search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதல்
    X

    தொடரை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையுடன் இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்

    20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதல்

    • வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மோசமான தோல்வியால் இலங்கை அணியில் நிறைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பல்லகெலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

    இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

    கடந்த மாதம் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றதும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேயில் நடந்த 20 ஓவர் தொடரை இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    தற்போது இந்திய அணி, உள்ளூரில் பலம் வாய்ந்த இலங்கையை சந்திக்கிறது. இதனை இந்திய அணியின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் எனலாம். ஏனெனில் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய 20 ஓவர் அணி களம் காணும் முதல் ஆட்டம் இதுவாகும். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

    உலக சாம்பியனான இந்தியா தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் தயாராகியுள்ளது. கோலி, ரோகித் சர்மா இல்லாததால் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் களம் இறங்குவார்கள். விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் இடையே கடும் போட்டி நிலவினாலும் ரிஷப் பண்டுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ், ரவி பிஷ்னோய் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அசத்தக்கூடியவர்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மோசமான தோல்வியால் இலங்கை அணியில் நிறைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக அசலங்காவும், புதிய தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யாவும் இந்த தொடரில் இருந்து பொறுப்பேற்று செயல்பட இருக்கிறார்கள்.

    அந்த அணியில் பேட்டிங்கில் குசல் மென்டிஸ், தினேஷ் சன்டிமால், பதும் நிசாங்கா, குசல் பெரேராவும், பந்து வீச்சில் மதுஷன்கா, பதிரானா, தீக்ஷனாவும், ஆல்-ரவுண்டராக ஹசரங்கா, ஷனகாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சுக்கு சற்று அனுகூலமான இந்த ஆடுகளத்தில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்தா சமீரா, நுவான் துஷரா ஆகியோர் காயம் காரணமாக ஆடாதது இலங்கைக்கு இழப்பாகும்.

    மொத்தத்தில் தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 19 ஆட்டத்திலும், இலங்கை 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய் அல்லது வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் அல்லது கலீல் அகமது.

    இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், குஷல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, அசலங்கா (கேப்டன்), ஹசரங்கா, தசுன் ஷனகா, தீக்ஷனா, அசிதா பெர்னாண்டோ அல்லது பினுரா பெர்னாண்டோ, மதுஷன்கா, பதிரானா.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 3, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    Next Story
    ×