search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    எது பயனுள்ள வாழ்க்கை?
    X

    எது பயனுள்ள வாழ்க்கை?

    • பொதுநல வாழ்க்கை என்பதுகூட ஒருவிதமான தியாக வாழ்க்கைதான்.
    • நம்மாலான பனையளவு உதவி செய்ய முடியாவிட்டாலும், தினையளவுத் துன்பத்தையாவது செய்யாமல் இருப்பதும் ஒருவகை உதவிதானே!.

    பயனுள்ள வாழ்க்கையையே பண்பட்ட வாழ்க்கையாகக் கருதும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!

    இந்த உலகத்தில் நாம் மனிதராகப் பிறந்திருப்பதால் நமக்கு என்ன பயன்?; நம்மை விடுங்கள்; நமக்கு முன்னால் பிறந்தவர்களுக்கோ, அல்லது நமக்குப் பின்னால் பிறக்கப் போகிறவர்களுக்கோ நம்மால் என்ன பயன்?. சரி இதை இப்படிக் கேட்போம், இந்த பூமியில் பிறந்துள்ள நம்மால் இந்த பூமிக்குத்தான் என்ன பயன்?. இந்த மாதிரி வினாக்களை அடுக்கிக்கொண்டே போவதனால் கேள்விக்குறிகள் நீளுமேயொழிய, அறிவார்ந்த பதில்களினால் ஆச்சரியக்குறிகள் தோன்றி முற்றுப்புள்ளி நிலைத்திடுமா?.

    இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது?; எதனால் இயங்கிக் கொண்டிருக்கிறது?; அதற்கான ஆற்றல் எங்கிருந்து பெறப்படுகிறது? என்பன போன்ற வினாக்களுக்கான விடைகளை நாம் விஞ்ஞானத்தில் புகுந்து ஆராய்ந்து பெறலாம். ஆனால் இரத்தமும் சதையுமாக மனித சமூகம் உலவிக் கொண்டிருக்கும் இந்த உலகம் உயிர்ப்புடன் சுழன்று கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? என்று சற்றே மானுடம் சார்ந்த முறையில் அணுகிப் பார்ப்போம். பார்த்தால் வள்ளுவப் பேராசானே வடிவான பதிலுடன் வந்து

    "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

    அதுஇன்றேல்

    மண்புக்கு மாய்வது மன்"

    என்று விடை பகர்ந்து நிற்பதை அறிந்துகொள்ளலாம். "எவ்வழி நல்லவர் ஆடவர்… அவ்வழி நல்லை வாழிய நிலனே!" என்று ஔவையாரும்கூட இக்கருத்தையே முன்மொழிந்தும் நிற்கிறார். ஆம்! இந்த உலகம் நல்லவர்களாகிய பண்பட்ட மனிதர்களையே சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது; நல்ல பண்புடை மனிதர்களின் சார்தல் அற்றுப்போகத் தொடங்கியிருந்தால் இந்த உலகம் என்றோ மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கும். எவ்வளவு உண்மையான கவிக்கூற்றுகள் பார்த்தீர்களா? .

    சிலர் அகம்பாவத்தோடு மார்தட்டிக்கொண்டு சொல்வதைக் கேட்டிருக்கலாம், " நான் மட்டும் இல்லையென்றால்…. இந்த வீட்டில் எதுவுமே இல்லை!". இந்தத் தொடரில் வரும் 'வீட்டில்' என்கிற சொல்லுக்குப் பதிலாக, 'அலுவலகத்தில்', 'நிறுவனத்தில்', 'நாட்டில்', 'சமூகத்தில்', 'உலகத்தில்' என்று எந்தச் சொல்லை வேண்டுமானாலும் மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். மனிதர் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக் குறைபாட்டிற்கேற்ப, வீடு தொடங்கி உலகம் வரை, ஆணவச் செருக்கோடுதான் உலவிக் கொண்டிருக்கிறார்கள். தான் என்கிற அகம்பாவத்தின் உச்சச் சொல்தான், "இந்த உலகில் தான் இல்லையென்றால் எதுவுமே இல்லை" என்கிற அகம்பாவம். ஆனால் உண்மையில் இந்த உலகம் ஆணவத் தன்மையற்ற பண்பட்ட மனிதர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    சுந்தர ஆவுடையப்பன்

