search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை சாலை விபத்தில் 10 ஆயிரத்து 536 பேர்கள் உயிரிழப்பு
    X

    தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை சாலை விபத்தில் 10 ஆயிரத்து 536 பேர்கள் உயிரிழப்பு

    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவில் 10 ஆயிரத்து 589 உயிரிழப்பு சாலை விபத்துகள் நடந்தன.
    • குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 777 பேர் வழக்கில் சிக்கி உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை சாலை விபத்தில் 10 ஆயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் உயிரிழப்புகளை ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் வரை தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 66 உயிரிழப்பு விபத்துகள் நடந்தன. அந்த விபத்துகள் மூலம் 10 ஆயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவில் 10 ஆயிரத்து 589 உயிரிழப்பு சாலை விபத்துகள் நடந்தன. அதன் மூலம், 11 ஆயிரத்து 106 பேர் உயிரை விட்டனர். கடந்தாண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்பு சாலை விபத்துகள் 5 சதவீதம் குறைவாகும். அதாவது 523 உயிரிழப்பு விபத்துகள் குறைந்துள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 570 உயிரிழப்புகள் குறைந்துள்ளது. 570 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    இதேபோல, இந்தாண்டு ஜூலை மாதம் வரை வேகமாக வாகனங்களை ஓட்டி சென்றதாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போன்களில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டி சென்றதாக இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 624 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 777 பேர் வழக்கில் சிக்கி உள்ளனர்.

    அதிக பொருட்களை ஏற்றி சென்றதாக 6 ஆயிரத்து 944 வழக்குகளும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி சென்றதாக 74 ஆயிரத்து 13 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இதேபோல், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவர்கள் மீதும், பின்னால் உட்கார்ந்து சென்றவர்கள் மீதும் மொத்தம் 35 லட்சத்து 78 ஆயிரத்து 760 வழக்குகள் பதிவாகி உள்ளது. காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக 3 லட்சத்து 39 ஆயிரத்து 434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு இதுவரை மோட்டார் வாகன சட்டத்தை மீறி வாகனங்களை ஓட்டியதற்காக 76.15 லட்சம் வழக்குகள் போடப்பட்டுள்ளது.

    விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி சென்றதற்காக ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 375 பேர்களின் டிரைவிங் லைசென்ஸ்சை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகளை ஏற்று, 39 ஆயிரத்து 924 பேர்களின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×