search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தேடினேன் வந்தது!
    X

    தேடினேன் வந்தது!

    • தங்கத்தைத் தேடித்தான் எடுக்கணும்.
    • கடலுக்குள் இறங்கித் தேடினாதான் முத்து கிடைக்கும்.

    'உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன்முன் நிறுத்து; அவற்றிலிருந்து நல்ல செயல்கள் விளையும்'.

    -சுவாமி விவேகானந்தர்

    வெயில் சுள்ளென்று அடித்தது. அந்த ஒளி, ஜன்னல் வழியாக படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது. எனினும், போர்வையைக் கால்முதல் தலை வரை இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

    'வெயில் அடிக்கிறதுகூட தெரியாம அப்படி என்ன தூக்கம்' - கத்தினார் அப்பா.

    'இப்படி தூங்கினா வெளங்குமா, எழும்புடா' - அவனைப் பிடித்து உலுக்கினாள் அம்மா.

    'இப்ப என்ன அவசரம். கொஞ்சம் நிம்மதியா தூங்கவிட மாட்டீங்களே' என்று சலித்துக்கொண்டு, மறுபக்கம் திரும்பிப் படுத்தான் அவன்.

    'டேய், காலேஜ் முடிச்சி ரெண்டு வருஷமாச்சி. வேலைக்கு போகணுங்கிற எண்ணமே உனக்கு இல்லையா?'

    'சும்மா கத்தாதம்மா. உலக நிலவரமே உனக்குத் தெரியல. இப்ப எங்க வேலை கிடைக்குது. எல்லோருக்கும் இதே பிரச்சனைதான்'.

    'உங்கூட படிச்சவங்கெல்லாம் வேலை பார்க்கிறாங்க, சம்பாதிக்கிறாங்க. நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்கிறே?'

    'எனக்கு வேலை கிடைக்கல...என் தலையெழுத்து'.

    'அதெல்லாம் ஒண்ணுமில்ல. இப்படி படுத்துக் கிடந்தா எப்படி கிடைக்கும்?'

    'உனக்கு தினமும் இதே பாட்டுதான். என்னை என்னதான் பண்ணச் சொல்ற?'

    'தேடணும்...தேடினாதான் கிடைக்கும். எது தேவையோ, அது கிடைக்குமட்டும் தேடிட்டே இருக்கணும்' - அழுத்தமாகச் சொன்னாள் அம்மா.

    அந்த வார்த்தைகள் அவனுக்குள் ஞான மந்திரம்போல் பாய்ந்தன. போர்வையை உதறிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    'ஆமாண்டா! தங்கத்தைத் தேடித்தான் எடுக்கணும். கடலுக்குள் இறங்கித் தேடினாதான் முத்து கிடைக்கும். அவ்வளவு ஏன்; காக்காகூட தேடித் தேடிக் குச்சிகளைப் பொறுக்கிதான் தன்னோட கூட்டைக் கட்டுது. தேனீ பல மைல்கள் பறந்துதான் தேனை சேகரிக்குது. நல்ல விஷயங்களைத் தேடித்தான் பெற முடியும்' என்று சொல்லிவிட்டு, அவனுக்குக் காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள் அம்மா. அதற்குள் அவன் குளித்து வந்து, வேலை தேடுவதற்கான முனைப்புடன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

    நம் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கமே தேடல்தான். விடிந்ததுமே ஒவ்வொரு ஜீவராசியும் தன் வாழ்விற்கான தேடலைத் தொடங்குகிறது. தேடல் இல்லையெனில், வாழ்வின் ஓட்டத்திற்கான அவசியம்தான் என்ன!

    யாருக்கும் ஓர் இலக்கு அவசியம். அப்படியானால்தான், அதற்கு நேராய் பயணிப்பதற்கான உந்துதலைப் பெற முடியும். தேடலுடன் உற்சாகமும் வேகமும் உண்டாகும். இலக்கை நோக்கிய செயற்பாடுகளில் உடலும் உள்ளமும் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையின் மீதான விருப்பத்தை மேம்படுத்தும்.

    எந்த லட்சியமும் இல்லாமல் பொழுதை வீணடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வாழ்க்கையும் புரியாது. காலத்தின் அருமையும் தெரியாது. வீண்கதைகள் பேசிப் பேசியே சிலர் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். விழிப்பற்ற நிலையில் சிலர் தங்கள் வழியைத் தவறவிட்டுவிடுகிறார்கள்.

    கவிஞர் தியாரூ

    கடுமையான கோடை வெயில். அனல் தெறித்தது. ஒருவன் வேக வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தான். சூடு தாங்க முடியவில்லை. வெகுதூரம் கடந்து ஒரு மரத்தைக் கண்டான். ஓடோடிச் சென்று அந்த மரநிழலில் ஒதுங்கினான். சொர்க்கத்தைக் கண்டதுபோல் மகிழ்ந்தான்.

