search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பேட்மிண்டனை காட்டிலும் கிரிக்கெட் கடினமானது அல்ல என சாய்னா நேவால் தெரிவித்தார்.
    • சானியா நேவாலிடம் கொல்கத்தா வீரர் ரகுவன்ஷி மன்னிப்பு கோரினார்.

    பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தையும் அலங்கரித்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

    ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.

    இந்நிலையில் டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என கடந்த மாதம் சாய்னா நேவால் தெரிவித்தார்.

    இதற்கு கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி பதலளிக்கும் வகையில், நீங்கள் பும்ராவின் 150 கி.மீ வேகத்தை தலையில் வாங்கி பாருங்கள் அப்போது தெரியும் என கூறினார். இந்த கருத்து ரசிகர்களிடையே எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

    இதனையடுத்து அந்த கருத்து தொடர்பாக சாய்னா நேவாலிடம் ரகுவன்ஷி மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்டில் சாய்னா நேவால் பேசியுள்ளார்.

    விராட் கோலி, ரோகித் போன்று ஆக வேண்டும் பலர் ஆசைப்படுவார்கள். ஆனால் சில வீரர்களால் மட்டும் தான் அதை அடைவார்கள். அதை நான் திறமை என்று நெனைக்கிறேன். நான் ஏன் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும்.

    பும்ரா பேட்மிண்டன் விளையாடினால் அவர் என்னுடைய 300 கிமீ வேகத்திலான ஸ்மாஷ்-ஐ எதிர்கொள்ள முடியாது.

    நாம் நமது நாட்டுக்குள்ளே இப்படி சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இங்கே இடம் உள்ளது. ஆனால், நீங்கள் மற்ற விளையாட்டுக்கும் மதிப்பு கொடுங்கள். எப்போதும் நாம் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் மீதுதான் கவனம் செலுத்துகிறோம்.

    நம்மிடம் எத்தனை பேட்மிண்டன் அகாடமிகள் உள்ளன? கிரிக்கெட்டில் எத்தனை அகாடமிகள் உள்ளன. பேட்மிண்டன் விளையாட்டுக்கு போதுமான வசதிகள் இருந்தால் தரமான வீரர்கள் உருவாகுவார்கள்" என்று பேசியுள்ளார்.

    • காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.
    • நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம் என காம்ப்ளி கூறினார்.

    சில நாள்களுக்கு முன்பு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததையும், அவரால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை என்பதையும் அந்த காணொளியில் காண முடிந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரின் இத்தகைய நிலையைக் கண்டு, ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்து, அவருக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் வினோத் காம்ப்ளி தனது வைரலான வீடியோ குறித்து அவர்களிடம் பேசுகையில். "நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம்" என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு காம்ப்ளியின் நண்பர் மார்கஸ் கூறுகையில், "நாங்கள் அவரை சந்தித்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் குணமடைந்து வருகிறார், அவரது உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. வைரலாகி வரும் காணொளி பழையது" என்று தெரிவித்துள்ளார். 

    இதன்மூலம் வினோத் காம்ப்ளி தற்சமயம் நலமுடன் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரராக அறியபட்ட வினோத் காம்ப்ளி, இந்திய அணிக்காக 1991-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3,500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • காயத்தில் இருந்து மீண்ட சமி பேட்டிங்கில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் இந்திய வீரர் முகமது ஷமி தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இலங்கை அணியிடம் இழந்துள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

    இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சமி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின. காயத்தால் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் முகமது சமி பங்கேற்காமல் இருந்தார்.


    இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது சமி இந்திய அணிக்கு திரும்புவதற்கு முன்னதாக ஊள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது கம்பேக்கிற்காக கடினமாக உழைத்து வரும் அவர் தற்சமயம் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 357 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 113 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ஆன டோனி டி ஜோர்ஜி 78 ரன்னும், கேப்டன் பவுமா 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 357 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வியான் முல்டர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு பயிற்சி அளிப்பது சற்று வித்தியாசமானது.
    • நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன்.

    இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளையடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி முன்னாள் வீரர்களான குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் இந்தியாவின் ராகுல் டிராவிட்டின் பெயரும் இடம்பிடித்திருந்தது.

