search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலையில் 13 லட்சம் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்
    X

    ஆடி மாத பவுர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற காட்சி.

    திருவண்ணாமலையில் 13 லட்சம் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது.

    வேங்கிக்கால்:

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி தலமாக விளங்கி வருகிறது.

    இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி ஆடி மாத பவுர்ணமி நேற்று அதிகாலை 3.20 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 1 மணிக்கு நிறைவடைந்தது.

    நேற்று முன்தினம் இரவு முதல் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதை அமைந்து உள்ள 14 கிலோமீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதிகாலை தொடங்கி இரவு 11 மணி வரை இடைவேளை இல்லாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    சுமார் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று தரிசனம் முடிந்ததும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனர்.

    தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    கடந்த சில மாதங்களாக கிரிவல பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பவுர்ணமியிலும் அதிகபட்சமாக 10 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

    பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. பவுர்ணமி கிரிவலத்திற்கு கூடுதல் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்களின் தேவை அதிகரித்திருக்கிறது.

    பக்தர்கள் சொந்த ஊர் செல்ல திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ரெயில்களில் இடம் கிடைக்காமல் தவித்தனர். பவுர்ணமி நாட்களில் சென்னை, விழுப்புரத்திற்கு சிறப்பு ரெயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும்.

    அதோடு, போக்குவரத்து மாற்றம், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

    Next Story
    ×