    அந்த மரத்தைப் பார்த்து, 'மரமே! உன்னைக் கண்டடைய, நான் நான்கு மணிநேரம் வெயிலில் நடந்தேன்' என்றான்.

    மரம் அவனை நோக்கி, 'மனிதா! நான் இதே இடத்தில் உனக்காக நாற்பதாண்டு காலம் காத்திருந்தேன்' என்றது.

    தேடல்தான் ஞானப் பயிற்சி. தேடத் தேட பார்வை விரிவடைகிறது. பாதை தெரியவருகின்றது. தேடலில் நாம் ஞானம் பெறுகின்றோம்

    தேடலைப் பற்றிய தெளிவில்லை என்றால், எதுவும் பிடிபடாது. 'என்ன தேடுகிறோம்' என்பதே தெரியாமல், சிலர் தேடித் தேடிக் களைத்துப் போவார்கள்.

    'என்ன தேடுகிறீர்கள்?'

    'தெரியாது.'

    'எதற்காகத் தேடுகிறீர்கள்?'

    'எல்லோரும் தேடுகிறார்கள். அதனால் நானும் தேடுகிறேன்'.

    இப்படி வெற்றுத் தேடல்களில், அங்குமிங்கும் திரிந்து கொண்டிருப்பவர்கள் உண்டு. 'ரொம்ப பிசி' என்பார்கள். இருபத்து நான்கு மணிநேரம் போதாது என்பதுபோல் காட்டிக் கொள்வார்கள். என்ன பயன்? அர்த்தமற்ற அலைச்சல்களில் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருப்பார்கள்.

    நமக்குத் தெளிவான நோக்கம் வேண்டும். அதற்கான முயற்சிகள் அவசியம். அப்படியெனில், இலக்கை அடைவது நிச்சயம்.

    இன்று நிறைய வாய்ப்புகள். இளைஞர்கள் தங்களுக்கான பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனமாக இருக்க வேண்டும். எந்தத் துறையில் தங்களுக்கு விருப்பம்; எதைக் கற்றுத் தேர்ந்தால் மிகச்சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    'என் நண்பன் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். அதனால் நானும் அதே கல்லூரியில் சேர்ந்தேன்' என்கின்றவன் இடறத்தானே செய்வான். பேருந்து நிலையத்தில் நிற்பவர்கள் எல்லோரும் ஒரே பேருந்தில் ஏறுபவர்கள் அல்ல. வெவ்வேறு நோக்கங்கள். வெவ்வேறு பயணங்கள்.

    நமக்கானதைப் பற்றிய புரிதல் நமக்கு முக்கியம். முன்னால் ஒருவன் தனக்கானத் தேடலில் நடக்கின்றான். எந்த சிந்தனையுமின்றி அவனுக்குப் பின்னால் நாம் நடந்து கொண்டிருந்தால், நம் வாழ்க்கை வீணில் கழியுமன்றி, நமக்கு வேறென்ன பயன்!

    தேனீக்கள் ஒருபோதும் குப்பைக்கூழங்களில் தேனைத் தேடுவதில்லை. தேன் இருக்கும் மலர்களைத் தேடிச் செல்லும் ஞானம் அதற்கு உண்டு. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அது.

    நமது தேடல்கள் உன்னதமானவையாய் இருக்க வேண்டும். அவற்றின் உயரமே நம் வாழ்வின் உயரம். அதே சமயம், தேடலில் நிதானம் மிக அவசியம். அவசரப்படுபவர்களுக்கு பதற்றம் ஏற்படும். இதயம் படபடக்கும். உடல் தளரும். தடுமாற்றமே மிஞ்சும்.

    அந்தத் தடுமாற்றம்தான் குறுக்கு வழியில் மனதை இழுக்கும். நாளை மறுநாள் பெற வேண்டியதை, இன்றைக்கே அடையத் துடிக்கும்போதுதான் தேடலின் பாதை தவறாகிவிடுகின்றது.

    தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள விரும்பினான் ஓர் இளைஞன். அதற்குரிய பயிற்சியாளரை அணுகி, 'இக்கலையில் நான் தேர்ச்சி பெற எத்தனை வருடங்கள் தேவைப்படும்' என்று கேட்டான்.

    'பத்து வருடங்கள்' என்றார் பயிற்சியாளர்.

    அந்த இளைஞனின் முகம் சட்டென்று மாறியது. பயிற்சியாளர் சொன்னதில் அவனுக்கு உடன்பாடில்லை.

    மீண்டும் அவரிடம், 'இந்தக் கலையைத் துரிதமாகக் கற்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் கூடுதலாகவே பயிற்சி செய்வேன். அப்படியானால் எத்தனை வருடம் தேவைப்படும்' என்று கேட்டான்.

    'இருபது வருடங்கள்' என்றார் பயிற்சியாளர். அந்த இளைஞன் திடுக்கிட்டான்.

