search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூடப்பட்ட 1300 மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது - ராமதாஸ்
    X

    மூடப்பட்ட 1300 மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது - ராமதாஸ்

    மூடப்பட்ட 1300 மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Tasmac #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் சட்ட விரோதமாக திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகளை மூடி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதன்மூலம் மூடப்பட்ட மதுக்கடைகளை தமிழக அரசு உடனடியாக திறக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பா.ம.க.வின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும்.

    சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை மறைத்து விட்டு, தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் 1700 மதுக்கடைகளை திறப்பதற்கான சுற்றறிக்கையை கடந்த 1.9.2017 அன்று மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் பிறப்பித்தார்.

    இது எந்தவகையிலும் ஏற்க முடியாத ஒன்று என்பதால் தான் அதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

    உச்சநீதிமன்றம் வகுத்துள்ள புதிய விதிகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு திட்டம் வகுத்தாலும் கூட அதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? என்பது ஐயம் தான். தமிழகத்தில் சாலைகளை வகை மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அந்தத் தடை நீக்கப்படாத வரை புதிய மதுக்கடைகளை திறக்க முடியாது. இவை ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டுமா? என்பது தான் இப்போது எழுந்துள்ள கோரிக்கை ஆகும். இந்த வி‌ஷயத்தில் மக்களின் மனநிலையை உணர்ந்து தான் தமிழக அரசு செயல்பட வேண்டுமே தவிர, பணத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது.

    தமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகப்பெரிய தடையாகவும், அச்சுறுத்தலாகவும் மது உருவெடுத்திருக்கிறது. ஆனால், மதுவின் தீமைகளை தொலைநோக்கில் பார்க்காமல் அதனால் கிடைக்கும் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு குறுகிய நோக்கத்துடன் தமிழக பினாமி அரசு செயல்பட்டு வருகிறது.

    மது அருந்துவதால் 200-க்கும் கூடுதலான நோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மது குடிப்பதால் இந்தியாவில் 20 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 2 லட்சம் பேரும் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். அதுமட்டுமின்றி, மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10 சதவீதம் மதுப்பழக்கத்தால் குறைகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மூடப்பட்ட மதுக் கடைகளை தமிழக அரசு திறந்தால் அது விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதற்கு சமமான தாகும்.

    எனவே, தமிழ்நாட்டில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இதுதொடர்பாக எந்த ஆய்வும் நடத்தி உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கை தாக்கல் செய்யக்கூடாது. மாறாக, இப்போது இருக்கும் மதுக்கடைகளை படிப்படியாக மூடி, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tasmac #Ramadoss

    Next Story
    ×