என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
அறிவே ஆற்றல்!
- அறிவு ஞானத்தைத் தருகிறது; ஞானம் எந்த நுட்பமான பொருளையும் புரிந்து கொள்ளும் ஆற்றலைத் தருகிறது.
- அறிவாளனே இந்த உலகை ஆள்வோனாகவும், உண்மையில் வாழ்வோனாகவும் திகழ்வான்.
ஆற்றலைத் தருகிற அறிவைப் பெறுவதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.
எந்த மனிதரைப் பார்த்தும், உங்களிடம் ஆடை துணிமணிகள் இருக்கின்றனவா? நிலபுலன்கள் இருக்கின்றனவா? வீடு கார் வசதிகள் இருக்கின்றனவா? காசு பணம் இருக்கின்றனவா? குடும்பம் மனைவி பிள்ளை குட்டிகள் இருக்கின்றனவா? என்று எந்தக் கேள்வி கேட்டாலும், 'இருக்கிறது!' அல்லது 'இல்லை' என்று பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள். ஆனால் அதே மனிதர்களிடம்,' உங்களிடம் அறிவு இருக்கிறதா?' என்று மட்டும் கேட்டுப் பாருங்கள்! அவர்களிடமிருந்து, பதிலுக்கு பதிலாகக் கோபம் எப்படிப் பொத்துக்கொண்டு வருகிறது என்பதைச் சற்று எட்டநின்று ரசியுங்கள்.
மனிதர்கள் செல்வம், வீடு, வாசல், மனைவி, மக்கள், காசு பணம், ஆடை அணிமணிகள் என்று எதுவும் இல்லாமல் இருப்பதையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்துடன் இருக்கிறார்கள்!; ஆனால் அதே நேரத்தில், தம்மை அறிவில்லாதவர் என்று யாரும் குறைகூறிவிடக் கூடாது என்பதில் அதிக கவனத்துடனும் இருக்கிறார்கள். அதனால்தான் அறிவு இருக்கிறதா? என்று கேட்டால், 'யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டாய்? என்று அடிக்கவும்கூட வந்து விடுவார்கள். அறிவு ஒரு மனிதனை முழுமை மனிதனாக மாற்றும் ஆற்றல் மிக்கது; தன்னை வறியவன், கோழை, சோம்பேறி, கஞ்சன் என்றெல்லாம் கூறுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் மனிதன், தன்னை முட்டாள் என்று அடுத்தவர் இழித்துக் கூறுவதை ஏற்றுக்கொள்வதே இல்லை.
கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று வகையான ஆற்றல்கள் மனிதரை ஆளுமை மிக்கவராக உருவாக்கும் வல்லமை மிக்கவை. இவற்றில் கல்வி ஒன்றே அறிவோடு நெருங்கிய தொடர்புடையது என்று எண்ணுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. கல்வி என்பது எல்லாத் துறைகள் சார்ந்த அறிவு நுட்பத்தையும் நமக்குக் கற்றுத் தருகிறது. இன்னும் சொல்லப்போனால் செல்வம் ஈட்டுவதற்கும், பொருளீட்டல் சார்ந்த அறிவையும் நுட்பத்தையும் அவசியம் பெற்றிருக்க வேண்டும். அதே போல வீரம் என்பது கண்களுக்குப் புலப்படுகிற அங்கங்களின் வலிமை தொடங்கிக், கண்களுக்குப் புலப்படாத மனம்,, தன்னம்பிக்கை, அஞ்சாமை, துணிச்சல் முதலான ஆளுமைப் பண்புகள் வரையிலான அறிவைப் பெற்றிருத்தல் ஆகும். அந்த அடிப்படையில் கல்விக்கூடக் கல்வி தவிர்ந்து, துறைசார்ந்த பயிற்சிக் கல்வியும், அவற்றின்மூலம் விளைச்சலாகும் நுட்ப அறிவும் அறிவு என்கிற பெரும்பிரிவின்கீழ் வரும்.
