search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வந்தேன் மடத்தலைவரே!
    X

    'வந்தேன் மடத்தலைவரே!'

    • யாரையாவது வேடிக்கை மனிதராக்கி, மட்டம் தட்டிப் பேசாவிட்டால் அவர்களுக்குப் பொழுது போகாது.
    • எளிமையாக வாழ்ந்தவன், பதவிக்கு வந்தபின் வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளிவிடுகின்றான்.

    'வார்த்தைகள் பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்த விஷயம். வார்த்தைகள் கொள்கலன்கள். அவை, நம்பிக்கை அல்லது பயத்தைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப விளைவுகளை ஏற்படுத்துகின்றன'.

    -சார்லஸ் கேப்ஸ்

    காலை நேரம். பேருந்து நிலையத்தில் வழக்கமான பரபரப்பு. அந்தப் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கல்லூரி மகளிர், வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் என கூட்ட நெரிசல். நடத்துநர் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். ஓட்டுநர் காபி குடித்து வந்ததும் பேருந்து புறப்படும்.

    இளைஞர்களின் பேச்சில் ஒரே கலகலப்பு. அப்போது 'மைனர் மிடுக்'குடன் ஓர் இளைஞன் அந்தப் பேருந்தில் ஏறினான். எல்லோரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு, பேருந்தின் நடுப்பகுதியில் வந்து நின்று நோட்டமிட்டான்.

    ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த ஓர் இளம்பெண், வெளியே நின்று பூ விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் ஒருமுழப் பூ வாங்கித் தலையில் வைக்கும்போது, அந்த இளைஞன் 'கமென்ட்' அடித்தான்.

    'ஒரு பூ தன் தலையில் பூ வைத்தது' என்றான்.

    அவள் கண்டுகொள்ளாததுபோல் இருந்தாள். ஆனால், அவள் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது. வெளிப்பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். எல்லோர் முன்னும் தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக்கொண்ட அந்த இளைஞன், மீண்டும் ஜாடையாகப் பேசினான்.

    'தலையில் வைக்க பூ வாங்கியாச்சி. வேற என்ன வேணும். நான் வாங்கித் தர்றேன்' என்று அவன் சீண்ட, அவளிடமிருந்து வார்த்தை தெறித்து வந்தது.

    'செருப்பு' என்றாள்.

    'த்தோ பார்ரா, செருப்பு இல்லையாம். கவலைப்படாத ஸ்வீட்டி, நான் எதுக்கு இருக்கேன்'.

    'செருப்படி வாங்குறதுக்கு' என்று முகத்தில் அறைந்தாற்போல் பட்டென்று அந்த இளம்பெண் சத்தமிட, பேருந்தில் இருந்த பலரும் அவனைப் பார்த்து பலமாகச் சிரித்தார்கள். சிலர் கேவலமாகப் பார்த்தார்கள்.

    அவமானப்பட்டுப்போன அந்த இளைஞனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திக்குமுக்காடினான். முகம் கருத்துவிட்டது. என்ன வேகத்தில் பேருந்திற்குள் வந்தானோ, அதே வேகத்தில் தடதடவென்று பேருந்தில் இருந்து இறங்கி ஓடிவிட்டான்.

    எந்த இடமாக இருக்கட்டும் யாரிடமாகட்டும், வாய்திறக்குமுன் யோசிக்க வேண்டும். எதிர்வினையின் சீற்றம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, நாவடக்கம் தேவை.

    கலகலப்பாகப் பேசுவது ஓர் அற்புதமான கலை. குடும்ப வைபவங்கள், பணியிடங்கள், நண்பர்களின் கூடுகை - இப்படி எந்த ஓர் இடமாக இருந்தாலும், சிலரிடம் ஓர் ஈர்ப்பு இருக்கும். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் அமர்ந்துவிடும். அவர்கள் பேசுவதைக் கேட்பதில் அவ்வளவு விருப்பம்.

    பேசி மகிழ்வதும் மற்றவர்களை மகிழ்விப்பதும் ஓர் உன்னதப் பண்பு. நல்ல குணமும் விஷய ஞானமும் உள்ளவர்கள் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் பலவற்றைத் தெரிந்து கொள்வதற்கும், அவர்களின் பேச்சில் நிறைய விஷயங்கள் இருக்கும். ஈர்ப்பின் ரகசியம் அதுதான்.

    நையாண்டி செய்வதொன்றும் பெரிய விஷயமல்ல. நாலு பேர்க்கு முன்னால் ஒருவனைக் கேலி செய்து அவமானப்படுத்துவது அறிவாளித்தனமா? சிலரிடம் ஒரு பழக்கம் உண்டு. யாரையாவது வேடிக்கை மனிதராக்கி, மட்டம் தட்டிப் பேசாவிட்டால் அவர்களுக்குப் பொழுது போகாது. சில நேரங்களில் கலகலப்பாக ஆரம்பித்துக் கைகலப்பில் முடிவதும் உண்டு.

