search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் சுனாமி ஏற்படும்- இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் அதிரடி
    X

    நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் சுனாமி ஏற்படும்- இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் அதிரடி

    • எனக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனக்கு எதிராக சதி நடக்கிறது.
    • பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சருடன் நான் பேசவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.

    அவர் பதவி விலக கோரி முன்னணி வீராங்கனைகள் வினேஷ் போகத், சரிதா, சாக்ஷி, மாலிக், சங்கீதா, போகத் உள்ளிட்ட பலர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு போராட்டத்தை தொடங்கினார். இவர்களுடன் முன்னணி வீரரான பஜ்ரங் புனியாவும் போராட்டம் நடத்தினார்.

    இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. போராட்டம் நடத்தியவர்களில் இருந்து பஜ்ரங் புனியா, ரவி தகித்யா, சாக்ஷி மாகி, வினேஷ் போகத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூரை நேரில் சந்தித்து பேசினர்.

    அப்போது இந்திய மல்யுத்த சம்மேளனத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து நேற்று இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய வீராங்கனைகள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு கடிதம் அனுப்பினர்.

    அதில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும். இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட வேண்டும், அதன் தலைவர் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த கடிதம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் செயற்குழு ஆலோசனை செய்தது. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்க இந்த கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த குழுவில் மேரிகோம், டோலா பானர்ஜி, அலக் நந்தா அசோக், யோகேஷ் வர்தத், சஹ்தேவ் யாதவ் மற்றும் 2 வக்கீல்கள் இடம் பெற்று உள்ளனர்.

    இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளுடன் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு ஏற்பட்டது. வீராங்கனைகள் கோரிக்கைகளை ஏற்பதாக அவர் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். வீரர், வீராங்கனைகள் மத்தியில் அனுராஜ் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல், நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு 4 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பிக்கும். விசாரணை முடியும் வரை 4 வாரம் அவர் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பரிஜ் பூஷன்சிங் பதவி விலக மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனக்கு எதிராக சதி நடக்கிறது. நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் சுனாமி ஏற்படும். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஆவேன். நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சருடன் நான் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். பிரிஜ் பூசன் சிங் 6 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×