search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உசுரே நீ தானே!... அத்தியாயம்-3
    X

    உசுரே நீ தானே!... அத்தியாயம்-3

    • திவ்யா, “தெரியும்மா... அப்பாவ பத்தி, அண்ணன பத்தி எல்லாம்‌ தெரியும்.
    • வீட்டுக்குள்‌ இருந்து கொண்டே, உங்களுக்கு கடிதம்‌ அனுப்புவது வேடிக்கையா தான்‌ இருக்கிறது.

    ஹோட்டலில் டிபன் சாப்பிட்டு முடித்துவிட்டு காரில் சென்று கொண்டிருந்தனர். டேவிட் நண்பர்கள் பின்னால் காரில் வர, முன்னால் டேவிட் ஓட்ட, அருகில் அப்பா அமர்ந்திருக்க, பின் சீட்டில் அம்மா தோளில் சாய்ந்தபடி திவ்யா, "எங்கம்மா போறோம்? எதுவுமே சொல்லாம கூட்டிட்டு போறீங்க..."- என கேட்க..

    திரும்பிப் பார்த்து, சின்ன புன்னகையுடன் அப்பா... "சஸ்பென்ஸ்... ஏ ராஜேஸ்வரி... தயவு செய்து அவகிட்ட அதை நீ சொல்லிராத.." என சொல்ல அம்மாவும், "ஆமாண்டி... அப்பாவும், நானும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கோம்..." எனக் கூற சின்ன சிரிப்புடன் அதை ஆமோதித்த திவ்யா, சற்று நினைவுகளை பின்னோக்கி செலுத்தினாள்.

    "என்னடி... சொல்ற?- கிச்சனில் சமையல் செய்துகொண்டிருந்த அம்மா அதிர்ந்தாள்" அம்மா... நான் டேவிட்னு ஒரு கிறிஸ்டியன் பையன லவ் பண்றேன்..." எனஅம்மாவிடம் சொல்லவும், அவள் அதிர்ந்ததும் திவ்யா எதிர்பார்த்த ஒன்றுதான்!

    திவ்யா மட்டுமல்ல. எந்த பெண்ணும் அவள் அம்மாவிடம் 'நான் ஒரு பையனை லவ் பண்ணுகிறேன்' என்று சொன்னால், அந்த அம்மா இப்படித்தான் ரியாக்ஷன் பண்ணுவார்கள் என்பது திவ்யாவுக்கு தெரியும் என்பதால் அம்மாவின் அதிர்ச்சியை அவள் கண்டு கொள்ளாமல், காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள்.

    ஏண்டி இவ்ளோ பெரிய விஷயத்தை சாதாரண மா சொல்லீட்டு நீ பாட்டுக்கு காய வெட்டிட்டு இருக்க... உங்க அப்பாவுக்கு தெரிஞ்சது... என்னையும் உன்னையும் வெட்டி போட்டுருவாரு!" எனக் கூற...

    "அது தெரிந்ததால் தானே நான் உன்கிட்ட சொல்றேன்... நீ பக்குவமா அப்பா கிட்ட எடுத்து சொல்லி எனக்கும் அந்த டேவிடுக்கும் கல்யாணம் முடிச்சு வச்சிரு" எனக் கூற...


    "எடு செருப்பே...நானே இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வராம இருக்கேண்டி... இப்படி தலையில கல்ல போட்டுட்டு இதை வேற உங்க அப்பா கிட்ட நான் சொல்லனுமாக்கும்..."- தொண்டை கரகரக்க அழுகை வர, அம்மா சமையலை, அப்படியே நிறுத்திவிட்டு கிச்சன்ல இருந்து வெளியேறினாள்.

    பின்னாடியே வந்த திவ்யா, "அப்பாவும் அண்ணனும் தான் எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவார்கள் என்றால்... நீயும் ஏண்மா டென்ஷன் ஆகுற? கொஞ்சம் புரிஞ்சுக்கோ..." எனக் கூற..

    "என்னடி புரிஞ்சுகிறது... அதுவும் உங்க அப்பாவும், உன் கோவக்கார அண்ணனும், இந்து மதத்துல அப்படி ஒரு முனைப்பாக உள்ளவங்க... அவங்க கிட்ட போயி இந்த மாதிரி... உங்க பொண்ணு ஒரு கிறிஸ்டின் பையன லவ் பண்றாளாம் ..அவனை தான் கல்யாணம் முடிப்பாளாம்னு சொன்னால்...என்ன செய்ய போறாங்களோ..." - என கூறி சோபாவில் தளர்ந்து அமர்ந்தாள் அம்மா.