    இநிலையில் சர்வதேச அணிக்கு பயிற்சியாளராக இருப்பதை விட ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளராக தொடர விரும்புவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    இப்போது எனக்கு சர்வதேச அணிக்காக பயிற்சியாளராக செயல்படுவதற்கு உண்மையில் எனக்கு நேரம் இல்லை என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு சர்வதேச அணியில் பயிற்சியாளராக இருக்க வேண்டும் எனில் அதற்காக அதிக நேரத்தை செலுத்த வேண்டும்.

    மேலும் எனது வர்ணனையாளர் வேலைகள் மற்றும் கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தினருடன் அதிகம் நேரத்தை செலவிடாதது உள்ளிட்ட காரணங்களினாலும் இதனை என்னால் செய்யமுடியாது. மற்ற சர்வதேச அணிகளுக்கு பயிற்சியளிப்பதை ஒப்பீடுகையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு பயிற்சி அளிப்பது சற்று வித்தியாசமானது.

    இப்போது இங்கிலாந்து அணி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தங்கள் பயிற்சியாளரை நியமிக்கும் என்பதால், என்னால் அதில் அதிகளவு ஈடுபடுத்த முடியாது. எனவே அவர்கள் தங்களுடைய பட்டியலில் இருந்து எனது பெயரை இப்போதே நீக்கிவிடலாம்.

    மேற்கொண்டு நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் இத்தொடரின் ஆரம்ப நாட்களில் ஒரு வீரராக இருந்தாலும் சரி அல்லது மும்பையில் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சில வருடங்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு வருடமும் நான் எனது சிறந்த செயல்பாட்டை வழங்கி இருக்கிறேன்.

    மேலும் டெல்லி அணியில் கடந்த ஏழு சீசன்களாக பயிற்சியாளராக இருந்த நிலைலும், துரதிர்ஷ்டவசமாக நான் விரும்பிய விதத்தில் எதும் நடக்கவில்லை. அதனால் அவர்கள் இம்முடிவை எடுத்திருக்கலாம்.

    என்று பாண்டிங் கூறினார்.

    • இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடரை இழந்து இருக்கிறது.
    • இலங்கைக்கு எதிரான தொடரில் பும்ரா இடம் பெறவில்லை.

    கொழும்பு:

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடரை இழந்து இருக்கிறது. இந்த தொடரில் முதல் முறையாக பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ள கம்பீருக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    பந்துவீச்சில் இந்த தொடரில் இந்தியா சொதப்பியது என்று சொன்னால் பேட்டிங்கில் மிகவும் மோசமாக விளையாடியது. இலங்கை அணி விக்கெட்டுகளை முதலில் அடுத்தடுத்து எடுத்தாலும் கடைசி மூன்று வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்தியா தடுமாறியது. இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் இந்தியாவை கிண்டல் அடித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு ஜீரோவாக இருக்கிறது. மேலும் தாம் சொல்வதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பலரும் நீங்கள் சொல்வது சரிதான் பும்ரா போன்ற ஒரு வீரர் இல்லாமல் இந்தியா தடுமாறி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    கடந்த டி20 உலக கோப்பையில் பும்ரா 15 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக முஹம்மது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இந்த தொடரில் விளையாடினர். அதிலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆர்ஸ்தீப் சிங் இடம்பெறவில்லை. குறிப்பாக இந்திய அணி பிளேயிங் லெவன் தேர்வு செய்த விதம்தான் தோல்விக்கு காரணம் என்று பலரும் கம்பீரை சாடி வருகின்றனர்.

    • ஒவ்வொரு பேட்ஸ்மேனும் 2-3 மணி நேரம் பேட்டிங் பயிற்சியை செய்தனர்.
    • நாங்கள் உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தி தொடரை வென்றுவிட்டோம்.

    இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு) பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

    இந்நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை முழு நாடும் பார்த்திருக்கும் என இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    27 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் அணியின் ஒரு அங்கமாக இருக்கிறேன். இந்த சிறுவர்களின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள் மற்றும் திறமையானவர்கள், நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை முழு நாடும் பார்த்திருக்கும்.