    நாட்டில், சமூகத்தில் அடிக்கடி நடைபெறும் மோசமான குற்றங்களையும், அவலங்களையும் பார்த்தால், இன்னுமா இந்த உலகம் அழிந்துபோகாமல் இயங்கிக்கொண்டு இருக்கிறது? என்று ஆச்சரியத்தோடு சிந்திக்கத் தோன்றும். இந்தச் சிந்தனை இன்று நேற்றல்ல; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இருந்திருக்கிறது. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்கிற பாண்டிய மன்னனின் எண்ணத்தில் இந்த ஐயப்பாட்டுச் சிந்தனை எழுந்திருக்கிறது.

    இன்னும்… இவ்வளவு கொடுமைக்காரர்களின் கூடாரமாக இந்த உலகம் மாறிப்போனாலும்… இன்னும் நன்மைகள் வழங்கும் உயிர்ப்போடு இந்த உலகம் அழிந்து போகாமல் இருப்பதற்கு என்ன காரணம்?. கேள்விக்கான பதிலை வழங்குவதற்காகவே, 'உண்டால் அம்ம இவ்வுலகம்!' எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடலை வடித்துக் காட்டியுள்ளான் பெருவழுதி. சாவாமருந்தாகிய தேவாமிர்தமே கிடைத்தாலும் சுய நன்மையைக் கருதித், தான் மட்டுமே உண்ணாமல், அடுத்தவர்க்கும் கொடுத்துப் பகிர்ந்துண்ணும் பண்புடையாளர்கள், கோபமே கொள்ளாத குணவான்கள், சோம்பல் அற்றவர்கள், அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சி வாழ்பவர்கள், ஒரு செயலைச் செய்வதன்மூலம் பழியேற்படுமாயின் பரிசாக உலகமே கிடைக்குமாயினும் செய்யாதவர்கள், செய்கிற செயலுக்குப் புகழ் ஏற்படும் ஆனால் உயிரை இழக்கநேரிடும் என்றாலும் உயிர்விடத் துணியும் புகழாளர்கள், சோர்வடையாதவர்கள், எந்தச் சூழ்நிலையிலும் சுயநலச் சிந்தையோடு தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழும் பொதுநலத் தொண்டர்கள் ஆகிய இவர்களால் தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.

    'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்கிற ஔவையின் மூதுரைப் பாடலும்கூட, ஊரில் பல அயோக்கியர்கள் இருந்தாலும், ஒரு நல்லவன் இருந்தால் போதும்; அவனுக்காக மழை பெய்யும்; அது அடுத்தவர்களும் பயன்படும்படி ஆகும்! என்கிறது. எல்லாருக்கும் பயன்படும்படி வாழுகின்ற வாழ்க்கையே பயனுள்ள வாழ்க்கை; தனக்கு மட்டுமே பயனுள்ள வாழ்க்கை வாழ்வது என்பது சுயநல வாழ்க்கை ஆகும். பொதுநல வாழ்க்கை என்பதுகூட ஒருவிதமான தியாக வாழ்க்கைதான்.

    இந்த உலகில் வாழ்க்கை என்பது ஒருவகை தொடரோட்டம்தான். இதுவரை வாழ்ந்து, ஓடி முடித்திருப்பவர்கள் ஒருவகையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பார்கள்; அவர்கள் முடித்த இடத்திலிருந்து நம்முடைய ஓட்டம் தொடங்கப்பட வேண்டுமானால், நாம் ஒருகனம் பின்னோக்கியும் பார்க்கவேண்டும்; ஒருகனம் முன்னோக்கியும் பார்க்க வேண்டும். இந்த பூமியின் இத்தனை ஆண்டுகாலச் சுழற்சியில் எத்தனையோபேர், தங்களைத் தியாகம் செய்துகொண்டு பூமியை வளப்படுத்திச் செழுமைப் படுத்தியிருக்கலாம்; அவர்களைத் தொடர்ந்து வாழ்க்கைக் களத்தில் புகும் நாம் நமது பங்கிற்காக, யாதானும் ஓர் துரும்பையாவது கிள்ளிப்போட்டு, இந்தச் சமூகத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் செயலில் ஈடுபட வேண்டாமா?. உலகத்திற்கும் சமூக மானுடத்திற்கும் நம்மாலான பனையளவு உதவி செய்ய முடியாவிட்டாலும், தினையளவுத் துன்பத்தையாவது செய்யாமல் இருப்பதும் ஒருவகை உதவிதானே!.


