search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம்.
    • ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 12-ந் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டம் இதுவாகும்.

    சென்னை - ராஜஸ்தான் மோதலுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    • சன்ரைசர்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    • இன்றைய போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

    நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்னுக்கு மேல் குவித்து வியக்க வைத்த ஐதராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது.

    இருப்பினும் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறும்பட்சத்தில் அந்த அணி தடாலடியாக சரிவை சந்திக்கிறது.

    கடந்த 4 ஆட்டங்களில் 3 சறுக்கலை சந்தித்துள்ள ஐதராபாத் அணி முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் ஐதராபாத் நிர்ணயித்த 174 ரன் இலக்கை மும்பை அணி 17.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தது அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. எனவே அந்த அணி சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களது பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டியது முக்கியமானதாகும்.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 444 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (339), அபிஷேக் ஷர்மா (326), நிதிஷ்குமார் ரெட்டியும், பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமாரும் வலுசேர்க்கிறார்கள்.

    கடந்த சில ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மாவும், ஹென்ரிச் கிளாசெனும் நிலைத்து நின்று ஆடாதது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. மேலும் ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    லக்னோ அணி

    லக்னோ அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் ஐதராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய ஆட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும்.

    லக்னோ அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மண்ணை கவ்வியது. 236 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் 137 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் (36 ரன்), லோகேஷ் ராகுல் (25 ரன்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த மோசமான தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் லக்னோ அணி உள்ளது.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதம் உள்பட 431 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (ஒரு சதம், 2  அரைசதம் உள்பட 352 ரன்), நிகோலஸ் பூரன் (315 ரன்), குயின்டான் டி காக் நல்ல நிலையில் உள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர்

    மயங்க் யாதவ் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனதுடன், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணியின் பந்து வீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    பந்து வீச்சில் யாஷ் தாக்குர், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கிறார்கள். குருணல் பாண்ட்யா ஏற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.

    வெற்றிப்பாதைக்கு திரும்பி 7-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன்.

    லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிலோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், குருணல் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக், மொசின் கான் அல்லது யாஷ் தாக்குர்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார்.
    • டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் முதல் பந்தை பவுண்டரி விளாச 2 பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

    மெதுவாக விளையாடிய பட்லர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரியான் பராக் சாம்சனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரைசதம் விளாசினார். தடுமாற்றத்துடன் விளையாடிய பராக் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார். இந்த அவுட் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அதற்கு சாம்சன் ரீவ்யூ கேட்டார். ஆனால் 3-வது நடுவர் அதனை அவுட் கொடுத்ததால் ரீவ்யூ எடுக்க முடியாது என கூறினர்.

    இதனை தொடர்ந்து அதிரடி காட்டிய சுபம் துபே 12 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய பவல் 13 ரன்னில் போல்ட் ஆனார்.

    இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
    • ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாஹல் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    ஐபிஎல் டி20 தொடரின் 56-வது லீக் போட்டி இன்று டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    சாஹல் இந்த போட்டியில் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் சேர்த்து சாஹால் 350 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அவருக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா 310, ரவிச்சந்திரன் அஸ்வின் 306 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.  

    • டெல்லி அணியில் அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் விளாசினார்.
    • ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக போரல் - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 19 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார். அரை சதம் அடித்த கையோடு அவர் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த சாய் ஹோப் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து அக்சர் படேல் 15, பண்ட் 15 என வெளியேறினார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய போரல் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

    இதனை தொடர்ந்து ஸ்டப்ஸ் மர்றும் குல்புதின் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
    • இதன் மூலமாக 9-வது முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.

    ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த 9-வது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், கனடா, உகாண்டா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

    இந்த 20 அணிகளும் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய நேர்ந்தால் மே 25 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5-ம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் ரோகித் சர்மா விளையாடுவதன் மூலமாக 9-வது முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார். முதல் முறையாக கடந்த 2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடினார். இதில், விராட் கோலி கூட விளையாடவில்லை. ரோகித் சர்மா தனது 20-வது வயதில் டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.

    அடுத்து 2009, 2010, 2012, 2014, 2016, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.