    இத்தொடருக்கு முன்னதாக நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜூபினை வரவழைத்து, அவருடன் இணைந்து ஏழு நாள் பயிற்சி திட்டத்தை தயார் செய்தோம். மேலும் அவருடன் இணைந்து பணியாற்றிய போது நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். அதில் நீண்ட இன்னிங்ஸை எப்படி விளையாடுவது போன்றவற்றை கற்றுக்கொண்டோம்.

    அதன்படி எங்கள் அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் 2-3 மணி நேரம் பேட்டிங் பயிற்சியை செய்தனர். இது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. இதுபோன்ற போட்டியில் வீரர்களுக்கு நம்பிக்கை மட்டுமே தேவை. அதன்படி போட்டியின் போது சிலர் நன்றாக பேட்டிங் செய்து ரன்களைச் சேர்த்தனர். சில பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தியது என அனைவ்ரும் ஒரு அணியாக செயல்பட்டது வீரர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

    இதன்மூலம் நாள் முடிவில் நாங்கள் உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தி தொடரை வென்றுவிட்டோம். இலங்கை கிரிக்கெட் அணியானது தற்சமயம் புதிய பயிற்சியாளரைத் தேடிவருகிறது. நான் இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் மட்டுமே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் அவர்கள் அணியின் முழுநேர பயிற்சியாளரை தேடிவருகின்றனர். நான் அவர்களுக்கான தற்காலிக பொறுப்பாளராக மட்டுமே இருக்கிறேன்.

    ஆனாலும் நான் இலங்கை கிரிக்கெட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் என்னுடன் இணைந்து பணியாற்றும் உதவியாளர்கள் மற்றும் அணி வீரர்களுக்கு முடிந்த அனைத்தையும் செய்துவரும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். மேலும், இந்த இளைஞர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்து வெற்றிப் பயணத்தை தொடர நல்ல பயிற்சியாளரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    என்று ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். 

    • இலங்கைக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்தது.
    • 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

    இலங்கை- இந்தியா அணிகள் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடின. முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது.

    அதுமட்டுமல்லாமல் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான தொடரை இலங்கை அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி முடிவடைந்த பிறகு இலங்கை அணி வீரர் குசல் மெண்டீஸ்-க்கு இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட தனது டி சர்ட்டை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவார். அவரின் செயல் சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம். அவரை சீண்ட நிறைய பவுலர்கள் யோசிப்பார்கள். ஏனென்றால் அதுவரை பொறுமையாக விளையாடி வருபவர் அதன்பின் ஆக்ரோசமான அதிரடியை காட்டி எதிரணி பந்து வீச்சாளர்களை திணற வைப்பார்.

    களத்தில் ஆக்ரோசமாக செயல்பட்டாலும் சில சமயங்களில் மற்ற வீரருக்கு ஆதரவாகவும் அவர் செயல்படுவார். குறிப்பாக ஸ்மித்-க்கு நவீன் உல் ஹக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு களத்திற்குள்ளேயே ஆதரவாக செயல்பட்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பேட்டிங் மற்றும் அவரது குணத்திற்காககதான் நிறைய வீரர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி செல்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • இலங்கை அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியிலும் கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகியுள்ளார்.
    • இலங்கைக்கு எதிரான தொடரை இந்தியா 0-2 என்ற கணக்கில் இழந்தது.

    இலங்கை - இந்தியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் போட்டி டையானது. 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 138 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார். 3 போட்டிகளிலும் கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகியுள்ளார். மூன்று முறை எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும்.

    நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலியை எளிதாக அவரது விக்கெட்டை இழக்க விடமாட்டார். ஆனால் இந்த 3 போட்டியிலும் ஈசியாக அவரது விக்கெட்டை இலங்கை வீரர்கள் வீழ்த்தி விட்டனர்.


