search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நிம்மதியே உன் விலைதான் என்ன?
    X

    நிம்மதியே உன் விலைதான் என்ன?

    • வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை இருக்கிறது.
    • ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலைமதிப்பு இருக்கிறது.

    வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நிம்மதியை நாடிநிற்கும் வாசக அன்பர்களே! வணக்கம்!.

    "வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை இருக்கிறது! ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலைமதிப்பு இருக்கிறது!

    இவற்றைச் சரியாகக் கண்டறிந்து விலைபேசத் தெரிந்தவர்களே இன்றைய வாணிப உலகில் வெற்றிபெற்ற மனிதர்களாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்!" என்று ஒரு நண்பர் கூறியதைக் கேட்டு அதிர்ந்துபோய் விட்டேன்.

    பணத்தை முதன்மையாகக் கருதத் தொடங்கிவிட்ட உலகில், எதைக்கொடுத்தும் எதையும் விலைபேசி வாங்கிவிடலாம் என்று கருதத் தொடங்கிவிட்டனர் மக்கள்.

    எந்த பொருளுக்கு என்ன விலை சொன்னாலும் வாங்கிவிடக்கூடிய அளவுக்கு வசதியும் வாய்ப்பும் நிறைந்த பெருமக்கள் உலகில் பெருகியே காணப்படுகின்றனர். ஆனால் நாம் எதிர்பார்க்கின்ற மனத்தின் நிறைவையும் பலனையும் அந்தப் பொருள் தந்துவிடுகிறதா? என்று பார்த்தால் பதில் 'இல்லவே இல்லை!' என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

    'டன்' கணக்கில் குளிரூட்டப்பட்ட நட்சத்திர அந்தஸ்துள்ள உணவுஅரங்கில், விதம் விதமான உணவு வகைகளை, உலகின் தலைசிறந்த சமையல் கலைஞர்களைக் கொண்டு சமைத்து அடுக்கி, லட்சக்கணக்கில் பணம் செலவழித்துக் குடும்பத்தினர் நண்பர்கள் சூழ விருந்து சாப்பிட்டு வெளியேறினாலும் சிலருக்கு நிம்மதி என்பது கிடைப்பதே இல்லை.

    அதே நேரத்தில், நேற்று வடித்து ஊற வைத்த பழைய சோற்றை, வெறும் உப்பு மட்டும் போட்டு, அரிந்து சாப்பிட்டுவிட்டு, எஞ்சியுள்ள நீராகாரக் கஞ்சியைக் குடிக்கும்போது ஏற்படும் நிம்மதிக்கும் திருப்திக்கும் அளவே இல்லை! என்றும்கூட ஆகிப் போகலாம்.

    நிம்மதி, திருப்தி, மகிழ்ச்சி, மன நிறைவு, முழுமை என்பவை எல்லாம் பணம் கொடுத்து வாங்கும் பொருள்களிலோ அல்லது செய்யும் செலவுகளிலோ அமைந்து விடுவதில்லை. மாறாக முற்றிலும் அவை மனம் சார்ந்து அமைந்து விடுபவை.

    மன நிறைவோடு நாம் ஒருவருக்கு ஒரு ரூபாய் வழங்கினாலும் அது ஒரு கோடிரூபாய்க்குச் சமமானதாகும். அதே வேளையில் வேண்டா வெறுப்பாக ஒருகோடிரூபாய் தந்தாலும் அது ஒருரூபாய்க்கு நிகரான தானதர்ம பலனைக்கூட வழங்காது.

    உறங்கப் போகிறோம்!; விலை உயர்ந்த கட்டில் மெத்தைகள் போட்டு, அடுக்கிவைத்துக் குளிரூட்டப்பட்ட மாடி அறைகளில் உறங்கப் போகிறோம். எத்தனை பேருக்கு நிம்மதியான உறக்கம் வந்து விடப்போகிறது?.

