search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கலவையான விமர்சனங்களை அள்ளிய வேலைக்காரன் பாணி நேரடி கள வருணனை
    X

    கலவையான விமர்சனங்களை அள்ளிய வேலைக்காரன் பாணி நேரடி கள வருணனை

    ஐசிசி உலகலெவன் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 போட்டியில் புத்தம் புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட மைதானத்தின் உள்ளே நின்று வருணனை செய்யும் முறையானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

    ஷகீத் அப்ரிடி தலைமையிலான உலக லெவன் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அப்ரிடி விளையாடும் கடைசி சர்வதேச போட்டியான இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. உலக லெவன் அணி பந்திவீச்சில் ரஷித் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 

    இதன்மூலம் உலக லெவன் அணியின் வெற்றிக்கு 200 ரன்களை இலக்காக வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயித்தது. இதையடுத்து உலக லெவன் அணி பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சில் உலக லெவன் அணி 16.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

    வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்களும், சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஐசிசி ஒரு புதிய அம்சத்தை சேர்த்தது.



    மைதானத்தில் ஒரு அறையில் அமர்ந்து வருணனையாளர்கள் ஆட்டத்தை நேரலையாக வருணனை செய்வார்கள். ஆனால், இந்த போட்டியில் களத்திற்கே வருணனையாளர் நாசர் உசைன் சென்று ஆட்டத்தை வருணனை செய்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில், பிரகாஷ் ராஜ் செய்யும் சண்டைக்காட்சி ஒன்றை ரேடியோவில் ஹீரோ சிவகார்த்திகேயன் களத்தில் இருந்தே நேரலையாக வருணனை செய்வார்.

    இதேபோல, டி20 ஆட்டம் தொடங்கியதும் வருணனையாளர் நாசர் உசைன் கையில் மைக் உடன் களத்தில் இறங்கினார். முதல் ஓவரில் ஸ்லிப் திசையில் நின்று கொண்டு ஆட்டத்தை வருணனை செய்தார். இரண்டு ஓவர்கள் களத்தில் இருந்த அவர் பின்னர், பார்வையாளர்கள் வேலி பக்கம் நின்று கொண்டு வருணனை செய்தார்.

    அவ்வப்போது, பீல்டிங் நின்று கொண்டிருந்த வீரர்களிடம் மைக்கை நீட்டி கேள்விகளையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த புதிய வருணனை முயற்சி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. பலர் இந்த முயற்சியை வரவேற்ற நிலையில், ஒரு சிலர் ஆட்டத்தின் போக்கை இது சீர் குலைக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×