search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, ரிபாகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவுடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ரிபாகினா 6-4 என வென்றார். இதையடுத்து சுதாரித்துக் கொன சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் ஜோகோவிச், அமெரிக்க வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான ஜோகோவிச், அமெரிக்க வீரரான டாமி பாலுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ரஷிய வீரர் காரென் கச்சனாவுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 7-6, 6-4, என முதல் இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டை 7-6 என கச்சனாவ் கைப்பற்றினார். 4வது செட்டை சிட்சிபாஸ் 6-3 என கைப்பற்றி  இறுதிக்கு முன்னேறினார்.

    • சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    • தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நடந்தது.

    இதில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.


    சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.


    தோல்விக்கு பிறகு சானியா மிர்சா கூறும் போது, எனது டென்னிஸ் வாழ்க்கை மெல்போர்னில் தொடங்கியது. எனது கிராண்ட்சிலாம் வாழ்க்கையை முடிக்க இதை விட ஒரு சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை என்றார்.

    அப்போது சானியா மிர்சா உணர்ச்சி வசத்தில் கண் கலங்கினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதில் சிட்சிபாஸ் (கிரீஸ்)-கரன் கச்சனோவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா)-டாமி பால் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதி போட்டியில் சபலென்கா (பெலாரஸ்)-ரைபகினா (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் ஜோகோவிச், ரூப்லவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான ஜோகோவிச்,ரஷிய வீரரான ஆண்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், அமெரிக்காவின் டாமி பால், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார். இதில் டாமி பால் 7-6, 6-3 என முதல் இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டை 7-5 என ஷெல்டன் கைப்பற்றினார். 4வது செட்டை டாமி பால் 6-4 என கைப்பற்றி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • நடப்பு விம்பிள்டன் சாம்பியனான எலெனா ரைபகினா அரையிறுதியில் அசரென்காவை வென்றார்.
    • சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர்.

    இப்போட்டியில் 7-6 (4), 6-3 என்ற செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ரைபகினா.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், எலெனா ரைபகினா, 5ம் தரநிலை வீராங்கனையான அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

    • 3-வது தரவரிசையில் உள்ள நீல் ஸ்குப்ஸ்கி-டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
    • போட்டிக்கு முன்னதாக இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று சானியா அறிவித்திருந்தார்.

    ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதியில் 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள கிரேட் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சானியா இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மக்டா லினெட் (போலந்து) 6-3, 7-5 என்ற கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
    • ஷபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள அர்யனா ஷபலென்கா (பெலாரஸ்)-டோனா வெகிச் (குரோஷியா) மோதினார்கள்.

    இதில் ஷபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 49 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    24 வயதான ஷபலென்கா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு 4-வது சுற்று வரை தகுதி பெற்று இருந்தார். ஒட்டு மொத்த கிராண்ட்சிலாம் போட்டிகளில் 4-வது முறையாக அரை இறுதியில் விளையாடுகிறார். விம்பிள்டனில் 2021 ஆண்டும், அமெரிக்க ஓபனில் 2021, 2022-ம் ஆண்டும் அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்று இருந்தார்.

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 30-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் 7-வது முறையாக கிராண்ட்சிலாம் கால் இறுதியில் தோற்றுள்ளார்.

    45-வது வரிசையில் இருக்கும் மக்டா லினெட் (போலந்து) 6-3, 7-5 என்ற கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் அரை இறுதியில் ஷபலென்காவை சந்திக்கிறார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • காலிறுதியில் ஆடவிருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், காலிறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.

    • மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
    • இதில் லாத்வியா வீராங்கனையை வீழ்த்தி ரிபாகினா அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, லாத்வியாவின் ஜெலேனா ஒஸ்டாபென்கோவுடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒஸ்டாபென்கோவை வீழ்த்தி எலினா ரிபாகினா அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா, அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார். இதில் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அசரன்கா வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இன்று காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் சிட்சிபாஸ், ஜிரி லெஹெகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டி ஒன்றில் கிரீஸ் வீரரான சிட்சிபாஸ், செக் குடியரசு வீரரான ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ரஷியாவின் காரென் கச்சனாவ், அமெரிக்காவின் செபாஸ்டிகோர்டாவுடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6, 6-3 என இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டில் 3-0 என முன்னிலை பெற்றபோது காயம் காரணமாக கோர்டா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து கச்சனாவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் செர்பிய வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ரஷியாவின் ஆண்டி ரூப்லெவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் ரூப்லெவ் 6-3, 3-6, 6-3, 4 - 6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
    • சானியா மற்றும் போபண்ணா ஜோடி காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியை எதிர் கொள்கிறது.

    ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் ஜப்பானின் மகோடோ நினோமியா ஜோடியை வீழ்த்தியது.

    சானியா மற்றும் போபண்ணா ஜோடி நாளை நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியான ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

    ×