    கிராமத்து வீடுகளில் சாணம்கரைத்து மெழுகிய தரைகளில், அம்மாவின் பழைய சேலையொன்றை விரித்துத் தூங்கும்போது உண்டாகிற நிம்மதியான உறக்கத்தில், பத்தில் ஒருபங்கை யாவது நாம் அனுபவித்திருப்போமா?. இங்கே நிம்மதி என்பது ஆத்தாவின் பழைய சேலையில் வாசம் கொண்டிருக்கிறதா? இல்லை கட்டில் மெத்தை வாசனை திரவியங்களில் குடிகொண்டிருக்கிறதா?.

    மனிதன் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதற்கு உடம்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த உடம்பிற்குள் நிறுத்தப்பட்டிருக்கிற உயிர்தான் உண்மையில் அந்த மனிதன்; உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்பது! அல்லது உயிரை வளர்த்து உடம்பை வளர்ப்பது! என எது எப்படி ஆயினும் மனித வாழ்க்கைக்கு உடம்பு பிரதானமானது.

    அந்த மனிதன் அறிவின் துணைகொண்டு, வாழ்வியலை நெறிவழிநின்று வாழ்வதற்காகக், கண், காது, மூக்கு, வாய், உடம்பு ஆகிய ஐந்து புலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கண்களைக் கொண்டு இந்த உலக நடப்பியலைக் கண்டு தெளிவது; காட்சி இன்பங்களைக் கண்டு அனுபவிப்பது. செவியின் துணைகொண்டு ஓசைமயமாகத் திகழும் உலகியல் இசையில் திளைத்து மகிழ்வது; தேவையற்ற இரைச்சல்களை உருவாக்காமலும், அவற்றிலிருந்து விலகியும் வாழக்கற்றுக்கொள்வது.

    வாய் மற்றும் நாக்கின் துணைகொண்டு, நல்ல பயன்விளைவிக்கும் இனிமையான சொற்களை உருவாக்கிப் பேசுவது; தேவையற்ற சொற்களைச் சிந்திக்காமலும் பேசாமலும் காத்துக்கொள்வது; உடம்பு வளர்க்கும் உபாயமாகும்.

    மருந்தணைய உணவை மட்டுமே உண்பது; உபத்திரவம் தரும் தீய உணவுகளை உண்ணாமல் தவிர்த்து விடுவது; நாக்கின் சுவை நரம்புகளின் உதவியோடு சுவையான உணவுகளை அடையாளம் கண்டு உருவாக்கி உடல்நலத்திற்கு ஆதாரமாக்கி உதவுவது.

    மூக்கின் துணைகொண்டு தெய்வீக நறுமண வாசத்தில் திளைத்திருப்பது; மூச்சுச் சுவாசத்தை நேரிய முறையில் சுவாசித்து உள்ளிழுக்கவும், உள் நிறுத்தவும், வெளியேற்றவும் கற்றிருப்பது.

    உடலின் உற்றறியும் உணர்ச்சியினால், சிற்றின்ப மோக வலைக்கு உட்படாது, மாந்த இனம் வளர்ப்பது; பக்திப்பயிர் செழிக்கச் செய்வது; மாந்தநேயம் செழிக்கச் செய்வது.

    இவ்வாறாக மனித வாழ்வை நேர்நிறைப்படுத்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து புலன்கள் மதிப்புக்கூட்டப்பட்ட நிலையில் வழங்கப்பட்டுள்ளன; இவற்றுள் ஒருசிலருக்குப் புலன்களில் குறைபாடுகள் இருந்தாலும் மாற்றுத் திறன்கள்மூலம் அவர்கள் திறம்படச் செயல்பட முடியும்.

    மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஐந்து புலன்களும் வரங்களாகவே வழங்கப்பட்டுள்ளன என்றாலும் நம்மில் பெரும்பாலானோர் அவற்றைச் சாபங்களாகவே நிலைமாற்றித் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

    கண்கள் பார்த்துப் பார்த்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன எதிலும் நிம்மதியும் திருப்தியும் அடையாமல்!. செவிகள் எவ்விசையிலும் லயிக்காமல், பேரிரைச்சல் பேருலகில் மனம் பேதலித்துப்போய்க் கிடக்கின்றன.