    ஒரு ஜென் குருவைத் தேடி அவருடைய மடத்திற்கு ஓர் இளைஞன் சென்றான். "நான் வாழ்க்கையைப் பயனுள்ள வகையில் வாழ்ந்து வெற்றிபெற்றவனாக வாழ விரும்புகிறேன் வழிகாட்டுங்கள்!" என்று கேட்டான். " என்ன படித்திருக்கிறாய்?" குரு கேட்டார். " ஒன்றும் படிப்பறிவு இல்லை!". "சரி வித்தைகள், தொழில்கள் ஏதாவது தெரியுமா?" ஜென் குருவின் கேள்விக்கு இளைஞன் சொன்ன பதில், " அப்படி எதுவும் சிறப்பாகத் தெரியாது; கொஞ்சம் சதுரங்கம் விளையாடத் தெரியும்!. அவ்வளவுதான்".

    "ஓ! இது போதுமே!. யாரங்கே!" தனது சீடர்களில் ஒருவனை அழைத்த ஜென்குரு, ஒரு புத்த பிக்குவின் பெயரைச்சொல்லி அவரை அழைத்து வா! என்று அனுப்பினார். மடத்திற்குள் இருந்த புத்த பிக்கு, வந்த சீடனிடம் 'ஏன்? எதற்கு?' என்று எந்தக் கேள்வியும் கேட்காமல், குருவை நோக்கி வந்து சேர்ந்தார். ஜென் குரு மற்றொரு சீடரை நோக்கி, உள்ளே சென்று சதுரங்கப் பலகையையும் காய்களையும் எடுத்து வரச் சொன்னார்; வந்ததும், நடுவில் ஒரு மேஜையில், சதுரங்கப் பலகையையும் காய்களையும் வைத்து இருபுறமும் இரண்டு சேர்களைப்போட்டு, ஒரு சேரில் இளைஞனையும் மற்றொரு சேரில் அந்த புத்த பிக்குவையும் அமரச் சொன்னார் ஜென்குரு.

    இளைஞனுக்குப் புரிந்து விட்டது; நமக்குச் சதுரங்க விளையாட்டுத் தெரியுமென்று சொன்னதால் ஜென்குரு நாம் விளையாடுவதற்காக இந்த ஏற்பாடு செய்கிறார் என்று உணர்ந்துகொண்டான். எதிர்த்தாற்போல் அமர்ந்திருக்கும் புத்த பிக்குவிற்குச் சதுரங்க விளையாட்டுப் பற்றி எதுவும் தெரியாது; இந்தப் பலகையையும் காய்களையும் நாலாவதாகவோ ஐந்தாவது முறையாகவோ பார்க்கிறார் அவ்வளவுதான். ஆனாலும் குரு எதற்காக இங்கே நம்மை உட்காரச் சொல்கிறார்? என்பதைப்பற்றி எந்தக் கவலையும் உணர்வும் இன்றி அவர் அந்தச் சதுரங்கப் பலகை முன் அமர்ந்திருக்கிறார். குரு முதலில் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார்; பிக்குவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, " நீர் எனக்காக எதையும் செய்யத் துணிவீர்!; உயிரைவிடச் சொன்னாலும் விட்டுவிடத் தயாராய் இருப்பீர்! சதுரங்க ஆட்டத்தில் தோற்றால் சிரச்சேதம் உறுதி!; அதே நேரத்தில் சொர்க்கமும் உறுதி!" என்று சொன்னார். இளைஞனைப் பார்த்து, " கவனமாக விளையாடு இளைஞனே! தோற்றால் தலை துண்டிக்கப்படும்!" என்று அவனிடமும் ஆட்ட விதிமுறை கூறினார் குரு.

