search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரா ஒலிம்பிக்-  கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு
    X

    பாரா ஒலிம்பிக்- கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு

    • 85 நாடுகள் பதக்கப்பட்டியலில் இணைந்தன.
    • பதக்கப்பட்டியலில் இந்தியா 18-வது இடத்தை எட்டிபிடித்தது.

    பாரீஸ்:

    பாரா ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்தது. இந்தியா சிறந்த நிலையாக 29 பதக்கத்துடன் 18-வது இடத்தை பிடித்து சரித்திரம் படைத்தது.

    17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,463 வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    கடைசி நாளான நேற்று வீல்சேர் கூடைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் அமெரிக்கா 73-69 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து தொடர்ந்து 3-வது முறையாக தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தியது. இதன் பெண்கள் பிரிவில் நெதர்லாந்து 63-49 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

    இதே போல் இறுதிப்பந்தயமாக அரங்கேறிய பாரா வலுதூக்குதலில் (107 கிலோ உடல் எடைப்பிரிவு) ஈரான் வீரர் அகமது அமின்ஜேடே மொத்தம் 263 கிலோ எடையை தூக்கி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

    இதைத் தொடர்ந்து இரவில் பாரீசில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சி, நடனம், சாகசங்களுடன் நிறைவு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. வீரர், வீராங்கனை அணிவகுப்பில் இந்திய அணிக்கு வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர். பின்னர் தீபம் அணைக்கப்பட்டு, ஒலிம்பிக் கொடி 2028-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கை நடத்தும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது.


    பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 2004-ம் ஆண்டில் இருந்து முதலிடத்தை பிடித்து வரும் சீனாவை இந்த தடவையும் அரியணையில் இருந்து யாராலும் நகர்த்த முடியவில்லை. 94 தங்கம், 76 வெள்ளி, 50 வெண்கலம் என்று மொத்தம் 220 பதக்கங்களுடன் கம்பீரமாக முதலிடத்தை ஆக்கிரமித்தது. அதிகபட்சமாக பாரா தடகளத்தில் 59 பதக்கங்களையும், நீச்சலில் 54 பதக்கங்களையும் வேட்டையாடியது. இங்கிலாந்து 124 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 105 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பெற்றன. போட்டியை நடத்திய பிரான்சுக்கு 75 பதக்கத்துடன் 8-வது இடம் கிடைத்தது.

    மொத்தம் 85 நாடுகள் பதக்கப்பட்டியலில் இணைந்தன. ஒரே ஒரு வெண்கலம் வென்ற பாகிஸ்தான் 79-வது இடத்தை 6 நாடுகளுடன் பகிர்ந்துள்ளது. அகதிகள் அணியினர் தங்களது பதக்க எணக்கை இந்த ஒலிம்பிக்கில் தொடங்கினர். அவர்கள் இரண்டு வெண்கலம் கைப்பற்றினர்.

    'பறக்கும் மீன்' என்று செல்லமாக அழைக்கப்படும் சீன நீச்சல் வீராங்கனை ஜியாங் யுஹான் 7 தங்கப்பதக்கத்தை கபளீகரம் செய்து கவனத்தை ஈர்த்தார். இதில் 50 மீட்டர் பிரீஸ்டைலில் (எஸ்.6 பிரிவு) 32.59 வினாடிகளில் இலக்கை கடந்து உலக சாதனையோடு தங்கத்தை முகர்ந்ததும் அடங்கும்.

    நடப்பு ஒலிம்பிக்கில் வெற்றிகரமான வீராங்கனையாக வலம் வந்த 19 வயதான ஜியாங் யுஹான் சிறு வயதில் கார் விபத்தில் சிக்கி வலது கை மற்றும் வலது காலை இழந்தவர் ஆவார்.


    இந்த முறை 84 பேர் கொண்ட படையை அனுப்பிய இந்தியா 25 பதக்கங்களுக்கு குறி வைத்தது. ஆனால் கணிப்பையும் மிஞ்சி இந்திய வீரர்கள் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை அறுவடை செய்து பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். இதில் தடகளத்தின் பங்களிப்பு மட்டும் 17 பதக்கங்கள்.

    பதக்கப்பட்டியலில் இந்தியா 18-வது இடத்தை எட்டிபிடித்தது. தரம்பிர் (உருளை தடி எறிதல்), அவனி லேகரா (துப்பாக்கி சுடுதல்), நவ்தீப் சிங், சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), நிதேஷ்குமார் (பேட்மிண்டன்), பிரவீன்குமார் (உயரம் தாண்டுதல்), ஹர்விந்தர் சிங் (வில்வித்தை) ஆகிய இந்தியர்களை தங்கப்பதக்கம் அலங்கரித்தது. தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் ஒலிம்பிக் பாராபேட்மிண்டனில் பதக்கத்தை (வெள்ளி) வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

    பாராஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு இது தான். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு டோக்கியோ பாராஒலிம்பிக்கில் 19 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது.

    இந்தியாவுக்கு ஜாக்பாட்: வெள்ளி தங்கமாக மாறியது

    பாரா ஒலிம்பிக்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (உயரம் குன்றியவர்களுக்கான எப்.41 பிரிவு) ஈரான் வீரர் சடேக் சாயா 47.64 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கமும், இந்திய வீரர் நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும் பெற்றனர்.

    ஆனால் சிறிது நேரத்தில் நடத்தை விதியை மீறியதால் சடேக் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பாரா ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. வெற்றி கொண்டாட்டத்தின் போது சடேக் ஆட்சேபனைக்குரிய கொடியை மீண்டும் மீண்டும் காட்டியதால் தகுதி நீக்கப்பட்டார். அது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கொடியாகும். சடேக் பதக்கத்தை பறிகொடுத்ததால் 2-வது இடத்தை பிடித்த அரியானாவைச் சேர்ந்த நவ்தீப் சிங்குக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அவரது வெள்ளி, தங்கப்பதக்கமாக மாறியது.

    கடைசி நாளான நேற்று இந்தியாவுக்கு பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை. பெண்களுக்கான கனோய் (சிறிய படகு) 200 மீட்டர் பந்தயத்தில் களம் கண்ட இந்திய வீராங்கனை பூஜா ஓஜா அரைஇறுதியோடு நடையை கட்டினார்.

    Next Story
    ×