    முதல் இரண்டு போட்டியை விட கடைசி போட்டியில் விராட் கோலியின் பேட்டிற்கும் பந்திற்கும் அதிக இடைவேளி இருந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜாம்பவான் பேட்டரான அவர் பந்தை கணித்து பேட்டை வைத்தாரா இல்லையா என்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    • இந்திய அணிக்காக விளையாடும் போது ஒரு போதும் உங்களால் மனநிறைவு கொள்ள முடியாது.
    • சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

    கொழும்பு:

    இந்திய அணியை விடவும் இலங்கை அணி சிறந்த கிரிக்கெட் விளையாடியதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியால் கவலைப்பட தேவையில்லை என்று கூறிய ரோஹித் சர்மா, ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கான திட்டத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் 27 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

    தோல்வி குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    இந்த தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிரமத்தை சந்தித்தார்கள் என்று தோன்றவில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் தங்களது ஆட்டத்திட்டங்களில் கவனத்தை செலுத்த வேண்டும். இந்தியாவுக்காக விளையாடும்போது எப்போதுமே மன நிறைவு அடையாது. அதிலும் கேப்டனாக அதற்கு வாய்ப்பே இல்லை.

    சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும். எங்களை விட இந்த தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் சூழலுக்கு ஏற்றவாறு காம்பினேஷனை பயன்படுத்தினோம். அதனால் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும், வாய்ப்பு மறுக்கப்படும் இருந்தது. இருந்தாலும் நாங்கள் இன்னும் நிறைய முன்னேற வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.

    இந்த தொடரின் மூலம் சில விசயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வியால் உலகமே முடிந்து விடாது. இதுபோன்ற தோல்விகள் அவ்வப்போது வரும் ஆனால் அதிலிருந்து நாம் எப்படி கம்பேக் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.

    இவ்வாறு ரோகித் கூறினார். 

    • இந்தியாவுக்கு எதிராக இலங்கை தொடரை கைப்பற்றியது.
    • இந்த போட்டியில் ரோகித் சர்மா 6 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

    இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது.

    இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 138 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 35 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களும் எடுத்தனர்.

    இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு சிக்சரை பறக்கவிட்டதன் மூலம் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இரண்டாவது வீரர் எனும் கிறிஸ் கெயில் சாதனையை தற்போது ரோகித் சர்மா சமன்செய்து அசத்தியுள்ளார்.

    இதுவரை 265 ஒருநாள் போட்டிகளில் 257 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 331 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 301 போட்டிகளில், 294 இன்னிங்ஸ்களில் 331 சிக்சர்களை விளாசியுள்ளார். மேலும் இப்பட்டியலில் பாகிஸ்தானின் முன்னாள் விரர் ஷாஹித் அஃப்ரிடி 351 சிக்சர்களுடன் முதல் இடத்த்ல் நீடித்து வருகிறார். 

    • இந்திய அணி 138 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இதனையடுத்து நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெர்னாண்டோ 96 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர். சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கதில் இருந்தே அதிரடியாக விளையாடிய ரோகித் 20 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    விராட் கோலி 20, ரிஷப் பண்ட் 6, ஷ்ரேயாஸ் அய்யர் 8, அக்ஷர் படேல் 2, ரியான் பராக் 15, சிவம் துபே 9 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். குறிப்பாக விராட் கோலி அவுட் என தெரிந்தும் தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்தார். இவரை போன்று ஷ்ரேயாஸ் அய்யர் அவுட் என தெரிந்தும் ரிவ்யூ எடுத்து வெளியேறினர்.

    இவர்களையெல்லாம் தவிர ரியான் பராக் அவுட் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்டெம்புக்கு வருகிற பந்தை பேட்டை தூக்கி வைத்து கொண்டு பந்தை விட்டுவிட்டார். இதனால் பந்து ஸ்டெம்பை தாக்கியது. பேட்டை வைத்து தட்டாமல் ஸ்டெம்புக்கு போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தது என்னடா பேட்டிங் பன்ற என்பது போல இருந்தது.

    இதனால் இந்திய அணி 17.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து வாஷிங்டன் சுந்தர் - குல்தீப் யாதவ் ஜோடி பொறுப்புடன் ஆடினர். அதிரடியாக விளையாடிய சுந்தர் 25 பந்தில் 30 ரன்களுடன் வெளியேறினார்.

    இதனால் இந்திய அணி 26.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களில் அடங்கியது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இதனால் 27 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணிக்கு கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×