    திவ்யா, "தெரியும்மா... அப்பாவ பத்தி, அண்ணன பத்தி எல்லாம் தெரியும். அதான், முதல்ல உன் கிட்ட சொன்னேன் . உனக்கு நான் ஒரு கிறிஸ்டின் பையன கல்யாணம் பண்றதுல்ல உடன்பாடா... இல்லையா. அதை சொல்லு முதல்ல..." என கேட்க ,அம்மா வெறித்த பார்வை பார்த்தாள்.

    திவ்யாவும் 'அம்மா என்ன சொல்ல போகிறாள்' என்று ஆர்வமாகவே பார்க்க, ஒருகணம் கண்மூடி நிதானித்த திவ்யாவின் அம்மா நிமிர்ந்து, "இங்க பாருடி.. எனக்கு நீ உனக்கு பிடிச்ச கல்யாணம் பண்ணிக்க எந்த பிரச்சனையும் இல்லை... ஆனால் உங்க அப்பா உன்னோட இந்த முடிவுக்கு உடன்பாடுன்னு சொல்லணும். அவருக்கு உடன்பாடில்லை என்றால், அவர எதிர்த்து எல்லாம் என்னால உனக்கு சப்போர்ட் பண்ண முடியாதுமா.." என சொல்ல,

    ஒரு மெலிதான சிரிப்பை உதிர்த்த திவ்யா, "உனக்கு உடன்பாடுதான,! அது போதும்… அப்பாவை எப்படி கரெக்ட் பண்ணனும்னு எனக்கு தெரியும்! அத நான் பாத்துக்குறேன்… எனக்காக ஒரு வாரம் அப்பா கிட்ட இத பத்தி நீ வாயவே திறக்காத... சரியான நாளா பார்த்து நானே அப்பா கிட்ட சொல்லிக்கிறேன்..." என கூறினாள், திவ்யா.

    அவளது கையை ஆதரவாக பிடித்துக் கொண்டஅம்மா, திவ்யாவை பார்த்து உங்க அப்பா ஒத்துக்க போற ஆளுன்னு எனக்கு நம்பிக்கை இல்லடி. அப்படியே அவரு ஒத்துக்கொண்டார் என்றால் கூட உங்க அண்ணன் ஒத்துக்க மாட்டான்டி... அவன் ஒத்துக்கவே மாட்டான் ! எனக்கு நல்லாவே தெரியும்... என அம்மா பதற,

    "எனக்கு அவன பத்தி கவலையே கிடையாது. அரசியல், கட்சி, ஆன்மீகம் அப்படின்னு திரிகிறவங்க கிட்ட எதை சொல்லியும் உணர வைக்க முடியாது... ஆனால் நீங்கள் ரெண்டு பேரும் சப்போர்ட் பண்ணா இந்த கல்யாணத்தை, நான் விரும்பின டேவிட்டோட நடத்திடுவேன்...' என திவ்யா தீர்க்கமாக சொல்ல, ஒரு பெருமூச்சுடன் அவளையே பார்த்தால் திவ்யாவின் அம்மா மரகதம்.

    அந்த ஒரு வாரமும் அப்பாவும் வழக்கம் போல வேலை விஷயமா வெளியே போறது, வீட்டுக்கு வந்து சாப்பிடுவது, ரெஸ்ட் எடுக்கிறது, என இருக்காரே தவிர, திவ்யாவோட கேஷுவலா பேசுற மாதிரி எதுவும் பேசவே இல்லை.

    திவ்யாவுக்கு மெதுவா அம்மா மேல ஒரு சந்தேகம்! எனக்கு தெரியாம ஒரு வேலை அப்பாட்ட சொல்லி இருப்பாளோ? ஒரு நாள் அதையும் அம்மாவிடம் கேட்டாள்."என் லவ் மேட்டரை பற்றி அப்பா கிட்ட ஏதாவது சொன்னியா...?" என அவள் கேட்டதும்,


    "போடி இவளே... நான்தான் அதை நீயே உங்க அப்பாகிட்டபேசிக்கோ. அவருக்கு ஓகேன்னா எனக்கு ஓகே ன்னு சொல்லிட்டன் இல்ல!"- என கூறி அம்மா முகத்தை திருப்பிய படி போக,

    "அம்மா நான் உன் பொண்ணு. எங்கிட்டேயே போட்டு வாங்குறியா. நான் சொன்ன அன்னைக்கே, உனக்கு என் லவ்வுக்கு ஓகேன்னு தெரியும்டி... '- என மனசுக்குள் சிரித்தபடி சொல்லிக் கொண்ட திவ்யா, அப்பாவிடம் எப்படி சொல்வது என யோசித்துக் கொண்டிருந்த போது தான், எதிர்பாராத விதமாக அவள் அண்ணன் பெருமாள் குறுக்கே வந்தான்.

    அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கம் போல கட்சி வேலை, நண்பர்கள் சந்திப்பு என்று சுற்றிக் கொண்டிருக்கும் பெருமாள், அன்று அதிசயமாக வீட்டில் இருந்தான். அப்பா காலை கோவிலுக்கு போயிட்டு வந்தவுடன், சாப்பிடும் பொழுது மெதுவாய் ஆரம்பித்தான்.

    "அப்பா... நம்ம திவ்யாவுக்கு கல்யாண வயசு வந்து ரொம்ப நாள் ஆகுது. மாப்பிள்ளை ஏதாவது பார்த்து இருக்கீங்களா... இல்ல மனசுல ஏதாவது சொந்தத்தில் முடிக்கலாம்னு இருக்கீங்களா...?"என கேட்க, திவ்யாவுக்கு பகீர் என்றது.

    "இவன் எதுக்கு திடீர்னு நம்ம கல்யாணத்த பத்தி பேசுறான். ஒருவேளை நான் டேவிட்டை லவ் பண்றது தெரிஞ்சு போச்சா...?"- என சற்று சந்தேக பார்வையுடன் அவனை பார்க்க,பெருமாள், இயல்பாக, இட்லியை போட்டு வாயில் தள்ளிய படி அப்பாவை பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.

    "இல்லடா... நான் கூட அது தான் யோசிச்சிட்டு இருந்தேன். நீ கரெக்டா கேட்டுட்ட! நீயும் உன் சைட்ல யாராவது நல்ல மாப்பிள்ளை இருந்தா சொல்லு... ஆனா கட்சி காரங்க மட்டும் வேண்டாம். குறிப்பா இந்துவா இருக்கணும்! நம்ம ஆட்களா இருந்தால் சந்தோஷம்..." - அப்பா அண்ணனிடம் சொல்லிகிட்டு இருக்க, என் மனசு என்கிட்ட சொல்ல ஆரம்பிச்சது." சுத்தம் திவ்யா... நீ உங்க அப்பா கிட்ட உன் காதலை சொல்லி ஓகே வாங்கின மாதிரிதான்! திவ்யா வசமா சிக்குனடி..."-மனசு எச்சரிச்சு முடிக்கும் முன், அப்பாவின் குரல் குறுக்கிட்டது.

    "என்ன திவ்யா? உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம் இல்ல? உனக்கு ஓகே தானே?" அப்பா சட்டென்று கேட்க, ஓகே அப்பா! நீங்க எந்த மாப்ள பார்த்தாலும் எனக்கு ஓகே"- என அப்போதைக்கு சொல்லி வைத்தாலும், உள்ளுக்குள் ஒரு உதறல் இருக்கத்தான் செய்தது.

    "அவகிட்ட என்னப்பா பெர்மிஷன் கேட்டுட்டு இருக்கீங்க... இதுவரைக்கும் என்ன படிக்கணும்? என்ன வேலை பார்க்கணும்? எல்லாமே நாமதான்பா டிசைன் பண்ணோம்..மாப்பிளை மட்டும் அவ பார்த்துருவாளா என்ன? நாம என்ன அவளுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை பார்க்காம விட்டுறுவோமா என்ன...?"என சொன்னவன், அவள் பக்கம் திரும்பி, "திவ்யா... நான் சொல்றது ரைட் தானே?" என கேட்க அவள் மவுனமாய் இருக்க,

    " என்ன திவ்யா அமைதியா இருக்க? விருப்பம் இல்லையா?" - என கேட்க இல்லண்ணே "நீங்க எந்த மாப்ள பார்த்து சொன்னாலும் எனக்கு ஓகே தான்..." என சொல்லிவிட்டு... சரி, நான் கை கழுவிட்டு படுக்க போறேன்... என்று எந்திரிக்க,

    "பொம்பள பிள்ளைடா அவ... வெக்கமா இருக்காதா? கல்யாண பேச்சை ஆரம்பித்தாலே... பொம்பள பிள்ளைகளுக்கு வெட்கம் தானா வந்துரும்!"- அப்பா ஏதோ எங்கேயோ பேசுவது போல அவள் காதில் கேட்க, கையை கழுவி விட்டு பெட் ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள் திவ்யா.

