search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மக்களே உஷார்... வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் 2 புயல்கள்
    X

    மக்களே உஷார்... வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் 2 புயல்கள்

    • பல்வேறு தகவல்கள் முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில் கிடைத்துள்ளது.
    • தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பையொட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.

    அந்த வகையில் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மேற்கு மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?, இந்த காலகட்டத்தில் மழைப்பொழிவு எந்த அளவு இருக்கும்? வானிலை சார்ந்த வலுவான நிகழ்வுகள் (தாழ்வு மண்டலம், புயல்கள்) எப்படி இருக்கும்? என்பது உள்ளிட்ட தகவல்கள் முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில் கிடைத்துள்ளது.

    அவ்வாறு முன்கூட்டி கணிக்கப்பட்ட தகவல்களை, தனியார் வானிலை ஆய்வாளர் (டெல்டா வெதர்மேன்) ஹேமச்சந்தர், அரசுக்கும் சமர்ப்பித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதாவிடம் இதுபற்றி விளக்கமாக அவர் தெரிவித்திருக்கிறார். அவரும் இந்த மாதம் இறுதிக்குள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி பேசுவோம் என கூறியுள்ளார்.

    தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் சமர்ப்பித்துள்ள முன்கூட்டி கணிக்கப்பட்ட வானிலையில், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ந்தேதி முதல் 27-ந்தேதிக்குள், அதாவது 25-ந்தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டுகளை போல கிழக்கு காற்று போன்றவற்றினால் கிடைத்த மழைப்பொழிவு போல இந்த ஆண்டு இல்லாமல், தாழ்வு மண்டலங்கள், புயல்கள் ஆகியவற்றால் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    வட கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா பகுதிகளில் குறுகிய காலத்தில் அதிக மழை இருக்கக் கூடும், இந்த இடங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும். வடகிழக்கு பருவமழை காலத்தில் 2 புயல்கள் உருவாகக்கூடும். இந்த புயல்கள் நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதி வரையிலான ஒரு மாத கால இடைவெளிக்குள் ஏற்படும்.

    வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் இயல்பைவிட குறைவாகவும், வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை இருக்கும். மொத்தத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பையொட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவல் தனியார் வானிலை ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த மாதம் இறுதிக்குள் முன்கூட்டி கணிக்கப்பட்ட தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×