    சிலரின் வார்த்தைகள் ஊசி குத்துவதுபோல் இருக்கும். சிலரின் விஷம வார்த்தைகள் கடப்பாறையைப்போல் தாக்கும். அநாகரிகமான வார்த்தைகள் ஆபத்தை ஏற்படுத்துமே அன்றி, வேறொன்றுக்கும் உதவாது.

    நாம் நடந்துகொள்ளும் விதம் நாகரிகமாகவும், நம்முடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பண்பட்டதாகவும் இருக்க வேண்டும். அதுதான் வாழ்வின் அழகு.

    ஜவுளி உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்; என் நெருங்கிய நண்பர். அண்மையில் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்: 'வார்த்தை என்பது விதை'.

    அது சத்திய வாக்கு அல்லவா! வார்த்தை என்கிற விதை நல்ல விதையாக இருப்பின், அதிலிருந்து எழுகின்ற விருட்சத்தின் கனிகள் நற்கனிகளாக இருக்கும். அதுவே விஷ வித்தாக இருப்பின், விஷக்கனிகளையே அது விளைவிக்கும். அழிவையும் அவப்பெயரையுமே அது ஏற்படுத்தும்.

    தங்களை மட்டுமே அறிவாளியாக எண்ணிக் கொள்பவர்களுக்கு, அறிவுக் கண்களே இருக்காது. அதனால்தான், அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் குருட்டுத்தனமாகவே இருக்கும். அங்கிருந்துதான் பிரச்சனைகள் ஆரம்பமாகும்.

    வீட்டிற்கு வந்திருந்த மாமியாருக்கு, உணவு சமைத்துப் பரிமாறினாள் மருமகள். அன்போடு கேட்டுக் கேட்டு எடுத்து வைத்தாள்.

    'அத்தே, வெண்டைக்காய் பொரியல் சாப்பிடுங்க. அவியல் நல்லாருக்குதா?'

    'காய்கறி விக்கிற விலையில இவ்வளவு தேவைதானா? சிக்கனம் வேண்டாமா?'

    'சாப்பிடுங்க அத்தே, உங்களுக்காகத்தானே சமைச்சிருக்கேன். கத்தரிக்காய்

    காரக் குழம்பு எப்படி இருக்கு?'

    'நிறைய எண்ணெய்யை வீணாக்கிருக்கியே!'

    'எண்ணெய் இல்லாம எப்படி தாளிக்க முடியும்?'

    'இப்படி தாராளமா செலவு பண்றதுக்கு, உங்க வீட்ல இருந்து அப்படி என்ன பெருசா கொண்டு வந்தே?'

    'உங்க புள்ளைக்கு நீங்க என்னத்த பெருசா சொத்துசுகம் கொடுத்துட்டீங்களாம். என்னை இங்க கட்டிக் கொடுத்ததே பெருசுதான்'.

    'என்ன... வாய் ரொம்பதான் நீளுது?'

    'தோ பாருங்க. அநாவசியமா பேசாதீங்க. இஷ்டம் இருந்தா சாப்பிடுங்க. இல்ல, ஊருக்குக் கிளம்புங்க'.

    மாமியார் 'ஓ'வென்று கத்திக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

    பாருங்கள்; எங்கே இருந்து பிரச்சனை தொடங்குகிறது. அவமானப்படுத்துகின்ற அல்லது குற்றம்சாட்டுகின்ற பேச்சில் இருந்துதானே!

    ஒருவரை ஒருவர் மதிப்பதுதான் மிகச்சிறந்த பண்பாடு. பிறரைக் காயப்படுத்தாத சொற்கள், மரியாதையான அணுகுமுறை, மமதையின்மை, தீங்கு எண்ணாமை ஆகியவையே மானுடப் பண்பாட்டின் அடையாளங்கள்.

    நாகரிகமாகப் பேசத் தெரியவில்லை என்றால், 'வாய்' என ஒன்று இருப்பதே வீண்தான். போக்கறியா நாக்கு எல்லா கேடுபாடுகளையும் உண்டாக்கிவிடும்.

    விவசாயத்தில் புதிய உத்திகள், தொலைதூர வணிகம், தொழில்திறன், வசதி வாய்ப்புகள், நகரக் கட்டமைப்புகள், வாழ்க்கை மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டுதான் ஒரு நாட்டின் நாகரிக வளர்ச்சி அளவிடப்படுகிறது. ஆனால், அதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது தனிமனித நாகரிகம். அதன்மூலம்தான் நாட்டின் நாகரிகம் வளர்ச்சி பெறுகின்றது.

    ஒழுங்காகப் பேசுகின்றவன், குடித்துவிட்டு வந்தபின் தாறுமாறாக உளறுகிறான். பண்பட்ட மனிதனாக இருந்தவன், பணங்காசு கையில் சேர்ந்தவுடன் ஆணவத்தில் பேசுகிறான். எளிமையாக வாழ்ந்தவன், பதவிக்கு வந்தபின் வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளிவிடுகின்றான். என்ன செய்வது! மனிதமூளை அப்படித்தான் புரள்கிறது.

