search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவிடம் 21 ரன்னில் தோல்வி- பேட்ஸ்மேன்கள் மீது ரோகித் சர்மா பாய்ச்சல்
    X

    ஆஸ்திரேலியாவிடம் 21 ரன்னில் தோல்வி- பேட்ஸ்மேன்கள் மீது ரோகித் சர்மா பாய்ச்சல்

    • ஏதாவது ஒரு வீரர் நிலைத்து நின்று இருக்க வேண்டும். ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று இருக்க வேண்டும்.
    • ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீரர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 269 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இந்தியாவுக்கு 270 ரன் இலக்காக இருந்தது.

    மிச்சேல் மார்ஷ் 47 ரன்னும் (8 பவுண்டரி 1 சிக்சர்), அலெக்ஸ் கேரி 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), டிரெவிஸ் ஹெட் 33 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய இந்திய அணியால் 270 ரன் இலக்கை எடுக்க முடியவில்லை. 49.1 ஓவரில் 248 ரன்னில் 'ஆல்அவுட்' ஆகி இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

    விராட் கோலி 54 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), சுப்மன் கில் 37 ரன்னும் (4பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், ஆஸ்டன் அகர் 2 விக்கெட்டும், ஸ்டோனிஸ், அபோட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த தோல்வியால் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தனர்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இந்த தோல்வியால் பேட்ஸ்மேன்களை கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    269 ரன் என்பது அதிகமான ஸ்கோர் இல்லை. 2-வது பாதியில் ஆடுகளம் கொஞ்சம் சவாலாகவே இருந்தது. ஆனால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற பார்ட்னர்ஷிப் முக்கியமானது. அதை செய்ய நாங்கள் தவறிவிட்டோம்.

    இதுபோன்ற ஆடுகளத்தில் தான் நீங்கள் (பேட்ஸ்மேன்கள்) பிறந்து வளர்ந்து இருப்பீர்கள். இந்த பிட்சில் பொறுமையாக ஆடி ரன்களை சேர்க்க வேண்டும். இந்த போட்டியில் தொடக்கம் நன்றாக இருந்தது. ஏதாவது ஒரு வீரர் நிலைத்து நின்று இருக்க வேண்டும். ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

    இது ஒட்டுமொத்த அணியின் தோல்வியாகும். இந்த தொடரில் இருந்து பல விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீரர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார். அவர் இந்த ஆட்டத்தில் 17 பந்துகளில் 30 ரன் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

    வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறும்போது, "இந்த சுற்றுப் பயணம் மகிழ்ச்சியானது. டெல்லி டெஸ்ட் தோல்விக்கு பிறகு நாங்கள் போராடிய விதம் நன்றாக இருந்தது. இந்த ஆட்டத்தில் விக்கெட் சரிந்ததால் 220 ரன்களை எடுக்க மாட்டோம் என்று நினைத்தோம். எங்களது பின் கள வீரர்கள் நன்றாக ஆடி 269 ரன்னுக்கு கொண்டு வந்தனர் என்றார்.

    Next Story
    ×