என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
சினிமா-அரசியலில் உங்கள் ரோஜா: குமரி தங்கம்
- செல்வா வித்தியாசமானவர். அவர் பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். கடவுள் மறுப்பாளர் கிடையாது. அண்ணா சொன்னது போல் ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று அடிக்கடி பேசுவார்.
- அரசியலில் இரு வேறு துருவங்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இவர்களில் யாரைத்தான் கூப்பிடுவது என்ற பிரச்சினை மிகப் பெரிய விவாதமாக எங்கள் குடும்பத்திற்குள் எழுந்தது.
காதலுக்காக மிக நீண்ட காலம் உறுதியாக இருந்தது நானும், என் கணவர் செல்வா மட்டுமாகத்தான் இருக்கும். 12 ஆண்டுகள் என்பது எவ்வளவு நீண்ட காலம். இளம் வயதில் காதலித்து கல்யாணத்திற்காக இத்தனை ஆண்டு காலம் காத்திருப்பது ஆச்சரியமானது தான். ஆனால் நாங்கள் எங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். எனவே ஆண்டுகள் நகர்ந்தது நாட்களாகத்தான் எங்களுக்கு தெரிந்தது. ஆனாலும் எத்தனை ஆண்டுகள் இப்படியே இருப்பது. சீக்கிரம் நாமும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் அவ்வப்போது வந்தாலும் அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தான் எங்கள் இரு வீட்டு பெற்றோரும் எங்களை திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள்.
என் அம்மாவும், செல்வாவின் அம்மாவும் மிகவும் நெருங்கிவிட்டார்கள். அதேபோல் என் அண்ணன்களும், அவரது உறவினர்களும் நெருங்கிய நட்புடன் இருந்தார்கள். அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு நாங்கள் செல்வது, எங்கள் வீட்டுக்கு அவர்கள் வருவது என்று எங்கள் குடும்ப உறவும் பிரிக்க முடியாத உறவுகளாகி போனது. நான் படப்பிடிப்புக்கு செல்லும் போது எனக்கு துணையாக என் அம்மா வரமுடியவில்லை என்றால் செல்வாவின் அம்மா தான் வருவார். அதே போல் அவரது சகோதரிகளும் வருவது உண்டு.
இப்படியே எங்களை பார்த்துக் கொண்டு இருந்த இரு குடும்பத்தினரும் இவர்களுக்கு சீக்கிரமே ஒரு கால்கட்டை போட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதனால் தான் அடிக்கடி கல்யாணப் பேச்சை எடுத்தார்கள். எங்களுக்கு மட்டும் ஆசை இல்லாமலா இருந்தது? நேரம் கைகூடவில்லையே?
இந்த சூழ்நிலையில் எனது 100-வது படம் பொட்டு அம்மன் ஹிட் படமாக அமைந்தது. பொதுவாக திரையுலகில் ஹீரோ 100 படங்கள் நடித்துவிட்டால் அதை பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். ஆனால் ஹீரோயின் நடித்து இருந்தால் பிரபலமாக பேசப்படாது. ஆனால் செல்வாவுக்கு ஒரு ஆசை நான் 100-வது படம் நடித்து முடித்ததை மிகப்பெரிய வெற்றி விழாவாக கொண்டாடுவதற்கு முடிவு செய்தார். மிகவும் சிரமப்பட்டு அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். விழாவுக்கு இயக்குனர் சிகரம் பாரதிராஜா தலைமை தாங்கினார். விழா தொடங்கி பிரமாண்டமாக சென்று கொண்டு இருந்தது.
பாரதிராஜா பேசத்தொடங்கியதும் எங்களை பற்றியும், எங்களுக்குள் மலர்ந்து மணம் வீசிக்கொண்டு இருந்த காதலை பற்றியும் மிகவும் பெருமையாக பேசினார். பேசியதோடு மட்டும் அவர் நிறுத்தவில்லை. எத்தனை காலம் தான் நீங்கள் இப்படியே இருப்பீர்கள் என்று கேட்டபடி எங்கள் இருவரையும் மேடையில் நிற்க வைத்து ஒரு மஞ்சள் துணியால் இருவரது கைகளையும் கட்டி விட்டு திருமண பந்தத்திற்கு நான் முடிச்சு போட்டு சேர்த்து வைத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சீக்கிரம் திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று இரு குடும்பத்தினரும் மும்முரமாக இறங்கினார்கள்.