    மேடை கிடைத்துவிட்டால், சிலரைக் குறிவைத்துத் தாக்குவதற்கென்றே அந்த மேடையைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் உண்டு. உபதேசிக்கத் தகுதியற்றவர்கள் உபதேசிப்பார்கள். வார்த்தைகளைத் தங்களுக்குச் சாதகமாக உருட்டி உருட்டி விளையாடுவார்கள்.

    கடவுளிடமே தங்கள் வித்தையைக் காட்டுகிறார்களே. வேண்டாத வேலைகளை எல்லாம் செய்து கொண்டே, மனம் உருகி உருகி மன்றாடுவார்கள். விண்ணப்பங்களை அடக்கத்துடன் முணுமுணுப்பார்கள். அதை முடித்துவிட்டு வந்துவிட்டால், நாடக நாவு இஷ்டம்போல் சுழன்றாடும்.

    ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கட்டுவதும் கவிழ்ப்பதும், ஆக்குவதும் தாக்குவதும் நம் நாக்குதான். நம்மை மரியாதைக்கு உரியவர்களாய் வாழ வைப்பதும், அவமானத்திற்கு உட்படுத்துவதும் நம் வார்த்தைகளன்றி வேறென்ன!

    சிலரைத் தூரத்தில் பார்க்கும்போதே, பலர் உஷார் ஆகிவிடுவார்கள். வேறு வழியில் நழுவிப்போய்விடுவார்கள். காரணம் என்ன? சிக்கிக் கொண்டால் தேவையற்ற வார்த்தைகளால் துளைத்தெடுத்துவிடுவார்கள் என்ற பயம்தான்.

    அழகாகப் பேசத் தெரிந்தால், அதுதான் அறிவின் சாரம். நம் பேச்சுகள் விருந்தாகவும் மருந்தாகவும் இருந்தால், அதுதான் ஞானக்கலை. 'நல்லவர்' என்று ஒருவரைச் சொல்வதற்கு முதற்காரணம், அவரின் கனிவான பேச்சாகத்தான் இருக்கும். ஏனெனில், கண்ணியமும் கனிவும் நல்ல மனதிலிருந்து மட்டுமே வரமுடியும்.

    எவனொருவன் தன்னைத்தான் அறிவில் உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ள பலர்முன் வாயைத் திறக்கின்றானோ, அவன் அவமானத்தைத் தேடிக் கொள்கிறான்.

    ஒரு மடாதிபதி, தமிழ்ப்புலவர்களை வரவழைத்து விருந்து கொடுக்க எண்ணினார். அழைப்பு விடுத்தார்.

    வெவ்வேறு ஊர்களிலிருந்து புலவர்கள் அனைவரும், குறித்த நேரத்தில் மடத்திற்கு வந்து சேர்ந்தனர். மடாதிபதி ஒவ்வொருவர் வருகையையும் கவனித்துக் கொண்டிருந்தார். கடைமடை என்ற ஊரைச் சேர்ந்த ஒரு புலவர் மட்டும் மிகத்தாமதமாக விருந்துக்கு வந்து சேர்ந்தார்.

    மடாதிபதிக்கு அந்தப் புலவர் மீது கடுங்கோபம். தாமதமாக வந்திருந்த அந்தப் புலவரை வரவேற்கும் விதமாக, 'வாரும் கடைமடையரே' என்று இருபொருள்பட அழைத்தார்.

    கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது ஒருபொருள். கடைசியாக வந்த மடையரே என்பது மற்றொரு பொருள்.

    அந்தப் புலவரும் சளைத்தவர் அல்ல. வார்த்தை விளையாட்டில் வல்லவர். சும்மா விட்டுவிடுவாரா? அவரும் பதிலுக்கு, 'வந்தேன் மடத்தலைவரே' என்றார் சிரித்தபடி.

    இதற்கு, மடத்தின் தலைவரே என்பது ஒருபொருள். மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்பது மற்றொரு பொருள்.

    வார்த்தைகளை நாம் மிகக்கவனமாகக் கையாள வேண்டும். ஒழுங்காகப் பேசத் தெரியவில்லை என்றால், என்ன படித்து என்ன பயன்? ஒழுக்கம் என்பது வார்த்தைகளுக்கும் அவசியம்.

    தேவையற்றவைகளைப் பேசி, பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது. குறைவாகப் பேசினாலும் கருத்தோடு பேச வேண்டும். அப்படிப் பேசினால், மற்றவர்கள் விரும்பி வந்து நம்மைச் சூழ அமர்ந்து கொள்வார்கள்.

    குடும்பத்தினரால், சொந்தபந்தங்களால், நண்பர்களால் விரும்பப்படுகின்ற வார்த்தைகளும் வாழ்க்கையுமே, ஒருவனுக்குக் கிடைக்கின்ற மிகப்பெரிய வரம்.

    சமூக மரியாதை, குடும்ப மகிழ்ச்சி, நட்பின் இன்பம் - இவை அனைத்தும் நமக்குள் இருக்கினறன; நம் நாவில் பிறக்கின்றன. ஏனெனில், வார்த்தையே உயிர்; வார்த்தையே வாழ்க்கை.

    போன்: 9940056332

    Next Story
    ×