    மேலும், ரிசர்வ் பிளேயர்ஸாக ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

    • முதலில் விளையாடிய வங்காளதேசம் அணி 165 ரன்கள் எடுத்தது.
    • ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    சட்டோகிராம்:

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என வங்காளதேச அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக டவ்ஹித் ஹ்ரிடோய் 57 ரன்னும், ஜாக்கர் அலி 44 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங் முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாய்லார்ட் கும்பி மற்றும் தடிவானாஷே மருமணி ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் ஜாய்லார்ட் கும்பி 9 ரன்னிலும், தடிவானாஷே மருமணி 31 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய பிரையன் பென்னட் 5 ரன், கிரேக் எர்வின் 7 ரன், சிக்கந்தர் ராசா 1 ரன், கிளைவ் மடாண்டே 11 ரன், ஜொனாதன் காம்ப்பெல் 21 ரன், லூக் ஜாங்வே 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இதையடுத்து வெலிங்டன் மசகட்சா மற்றும் பராஸ் அக்ரம் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 9 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் திரில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

    ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பராஸ் அக்ரம் 34 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் முகமது சைபுதீன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.

    • டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடும்போது காயம் ஏற்பட்டது.
    • உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் பந்து வீச்சுக்கு தயாராகிவிடுவார்- மெக்டொனால்டு

    ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ். ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். காலில் ஏற்பட்ட காயம் (hamstring) காரணமாக ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் ஆஸ்திரேலியா திரும்பினார்.

    அவர் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்குள் காயத்தில் இருந்து மீண்டு விடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில் "காயத்தில் இருந்து மீள்வதற்கான செயல்பாடு சிறப்பாக இருந்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை வரை அதிக நாட்கள் உள்ளது. முதல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒருமாத காலம் உள்ளது. அவர் தயாராவதற்கு போதுமான நேரம் உள்ளது.

    இன்னும் ஒன்றிரண்டு வாரங்கள் அவரால் பந்து வீச முடியாது. அதன்பின் அவர் பந்து வீச வாய்ப்புள்ளது. தொடரின்போது அவருடைய முழு பந்து வீச்சையும் பெறுவார்.

    இவ்வாறு மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

    • முதல் 7 போட்டிகளில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை ரோகித் குவித்தார்.
    • அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே 4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்றையை ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆனாலும், ரோகித் சர்மாவை பொருத்தவரையில் மேலும் ஒரு மோசமான போட்டியாகவே அது தொடர்ந்தது. காரணம் கடந்த ஐந்து போட்டிகளில், நான்குமுறை ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்துள்ளார். குறைந்தபட்சமாக 20 ரன்களை கூட அவர் சேர்க்கவில்லை.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ரோகித் சர்மா சிறப்பாகவே தொடங்கினார். அதன்படி முதல் 7 போட்டிகளில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை குவித்தார். ஆனால், அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே 4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், மைதானத்திலேயே கண்கலங்கி அழுதுள்ளார். கண்ணில் நீர் வழிந்தோட ரோகித் சர்மா அதை துடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "ரோகித்தை இப்படி பார்க்க முடியவில்லை, வலுவாக மீண்டும் கம்பேக் கொடுப்பீர்கள், வலிமையாக இருங்கள்" என ஒருதரப்பினர் ரோகித்திற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதேநேரம், "ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோகித் விளையாடக் கூடாது, இவர் தலைமையில் சென்றால் இந்திய அணி தோற்பது உறுதி, டி-20 உலகக் கோப்பையும் நமக்கு கிடையாது" என ஒருதரப்பினர் ரோகித்திற்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.

    • ரோகித் எப்போதும் வேடிக்கையாகவும், சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார்.
    • கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.

    இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வருகிற 26-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கான ரோகிசர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு நல்ல கேப்டன் தேவை. அழுத்தமான சூழ்நிலைகளின் போது தெளிவான முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன் ரோகித் சர்மா.

    2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை ரோகித் சர்மா அழைத்து சென்றார். அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவரைப் போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை.

    ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன். உலகக் கோப்பை பதக்கத்தை அவர் அணிய வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்.

    ரோகித் சர்மா வெற்றிகளை பெற்ற பின்னும் இன்னும் மாறவில்லை. அதுதான் ரோகித் சர்மாவின் அழகு. எப்போதும் வேடிக்கையாகவும், சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார். ஆடுகளத்தில் மிகச்சிறந்த தலைவராக இருப்பார். கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.

    இவ்வாறு யுவராஜ் கூறினார்.

    இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர் யுவராஜ் சிங். 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் போன்ற காரணங்களால் யுவராஜ் சிங்கிற்கு இந்த மரியாதைக்குரிய பதவி அளிக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறி இருந்தது.

    • 12-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டிக்கெட் வரும் 9-ம் தேதி (நாளை மறுநாள்) விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 10.40 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×