'அறிவு என்பது ஆற்றல்' என்னும் பழமொழி ஆற்றல்மிக்க தொடராகத் தற்போது கருதப்படுகிறது. அறிவு ஒரு மனிதனை அறிவாளி ஆக்குகிறது.
படிப்புத் துறைகளில் பல்வேறு கல்விகள் கற்றுப் பட்டங்கள் பெறுவோரையெல்லாம் அறிவாளிகள் என்று கூறிவிட முடியாது; அவர்களைப் படிப்பாளிகள் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்; உண்மையில் அறிவாளிகள் வேறு; படிப்பாளிகள் வேறு. அறிவாளிகள் புத்திசாலிகளாக இருப்பார்கள்; கற்றுப் பெற்றதோடு, சுயசிந்தனையில் உருவாகும் சமயோசிதப் புத்தி எனப்படும் நுட்ப அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் படிப்பாளிகள், கற்றதை மட்டுமே வேத வாக்காக்கி, இருப்பதை மட்டுமே இயல்பான அறிவென நம்பி, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் போல இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
அறிவு எல்லாருக்கும் பொதுவானது; எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. ஆனாலும் பகுத்து அறிகிற அறிவு என்பது மனித குலத்திற்கே சொந்தமானது. அறிவை வளர்த்துக்கொள்வதற்கும், விரிவு செய்வதற்கும் அதன்மூலம் மானுட நேயத்தை வளர்த்துக் கொள்வதற்கும் அறிவென்பதே சிறந்த கருவியாகத் திகழ்கிறது. ஒவ்வொரு மனிதனையும் ஆபத்துக் காலங்களிலும், இக்கட்டு நேரங்களிலும் தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்துகிற சிறப்பான செயலை அறிவு நிகழ்த்திக் காட்டுகிறது.
ஓர் அழகிய வனஇனக் கதை. ஓர் ஆட்டுக்குட்டி காட்டில் தனக்குக் கிடைத்த தேனை ஒரு மண்குடுவையில் ஊற்றி எடுத்துக்கொண்டு, அருகிலிருக்கும் காட்டில் குடும்பத்தோடு வாழும் தன் பெரியம்மா ஆட்டைக் காணச் சென்றது. காட்டிற்குள் செல்லும் வழியில் கடும் மழை பெய்யத் தொடங்கியது. தேனுள்ள குடுவைக்குள் மழைநீர் புகுந்துவிடாமலிருக்க, ஒரு தேக்குமரத்தின் இலையைப் பறித்து மண் குடுவையின் வாய்ப்பாட்டை மூடிக்கொண்டது. இருந்தாலும் மழை கடுமையாகப் பெய்ததால், ஆடு நனையாமலிருக்க, வழியோரத்தில் இருந்த ஒரு குகைக்குள் புகுந்தது.
குகைக்குள் புகுந்த ஆட்டிற்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே, ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு ஓநாய் ஆகியவை இருந்தன. மூன்றுமே கொடூரமான மிருகங்கள்; மாட்டிக்கொண்டால், மூன்றுமே நம்மைக் கொன்று உண்டுவிடும் பயங்கரத் தன்மையானவை.
இவற்றிடமிருந்து எப்படித் தப்பிப்பது? ஆடு யோசிக்கத் தொடங்கியது. " என்ன இந்தப் பக்கம்?" நக்கலாகக் கேட்டது சிங்கம். " வெளியில் கடுமையான மழை; மழைக்கு ஒதுங்கலாமெனக் குகைக்குள் வந்தேன்!" என்று அஞ்சி நடுங்குவதுபோல் ஆடு பதில் சொன்னது. "நாங்களும் மழைக்கு ஒதுங்கலாமென்றுதான் இங்கு வந்துள்ளோம்!" வில்லத்தனமான புன்னகையோடு சிங்கம் சொன்னது. மேற்கொண்டு எதுவும் பேச்சுக் கொடுத்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று எண்ணிய ஆடு, கையிலிருந்த மண்குடுவையை இறுகப் பற்றிக்கொண்டு குகையில் இன்னும் சற்று ஓரமான பகுதிக்குச் சென்று ஒதுங்கி நின்றுகொண்டது.