    அடுத்த நாள் காலை பெருமாள் வழக்கம் போல சீக்கிரமே எழுந்து, வாக்கிங் முடித்துவிட்டு, வேக வேகமாக கிளம்பி, பைக் எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். கோவில் சென்று வந்து, நிதானமாக சாப்பிட்டு முடித்து, ஹாலில் சோபாவில் அமர்ந்த போது தான் திவ்யாவின் அப்பா கவனித்தார்.

    டீப்பாயில் ஒரு கடிதம் நான்காக மடித்து வைக்கப்பட்டு, அதன் மீது டிவியின் ரிமோட், அந்த கடிதம் பறந்து விடாமல் இருப்பதற்காக வைக்கப் பட்டிருப்பதை பார்த்ததும் உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு!

    'அந்த கடிதம் தனக்குத்தான்! 'என உள் உணர்வு உணர்த்த, மெதுவாய் ரிமோட்டை தள்ளி வைத்து விட்டு, அந்தக் கடிதத்தை எடுத்து பிரித்துப் படித்தார்.

    அன்புள்ள அப்பா! நேற்று நீங்கள் எனக்கு கல்யாணம் முடிப்பதை பற்றி அன்புடன் பேசிக் கொண்டிருந்தது சந்தோஷமான ஒரு விஷயம் தான்! ஆனால், நான் வளர்ந்தது முதல் இன்று படித்து முடித்து வேலையில் இருக்கும் வரைக்கும் உங்களுடன் கலந்து ஆலோசனை கேட்டு தான் எதையுமே முடிவெடுத்திருக்கிறேன்.

    இப்பொழுதும் அதே போல ஒரு முடிவை எடுக்க உங்களிடம் அனுமதி கேட்டு தான் இந்த கடிதம்.

    வீட்டுக்குள் இருந்து கொண்டே, உங்களுக்கு கடிதம் அனுப்புவது வேடிக்கையா தான் இருக்கிறது. இருப்பினும், இதுபோல விஷயங்களை உங்களிடம் நேரில் பேச எனக்கு தைரியம் இல்லை என்பதை விட, கடிதம் இன்னும் சவுகரியம் என்பதற்காக தான்.

    அப்பா, நான் வேறு மதத்தை சேர்ந்த, அதாவது ஒரு கிறிஸ்தவரை காதலிக்கிறேன். அவரது பெயர் டேவிட். ஒரு தங்கை. அந்த தங்கை உங்களுக்கு தெரியும். ஆமாப்பா என் பிரண்ட் மேரிதான். நம் வீட்டிற்கு பலமுறை வந்திருக்கிறாள். நானும் பலமுறை அவ வீட்டுக்கு போயிருக்கிறேன். அவ அண்ணன்தான் டேவிட். நல்ல வேலையில் இருக்கிறான். எனக்கும் நல்ல பழக்கம். நிச்சயமாக என்னை கல்யாணம் முடித்தால் சந்தோஷமாக வைத்துக் கொள்வான். அதுல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் வீட்டில் கல்யாணத்துக்கு பரிபூரண சம்மதம்! ஆனால்,' ஒரு கிறிஸ்தவ பையனை நீங்கள் மருமகனாக ஏற்றுக் கொள்வீர்களா?- என்பது அவர்கள் வீட்டில் மட்டும் இல்ல, எனக்கும் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது!

    'நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் என் வாழ்க்கையில் நான் சந்தோஷமான கல்யாண பந்தத்துக்குள் நுழைகிறேன் என்று நினைத்துக் கொள்வேன். இல்லை, உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால், சம்மதிக்க வைக்க முயற்சி செய்வதை தவிர, ஒருபோதும் உங்களை எதிர்த்து நான் டேவிட்டை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்!'

    உங்கள் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மேரியும், தன் அண்ணன் நம் வீட்டில் மருமகனாக வருவதற்கு உங்கள் அனுமதியை கேட்டு, காத்துக் கொண்டிருக்கிறாள்அனுமதி தருவீர்களா?

    தருவீர்கள் என்று நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    உங்கள் அன்பு மகள்,

    திவ்யா.

    (தந்தை சம்மதித்தாரா... அடுத்த வாரம் பார்ப்போம்...)

    E-Mail: director.a.venkatesh@gmail.com

    7299535353

    Next Story
    ×