search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நாளை துளசி கல்யாணம்- பூஜை செய்தால் திருமணம் கை கூடும்
    X

    நாளை துளசி கல்யாணம்- பூஜை செய்தால் திருமணம் கை கூடும்

    • துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.
    • துளசி கல்யாணத்தன்று துளசிக்கு பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

    புனிதமான செடிகளின் வரிசையில் முதலிடம் பிடிக்கக்கூடிய செடியாக திகழ்வது துளசி செடி. இந்த துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. துளசிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் திருமணம் நடந்த நாளை தான் துளசி கல்யாணம் என்று கூறுகிறார்கள். அந்த நாளில் வீட்டிலேயே துளசி கல்யாணத்தை செய்து பார்த்தால் அனைத்து விதமான மங்களங்களையும் பெற முடியும்.

    ஐப்பசி மாதம் வரும் அமாவாசை நாளிலிருந்து 12-வது நாள் வரக்கூடிய துவாதசி அன்றுதான் துளசி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இந்த வருடம் நாளை புதன்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடிக்கு நாம் பூஜை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளையும் பெற முடியும்.

    இந்த திருமணத்தை விடியற்காலை 3 மணியிலிருந்து ஆறு மணிக்குள் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடி போதுமானது தான். துளசி செடி இல்லாதவர்கள் துளசி இலைகளை பறித்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்தும் பூஜை செய்யலாம்.

    முதலில் ஒரு வெற்றிலையில் சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைத்து மலர்கள் மற்றும் அருகம்புல்லால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட வேண்டும். பிறகு துளசி செடி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து மாக்கோலம் போட வேண்டும். அடுத்ததாக துளசி செடி வைத்திருக்கும் தொட்டிக்கு அல்லது மாடத்திற்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும். பிறகு ஒரு சுத்தமான செம்பில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை சிறுதுளி அளவு கலந்து துளசிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.


    வீட்டில் மகாவிஷ்ணுவின் சிலையோ அல்லது புகைப்படமும் இருந்தால் அதை எடுத்து வந்து துளசி செடிக்கு அருகில் வைத்துவிட்டு அந்த சிலைக்கும் மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பிறகு மலர்களால் துளசி செடியையும், மகாவிஷ்ணுவின் புகைப்படத்தையும் அலங்காரம் செய்ய வேண்டும். துளசி செடிக்குரிய மந்திரங்களையும் பாடல்களையும் உச்சரித்த வண்ணம் துளசி செடிக்கும் மகாவிஷ்ணுவிற்கும் உதிரி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நெய்வேத்தியமாக கற்கண்டு உலர் திராட்சை பேரிச்சம்பழம் போன்றவற்றை வைத்து, வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து, ஊதுபத்தி தூபம் காட்டி ஐந்து பெரிய நெல்லிக்காய்களை எடுத்து அதில் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மகாவிஷ்ணுவின் சிலையோ புகைப்படமோ இல்லாதவர்கள் மகாவிஷ்ணுவின் அம்சமான பெரிய நெல்லிக்காய் மரத்திலிருந்து ஒரு சிறிய கிளையை எடுத்து வந்து துளசி செடியுடன் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    வைணவ வழிபாட்டில் மிகவும் முக்கியமான பொருள் துளசியாகும். மலர்கள் அணிவிக்காவிட்டாலும் இரண்டு துளசி இலைகளை மகாவிஷ்ணுவிற்கு படைத்து வழிபட்டாலே அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். துளசி இலைகளை பறிப்பதற்கும் கூட பல கட்டுப்பாடுகள் உள்ளன. மருத்துவ குணமும், தெய்வீக தன்மையும் நிறைந்த துளசியை வருடத்திற்கு ஒரு முறையாவது பூஜை செய்து வழிபட வேண்டும்.