இன்று வசமான விருந்து ஒன்று அதுவாக ஒதுங்கி நம்மிடம் வந்துள்ளது என நினைத்து மகிழ்ந்த காட்டுராஜா ஆட்டிடம், " அது என்ன கையில் மண்குடுவை?" என்று கேட்டது. சுதாரித்துக்கொண்ட ஆடு, "ஓ! அதுவா ராஜா!. இந்த மண் குடுவைக்குள் ஒரு அபூர்வ மருந்து இருக்கிறது. இதை அருந்துபவர்கள் வாழ்நாள் முழுவதும் வலிமை குன்றாமல் பலசாலியாகவே வாழலாம். ஆனால் அதில் ஒரு சிறு சிக்கல் இருக்கிறது!..." என்று இழுத்தது ஆடு. "அபூர்வமான மருந்துதான். அது என்ன சிக்கல்?. அது என்னவென்று சொல்! நான் தீர்த்து வைக்கிறேன்; அதன் பிறகு அந்த மருந்தை நானே குடித்து மேலும் வலிமையுள்ளவனாகவும் ஆகிறேன்!" கர்ஜித்தது சிங்கம்.
" அந்தச் சிக்கல் என்னவென்றால், இந்தக் குடுவைக்குள் இருக்கும் மருந்திற்குள் ஒரு ஓநாயின் வாலைக் கத்தரித்துப் போட்டு ஒருமணிநேரம் ஊறவைத்துப் பின் குடித்தால் மருந்து வீரியத்துடன் செயல்படும் " என்றது ஆடு. "ஓநாயின் வாலைக் கத்தரித்து மருந்திற்குள் போட்டு ஊறவைத்துக் குடிக்க வேண்டும்! இவ்வளவுதானே விஷயம்?. இதோ நம் எதிரேயே ஓநாய் இருக்கிறதே! அதனுடைய வாலைக் கத்தரித்தால் ஆயிற்று!" என்று கூறி சிங்கம் ஓநாயின் அருகில் வந்தது; கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குகையை விட்டு வெளியேறி ஓநாய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடத் தொடங்கியது. அதனைத் துரத்திக்கொண்டு சிங்கமும் ஓடத் தொடங்கியது.
அப்பாடா! இரண்டு எதிரிகளைக் குகையிலிருந்து ஒரே நேரத்தில் வெற்றிகரமாகத் துரத்திவிட்டோம்! என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது ஆடு. ஆயினும்…சிங்கமும் ஓநாயும் ஓடிவிட்டால் என்ன? புலி இருக்கிறதே!. ஆட்டைக் கடித்துக் குதற நெருங்கி வந்தது புலி. தனது சமயோசிதப் புத்தியைப் பயன்படுத்தி ஆடு பேசத் தொடங்கியது. "புலியாரே! காட்டுராஜா சிங்கத்திடமிருந்து உண்மையிலேயே நான்தான் இப்போது உங்களைக் காப்பாற்றியிருக்கிறேன். உண்மையில் அந்த மருந்துக் குடுவையில் போட்டு ஊறவைக்கப்பட வேண்டியது ஓநாயின் வால் அல்ல; ஒரு புலியினுடைய இதயம். இந்த உண்மையை நான் சிங்கத்திடம் சொல்லியிருந்தால், நீங்கள் இப்போது இங்கே நின்றுகொண்டிருக்க மாட்டீர்கள்; ஓநாய்க்குப் பதிலாக நீங்கள்தான் காட்டிற்குள் ஓடிக்கொண்டிருப்பீர்கள்!. அதற்காக எனக்கு நன்றி சொல்லுங்கள்!" என்றது ஆடு.
புலி சிந்திக்கத் தொடங்கியது. ஓநாயின் வாலோடு எப்படியும் சிங்கம் மருந்துக் குடுவைக்காக மீண்டும் இந்த குகைக்குத்தான் வரும்; அப்போது நம்முடைய இதயம் என்கிற உண்மையை ஆடு சிங்கத்திடம் கூறிவிட்டால் நம்கதி அதோகதிதான்!. சிந்தனை முடிவதற்குள், சிங்கம் திரும்புவதற்குள் புலி குகையைவிட்டு ஓடத் தொடங்கியது. இதை ஆவலோடு எதிர்பார்த்த ஆடு, இப்போது மழை நின்று விட்டதால் குகையை விட்டு வெளியேறி, நிம்மதியாகத் தேன்குடுவையுடன் பெரியம்மா வீடுநோக்கி நடக்கத் தொடங்கியது.