    வாயும் நாவும் பேசிச் சலித்த சொற்களோடும், உண்டு நிறைத்துப்போன குப்பைகளோடும் அல்லாடிக் கிடக்கின்றன. மூக்கிற்கு மூடி இல்லையென்றாலும், சதா சர்வகாலமும் எதையாவது கொண்டு அடைத்திருக்கிற மூக்காகவே திகழ்ந்து கொண்டிருக்கின்றன இந்த நாற்றமெடுத்த சூழல் உலகில்!. . உணர்வின் பிண்டமாகத் திகழும் உடம்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

    இந்நிலையில் நிம்மதியும் திருப்தியும் நிறைந்த மனத்தை உருவாக்குவது எப்போது? மனம் என்பது என்ன? இந்த ஐந்து பொறிபுலன்கள் வழி நடப்பது மனம் ஆகும். இவற்றைத் தலைமையேற்றுச் செலுத்த வேண்டிய கடமையும் மனத்திற்கு உண்டு. அதனால்தான் மனவொடுக்கம், மனக் கட்டுப்பாடு வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது?.

    ஐந்து பொறிபுலன்கள்வழி அலைக்கழிக்கப் படும் மனம் ஆசைவயப்படுகிறது. அதைச் செய்தால் என்ன? இதைச் செய்தால் என்ன? என்று அலைபாயத் தொடங்கினால் மனத்தில் நிம்மதியும் திருப்தியும் எவ்வாறு வந்து சேரும்?.

    எதையாவது விற்று எதையாவது வாங்குவோம்! என்பது போல என்ன விலைகொடுத்து, எந்த வழியில் முயன்று நாம் நிம்மதியை வாங்குவோம்? என்று இரவும் பகலும் நாள்தோறும் மனம் அல்லாடிக்கொண்டிருக்கிறது.

    ஓர் ஓய்வுபெற்ற மேலாண்மைத் துறைப் பேராசிரியர்; இந்தியாவின் புகழ்மிக்க மேலாண்மைத்துறைக் கல்வி நிறுவனத்தில் தன்னிடத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒருநாள் அவரது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.

    உலகின் புகழ்மிக்க பல நிறுவனங்களில் மேலாண்மைத் துறை மேலாளர்களாகப் பணிபுரியும் பலர் அந்தச் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்து தமது பேராசிரியர்க்குச் சிறப்புச் செய்தனர்.

    வந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நிபுணர்கள் தங்களது வெற்றி வரலாற்றைக் கதைகளாகப் பெருமிதத்துடன் பேசிப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் அவர்கள் அனைவரது பேச்சிலும் சொல்லி வைத்ததுபோல ஒரு மனக்குறையும் முன்வைக்கப்பட்டது. அதாவது எவ்வளவுதான் செய்நேர்த்தியுடன் எந்தச் செயலைச் செய்தாலும் அது அவர்களுக்கு ஒரு மன அழுத்தத்தை அளித்திடத் தவறவில்லை! என்பதே ஆகும்.

    முன்னாள் மாணவர்களின் பேச்சைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டே, அனைவரும் பருகுவதற்காக ஒரு பாத்திரம் நிறையத் தேநீரைப் பேராசிரியர் தயாரித்து விட்டார். அதுமட்டுமல்லாது, தேநீர் பருகுவதற்குக் கோப்பைகள் வேண்டுமே?

    வீட்டின் சமையலறையில் இருந்த கண்ணாடி, பீங்கான் கோப்பைகள், வெள்ளி, எவர்சில்வர் டம்ளர்கள், மற்றும் பற்றாக்குறைக்கு பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளையும் கொண்டுவந்து தேநீர்ப் பாத்திரத்தின் அருகே வைத்தார். அனைத்து முன்னாள் மாணவர்களையும் அழைத்து வேண்டுமென்பவர்கள் வேண்டுமென்கிற அளவுக்கு வேண்டுமென்கிற கோப்பைகளில் நிரப்பிக் குடித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கவும் செய்தார்.

    எல்லா முன்னாள் மாணவர்களும் மகிழ்ச்சியுடன் முன்வந்து பேராசிரியர் தயாரித்திருந்த சுவையான தேநீரை அவரவர்க்கு விருப்பமான கப்புகளில் நிரப்பிப் பருகத் தொடங்கினர்.