செல்வா வித்தியாசமானவர். அவர் பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். கடவுள் மறுப்பாளர் கிடையாது. அண்ணா சொன்னது போல் ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று அடிக்கடி பேசுவார். நமக்கும் மேலாக ஒரு சக்தி இருக்கிறது. அது கடவுள் சக்தியாக இருக்கலாம். அதற்கு ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பெயரை சொல்லி வழிபடுகிறோம். எனவே அந்த சாமியை கும்பிட வேண்டும். இந்த சாமி கும்பிட வேண்டும், அந்த கோவிலுக்கு போக வேண்டும், இந்த கோவிலுக்கு போக வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு பிடிக்காது. வீட்டில் சாமி கும்பிடுவதோடு சரி. ஆனால் நான் நேர்மாறாக இருந்தேன். எனக்கு கடவுள் நம்பிக்கை மிக அதிகம். எல்லா கோவில்களுக்கும் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவேன். எப்போதும் விரதங்கள் விசேஷங்கள் என்று வந்தால் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு சென்று வழிபடுவேன். இதனால் நானும் என்னைப்போல் அவரையும் எல்லா இடத்திற்கும் அழைத்து செல்ல தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது அவரும் என்னைப்போலவே மாறிவிட்டார்.
எங்கள் குடும்பங்களில் கல்யாண பேச்சு எழுந்ததும் நாங்களும் இத்தனை ஆண்டுகள் காதல் பறவைகளாக சுற்றியது போதும். இனி கணவன், மனைவியாக வாழத்தொடங்குவோம் என்று முடிவெடுத்தோம். நாங்களும் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டதால் இரண்டு குடும்பங்களிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.
திருமணத்தை எங்கே வைத்து நடத்துவது என்று கேள்வி வந்தது. எனக்கு திருப்பதி பெருமாள் என்றால் உயிர். எனவே திருப்பதியில் வைத்து தான்திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றேன். எனது ஆசைக்கு எல்லோரும் ஒத்துக்கொண்டா ர்கள். இதையடுத்து திருமணம் நடத்துவதற்காக திருச்சானூரில் மண்டபம் பார்த்தோம். அதில் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். மண்டபத்தின் பெயரும் ஆர்.கே. மண்டபம். திருப்பதியில் திருமணத்தை முடித்து விட்டு சென்னையில் வரவேற்பு விழா நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
திருமணத்திற்கு நாள் குறித்தாயிற்று. யார் தலைமையில் திருமணத்தை நடத்துவது. சென்னையில் யார் தலைமையில் வரவேற்பு விழா நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது நான் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்ததால் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்க சம்மதித்தார்.
அடுத்து ஒரு முக்கியமான கேள்வி வந்தது. சென்னையில் வரவேற்பை யார் தலைமையில் நடத்துவது என்பது தான் அது. செல்வா, கருணாநிதி தலைமையில் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆனால் எனக்கோ ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். அவரை நேரில் சந்தித்தது கிடையாது. ஆனாலும் அவரது ஆளுமை, தைரியம், துணிச்சல் எல்லாவற்றையும் பார்த்து வியந்து போய் இருந்தேன். எனவே எப்படியாவது ஜெயலலிதா தலைமையில் வரவேற்பு விழாவை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அரசியலில் இரு வேறு துருவங்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இவர்களில் யாரைத்தான் கூப்பிடுவது என்ற பிரச்சினை மிகப் பெரிய விவாதமாக எங்கள் குடும்பத்திற்குள் எழுந்தது. அதனாலேயே திருமணம் செய்வதற்கான நாட்களும் தள்ளி போனது. கடைசியில் யாரைத் தான் அழைத்தோம், யார் தலைமையில் வரவேற்பு விழா நடந்தது என்பது பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்...
(தொடரும்)
ttk200@gmail.com
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்