைக்கே!' என்று நினைத்துக் கொண்டார். வந்தவுடன் அமைச்சரை விடுதலை செய்யச் சொல்லி, அவரிடம் கேட்டார், "ஆப்பிள் நறுக்கும்போது சுண்டுவிரல் காயம் கண்டு எல்லாம் நன்மைக்கே! என்றீர்கள்! நான் தப்பித்தேன். உங்களைப் பிடித்து சிறையில் போடுங்கள் என்று நான் சொல்லும்போதும்,ஏன் 'எல்லாம் நன்மைக்கே!' என்று கூறினீர்கள்?" ராஜா கேட்டார்.

    "அரசே! நான் சிறை செல்லாமல், உங்களோடு வந்திருந்தால், காட்டில் காயம் காரணமாக உங்களை நிராகரித்த கூட்டம், என்னைப் பரிசோதித்திருந்தால்? உடம்பில் எந்த அங்கக் குறையுமில்லாத நானல்லவா பலியாகியிருப்பேன்? சிறைக்குச் சென்றதும் நன்மைக்குத் தானே? எல்லாம் நன்மைக்கே!" என்றார் அமைச்சர்.

    கடமையைச் செம்மையாகச் செய்தால் போதும்; எந்தப் பலனும் தோல்வியாக அமையாமல் நன்மையாகவே பூக்கும்.

    தொடர்புக்கு 94431 90098

    Next Story
    ×