    ஆட்டம் தொடங்கியது; இளைஞன் தனக்குத் தெரிந்ததைக்கொண்டு ஆடத்தொடங்கினான். பிக்குவோ சதுரங்கம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றாலும், எந்தப் பதட்டமுமின்றி ஆட்டத்தை ஆரப்பித்தார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, புத்தபிக்குவுக்கு ஆடத்தெரியவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட இளைஞன், அவரைத் தோற்கடிக்கும் உத்வேகத்தோடு ஆட ஆரம்பித்தான். ஆனாலும், தான் தோற்றுவிடுவோம் என்கிற அச்சமோ, தோற்றால் தலை துண்டிக்கப்பட்டுவிடும் என்கிற கவலையோ சிறிதுமின்றிச் சாந்தமாக ஆடிக்கொண்டிருந்த பிக்குவைப் பார்த்து மனம் மாறினான் இளைஞன். மரணம் நெருங்குகிறது என்பதைத் துல்லியமாக அறிந்திருந்தும், ஞானக்களை மாறாமல் ஆடிக்கொண்டிருக்கும் இவர் சாக வேண்டுமா? எந்த ஆதரவும் இல்லாமல், இறந்தால் வாழ்வில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்கிற நிலையில் இருக்கிற நாம் செத்துப்போனால் என்ன நட்டம் வந்துவிடப்போகிறது? என்று யோசித்தான். ஆட்டத்தைக் கண்ணா பிண்ணா என ஆடத்தோடங்கினான்.

    இளைஞன் தோற்றுப்போவதற்கான ஆட்டத்தைத் தொடங்கியிருப்பதை உணர்ந்த ஜென்குரு, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், சதுரங்கப் பலகையைக் கவிழ்த்துவிட்டு, ஆட்டம் முடிந்தது; யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை என்று அறிவித்தார். "இளைஞனே! நீ பயனுள்ள வாழ்க்கையைக் கற்றுக்கொண்டாய். பயனுள்ள வாழ்க்கை என்பது, நம்மிடமுள்ள எந்த மதிப்புடைய பொருளையும் அடுத்தவர் நலத்திற்காக இழக்கத் துணியும் தியாக வாழ்க்கை. சலனப்படாமல் குருவார்த்தைக்காக உயிரையும் இழக்கத் துணிந்துவிட்ட பிக்குவிற்காக இரங்கி உன்னுயிரை இழக்க இப்போது துணிந்துவிட்டாய். தியாகத்தை இப்போது நீ தெரிந்துகொண்டாய். கொஞ்சகாலம் என்னோடு இரு!" என்று இளைஞனைப் பார்த்துக் கூறினார் ஜென்குரு.

    தியாக வாழ்வே திறமான வாழ்வு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒழுக்கமும் உயிருமே மிக உயர்ந்த மதிப்புமிக்க பொருண்மைகள். ஒழுக்கத்தோடு வாழ்வது, தன்னுயிர் இழக்கும் தருணம் வந்தாலும், பிற இன்னுயிர்க்காகப் பாடுபடுவது இதுவே பயனுள்ள வாழ்க்கை. தற்பயன் கருதாமல், அடுத்தவர்க்கு உதவும் நற்பயன் கருதுவதே பயனுள்ள வாழ்க்கை.

    வாழ்க்கை நமக்கே நமக்கானதுதான்; நமக்கான வாழ்க்கையை நாம்தான் வாழ்ந்தாக வேண்டும். ஆனாலும் நான் என்பதில் நாமும் இருக்கிறது; நம்முடைய வாழ்வியலில் இந்த உலகமும் கலந்திருக்கிறது.அடுத்தவர்க்குப் பயனுள்ள வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கும்போது நமக்கான பயனும் அதில் அடங்கிப் போகிறது.

    தொடர்புக்கு 943190098

    Next Story
    ×