    எல்லாரும் சொல்லி வைத்ததுபோல முதலில் விலையுயர்ந்த வெள்ளி டம்ளர்கள், பிறகு, பீங்கான் கோப்பைகள், அடுத்துக் கண்ணாடிக் கோப்பைகள் என விலையுயர்ந்த பொருள்களின் அடிப்படையிலேயே குவளைகளைத் தேர்ந்தெடுத்து ஊற்றிப் பருகினர். இவை எதுவுமே கிட்டாதவர்களே கடைசியில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளில் தேநீரை இட்டுநிரப்பிக் குடிக்கத் தொடங்கினர்.

    இப்போது கையில் தானுமொரு பேப்பர் கப்பில் தேநீரை நிரப்பிக்கொண்டு வந்து, தனது முன்னாள் மாணவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார் பேராசிரியர்." நான் கவனித்தேன்; எல்லோரும் முதலில் விலையுயர்ந்த கோப்பைகளையே தேந்தெடுக்கத் தொடங்கினீர்கள்!. நான் தயாரித்த தேநீர் ஒன்றுதான்; சுவையும் ஒரே தரம் தான்.

    ஆனால் கோப்பைகளில் என்ன மாறுதல் வந்து விடப்போகிறது? வெள்ளி டம்ளர்களில் சுவை கூடவும், பேப்பர் கப்புகளில் சுவை குறையவுமா நடந்துவிடப்போகிறது?. அடுத்தவர் கோப்பைகளைப் பார்த்தே வாழத் தொடங்கினால் நம்முடைய மன அழுத்தம்தான் பெருகுமேயொழிய நிச்சயம் அது குறையவே குறையாது!.

    வாழ்க்கையும் அப்படித்தான். விலை உயர்ந்தவையோ விலை குறைந்தவையோ அவை நிச்சயம் பொருள்களின் தரத்தை மாற்றியமைத்துவிடப் போவதில்லை; அதைப்போல பொருள்களின் நிம்மதியை அவற்றின் விலைகள் தீர்மானித்துவிடப் போவதில்லை!"

    பேராசிரியரின் பேச்சைக்கேட்ட அனைவரு க்கும் மன அழுத்தம் சென்ற இடம் தெரியவில்லை. மன அழுத்தமற்ற மனம் என்பது மனத்தின் உள் அமைதி ஆகும். அதுவே நிம்மதி! அதுவே மன நிறைவுதரும் மகிழ்ச்சியும் ஆகும்.

    நிம்மதி என்பது எப்போதும் வெளியிலிருந்து வருவதன்று. உள்முக அமைதியிலிருந்து ஊற்றாகப் பெருக்கெடுப்பது. உள்முக அமைதி வாய்த்தவர்க்கு எந்த வித இக்கட்டான சூழ்நிலையும் இலகுவான மனத்தையே நல்கிடும்.

    எது வாய்த்தாலும் அது இன்பமாயினும் துன்பமாயினும் அதில் நன்மையே வாய்த்திடும் என்னும் நன்முறை எண்ணத்தை மனம் ஏற்கனவே முன்முகத் தயாரிப்பாகச் செய்து வைத்துக்கொள்ளும்.

    எல்லாவற்றிலும் நிறைவையே காண்பேன்! என்று எண்ணித் துணியும்போது, செய்கிற எல்லாச் செயல்களும் இலகுவானதாகவும் செய்வதற்குக் கடினமற்றவையாகவும் மாறிப்போவதை உணரலாம். இதனால் மகிழ்ச்சி என்பது எவ்வளவு கடின காரியத்தை எதிர்கொள்ளத் தொடங்கும்போதும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

    மகிழ்ச்சி வந்து தட்டிக்கொடுக்கும் போதெல்லாம் செயலாற்றுவதற்குத் தேவையான துணிச்சலும் தாமாக வந்து நமது பலமாகப் பற்றிக் கொள்ளும்.

    எளிமை, இனிமை, மகிழ்ச்சி, துணிச்சல், உள்முக அமைதி இவை வந்து விட்டால் மனத்தில் நிம்மதியைத் தவிர வேறு என்ன வந்துவிடப்போகிறது?

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×