    'அவசரமும் ஆத்திரமும் உதவாது. இலக்கின் மீது உள்ள ஆர்வத்துடன் நிதானம், உறுதி ஆகியவை மிக முக்கியபானவை' என்றார் பயிற்சியாளர்.

    இன்று பலரிடம் இருக்கும் பிரச்சனை, நிதானமின்மை. வேகமாக சம்பாதிக்க வேண்டும்; அதிவிரைவாக முன்னேறிவிட வேண்டும் என்கிற எண்ணம்தான் அவர்களை உந்தித் தள்ளுகிறது. அதன் விளைவு? தவறான வழிகளில் பொருளீட்ட முற்படுகிறார்கள். லஞ்சம் வாங்கத் துணிந்துவிடுகிறார்கள்.

    தேடுதல் நிதானமாக இருந்தால் மட்டுமே, செல்கின்ற வழி நேர்மையானதாக இருக்கும். 'நல்ல பெயர்' என்பது தேடிக் கிடைப்பதல்ல; அது நம் செயல்களால் கிடைப்பது. நிம்மதி என்பது யாரிடமிருந்தும் வாங்கக்கூடியது அல்ல. அது நம் நல்லெண்ணங்களால் நமக்குள் வரக்கூடியது.

    இயற்கை எழில்சூழ்ந்த ஓர் அழகிய நகரம். அதன் முகப்பில், கையில் நீண்ட கோலுடன் ஒரு பெரியவர். அவர்தான் அந்நகருக்குக் காவல். ஒருநாள் வேற்றூரிலிருந்து பரபரப்புடன் ஒரு மனிதன் அங்கு வந்தான்.

    காவலாளியான அந்தப் பெரியவரிடம், 'ஐயா, இந்த ஊர் எப்படி, மக்கள் எப்படி?' என்று கேட்டான்.

    'ஏன் கேட்கிறாய். இங்கு குடிவரப் போகிறாயா?' என்று திருப்பிக் கேட்டார் பெரியவர்.

    'ஆமாம் ஐயா. தான் தற்போது வசிக்கின்ற ஊர் படுமோசம். நல்லவங்க யாரும் கிடையாது. எப்பவும் வம்பு வாதங்கள் சண்டைகள்தான். நிம்மதியே இல்ல. அதனாலதான் கேட்கிறேன், இந்த ஊர் எப்படி?'

    'இந்த ஊர் ரொம்ப ரொம்ப மோசம். சாதிச்சண்டை, மதச்சண்டை, கலவரம் எப்பவும் இருக்கும். நீயோ நிம்மதியைத் தேடுகிறாய். உனக்கு இந்த ஊர் சரிப்படாது' என்று சொல்லி அந்த மனிதனை அனுப்பிவிட்டார்.

    சிறிது நேரத்தில் இன்னொருவன் அங்கு வந்தான்.

    'ஐயா, நான் தொலைதூர ஊர்க்காரன். என் ஊர் மிகவும் நல்ல ஊர். மக்கள் நல்லவர்கள். ஆனால் தற்போது அங்கு பஞ்சம். அதனால் இங்கு வந்து வியாபாரம் பண்ண விரும்புகிறேன். இந்த ஊர் எப்படி?' என்று கேட்டான்.

    'அருமையான ஊர். அன்பான மக்கள். நீ இங்கு நல்லபடியா வியாபாரம் பண்ணி, மகிழ்ச்சியாய் வாழலாம்' என்று கனிவுடன் கூறினார் பெரியவர்.

    இதை கவனித்துக் கொண்டிருந்த ஒருவன், அந்தப் பெரியவரைப் பார்த்து, 'ஐயா, முதலில் வந்த நபரிடம் இது மோசமான ஊர் என்றீர்கள். ஆனால், பின்னர் வந்த மனிதனிடம் அருமையான ஊர் என்றீர்களே, ஏன்?' என்று வியப்புடன் கேட்டான்.

    'குறைகளையே காணும் மனதின் தேடல், சொர்க்கத்திலும் நிறைவைக் காணாது. நல்ல மனதின் தேடல் ஒருபோதும் சலித்துக் கொள்ளாது. அந்தத் தேடல்தான் நன்மை பயக்கும். மனம் எப்படியோ அப்படிதான் வாழ்க்கை' என்றார் பெரியவர்.

    மனதை நல்ல நிலையில் வைத்திருப்பவர்களுக்கே தேடல் சுகமானது. பணம், பொருள், புகழ், பதவி என நாம் எதை வேண்டுமானாலும் தேடலாம். எனினும், அனைத்திலும் உன்னதமான தேடல் எது தெரியுமா? ஞானத் தேடல்தான்!

    ஞானத்தைத் தேடிப் பெற்றுக் கொண்டால், மற்ற நலன்கள் யாவும் தாமாக நம்மை வந்தடையும். எனவே, நல்லவற்றை நாடுவோம்; ஞானத்தைத் தேடுவோம்.

    போன்: 9940056332

    Next Story
    ×