அறிவு என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நமக்குக் கவசமாக இருந்து பாதுகாப்பது; அது உள்ளழிக்க முடியாத அரண் என்பது வள்ளுவர் கருத்து. ஆடு, தன்னை முதலில் சிங்கத்திடமிருந்தும், பிறகு ஓநாயிடமிருந்தும், அதன்பிறகு நேக்காகப் புலியிடமிருந்தும் காத்துக்கொள்ளக் கையிலெடுத்த கருவி அறிவாயுதம் மட்டுமே!. ஒருதுளி ரத்தமும் சிந்தப்படாமல், துரும்பளவு ஆயுதமும் தூக்கப்படாமல், எதிரிகளைப் புறங்கண்டு ஓடச் செய்து வெற்றிகாண்பதற்கு அறிவு ஒன்றே போதுமானது. எதிரிகள் ஆள் அம்பு சேனை செல்வம் அதிகாரம் என்று எதைக்கொண்டு வந்து எதிர்த்து நின்றாலும் அவற்றின் வியூகங்களையெல்லாம் அறிவு தவிடுபொடி ஆக்கிவிடும்.
அறிவு ஞானத்தைத் தருகிறது; ஞானம் எந்த நுட்பமான பொருளையும் புரிந்து கொள்ளும் ஆற்றலைத் தருகிறது. அறிந்து கொள்வது அறிவு என்றால் புரிந்து கொள்வது ஞானம். எதையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளத் தொடங்குதலே ஞானம் பெறுதலின் அடிப்படை அறிவு. எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் வல்லமை பெற்ற மனிதனுக்கு அவை எல்லாவற்றையும் அடக்கியாளும் திறமையும் வாய்த்துவிடுகிறது. பிறகென்ன? அறிவின் மனிதன் உலகின் மனிதனாகி விடுகிறான்.
அறிவு மனிதனுக்குப் பெயரைப் பெற்றுத் தருகிறது. அறிவு மனிதனுக்குப் புகழைச் சம்பாதித்துத் தருகிறது. அறிவு மனிதனுக்கு இடைவிடாத மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொண்டுவந்து கொட்டித் தருகிறது. அறிவு, செல்வம் குறித்த துல்லியமான ஞானத்தை உணரவைப்பதால், செல்வமில்லாக் காலத்தும் செல்வந்தனைவிடவும் அதிகமான நிறைவுடையவனாக ஆக்கிக் காட்டுகிறது. கேள்வித் தேடல்களின் அடிப்படையாகக், கல்வி இருப்பதால், தேடுவதும் கண்டடைவதுமான மகிழ்ச்சி விளையாட்டை விளையாடுபவனாக அறிவாளி திகழ்கிறான்.
ஆணவச் சிகரங்களை உண்மை அறிவு தகர்த்து விடுவதால். பணிவுள்ள மனிதர்களை அது உற்பத்திபண்ணி விடுகிறது. இடைவிடாத கற்றலும் அறிவுத் தேடலும் உள்ள மனிதனுக்கு இடைவிடாத அறிவுப்பசி எடுத்துக்கொண்டே இருக்கும்; அறிந்துகொள்ளும் தாகம் பெருகிக் கொண்டே இருக்கும். அறிவான பசியும் தாகமும் புதுமையான கண்டுபிடிப்புகளையும் படைப்புகளையும் இந்த உலகிற்கு அறிவுக் கொடைகளாக வழங்கிக் கொண்டிருக்கும். அறிவாளனே இந்த உலகை ஆள்வோனாகவும், உண்மையில் வாழ்வோனாகவும் திகழ்வான்.
தொடர்புக்கு 94431 90098
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்