    "ஓம் துளசியை வித்மஹி; விஷ்ணு பரியை தீமஹி; தன்னோ விருந்தா ப்ரசோதயாத்" என்ற துளசி மந்திரத்தை தினமும் உச்சரித்து, தண்ணீர் ஊற்றி வழிபடுவதால் செல்வ வளம் பெருகும். துளசி மாடத்திற்கு பொட்டு வைத்து, விளக்கேற்றி வழிபட்டால் சகல விதமான துன்பங்களும் விலகி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    செடிகளில் துளசிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? தெய்வங்களுக்கு இணையாக வணங்கப்படுவது ஏன் என பலரும் நினைக்கலாம். இதற்கு இந்து புராணங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    அசுர அரசனின் மகளான விருந்தா, தீவிர விஷ்ணு பக்தை. இவள் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து தோன்றிய ஜலந்தரை மணந்தாள். பக்தியில் சிறந்தவளும், தீவிர பதிவிரதையுமான விருந்தாவை மணம் முடிந்ததால் ஜலந்தர் மிகவும் பலம் மிகுந்தவனாக மாறினான். இதனால் அவனின் சக்தி பல மடங்காக அதிகரித்து சிவபெருமானால் கூட வெல்ல முடியாதவன் ஆனான். இதன் காரணமாக தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக விளங்க வேண்டும் என்ற ஆசை ஜலந்தருக்கு ஏற்பட்டது. இதனால் அஞ்சிய தேவர்கள் அனைவரும் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். ஆனால் விருந்தா தனது பக்தை என்பதால், அவளது கணவரை அழிப்பதா என குழப்பத்தில் ஆழ்ந்தார் மகா விஷ்ணு.

    இதனால் சிவனுக்கும், ஜலந்தருக்கும் போர் நடைபெற்ற சமயத்தில் ஜலந்தரின் உருவத்தில் துளசியை காண சென்றார் மகா விஷ்ணு. வந்திருப்பது தனது கணவன் என நினைத்து அவருடன் அமர்ந்து, பூஜை செய்தாள் விருந்தா. பிறகு தனது கணவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக தனது கணவரின் உருவில் வந்த மகாவிஷ்ணுவின் காலை தொட்டு வணங்கினாள். அப்போது வந்திருப்பது தனது கணவன் இல்லை என தெரிந்து கொண்டாள். தனது கடவுளே தன்னை ஏமாற்றி விட்டதால் வேதனையடைந்த விருந்தா, மகா விஷ்ணுவை கல்லாக மாற சாபம் அளித்தாள். இதனால் மகா விஷ்ணு சாளகிராம கல்லாக மாறினார். அதே சமயம், விருந்தாவின் தூய்மை தன்மை குறைந்ததால் ஜலந்தரின் பலம் குறைந்தது. போரில் அவனை வென்றார் சிவபெருமான்.

    தனது தூய்மை தன்மை குறைந்ததால் உயிரை விட துணிந்தாள் விருந்தா, அந்த சமயத்தில் விருந்தா இனி துளசி என அழைக்கப்படுவாள் என வரமளித்தார் மகா விஷ்ணு. துளசி இல்லாமல் மகா விஷ்ணுவிற்கு செய்யும் பூஜைகள் முழுமை பெறாது. துளசி செடிக்கு நீர் ஊற்றினால் கூட அது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும்.

    துளசி கல்யாணத்தன்று துளசிக்கு பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இவ்வாறு வழிபடும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியும், செல்வ வளமும் பெருகும்.

    இளம் வயதினர் துளசி பூஜை செய்தால் தங்களின் மனத்திற்கு பிடித்தது போல் விரைவில் திருமண வாழ்க்கை அல்லது வாழ்க்கை துணை அமைவார்கள். திருமண தடை, திருமணம் தாமதமாகிக் கொண்டே செல்பவர்கள் இன்று துளசி மாதாவிடம் வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளும் துர் தேவதைகளும் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் எந்தவித தங்கு தடைகளும் இன்றி நடைபெறும். செல்வ செழிப்பு மேலோங்கும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.

    துளசி பூஜை செய்யும் முறை

    திருமணமாகாத ஆண்கள் துளசி செடிக்கு பூஜைகள் செய்து, வஸ்திரம் படைத்து, துளசி செடியை 7 முறை வலம் வந்து வணங்க வேண்டும். திருமணமாகாத பெண்கள், மனத்திற்கு பிடித்த கணவர் அமைய வேண்டும் என விரும்பும் பெண்கள் வீட்டில் துளசி கல்யாணம் நடத்தி, துளசி மாதாவிற்கு பூஜை செய்து வழிபட வேண்டும். துளசி மாதா முன் விழுந்து வணங்கி, பூக்கள் படைத்து, விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக் கொள்ளலாம்.

    Next Story
    ×