search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்தாரம்புதூர் பகுதியில் மழையினால் மின்கம்பம் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    மந்தாரம்புதூர் பகுதியில் மழையினால் மின்கம்பம் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக மழை நீடிப்பு

    குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் புயல் உருவாகி உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் அடித்தது. நேற்றிரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    குளச்சல் பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளச்சலில் அதிகபட்சமாக7 செ.மீ. மழை பதிவானது.

    கொட்டாரம், குருந்தன் கோடு, கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை, புத்தன்அணை, பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு இடி-மின்னலுடன் மழை பெய்தது. கொட்டாரம் அருகே மந்தாரம்புதூர் பகுதியில் மின்கம்பம் ஒன்று சரிந்தது.

    இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சாமித்தோப்பு, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சுசீந்திரம் உள்பட கிராமங்களில் பகுதியிலும் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டிருந்தது.

    திற்பரப்பு அருவி பகுதியிலும் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோதையாறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பாசன குளங்கள் நிரம்ப தொடங்கி உள்ளன.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 4.90 அடியாக இருந்தது. அணைக்கு 550 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 474 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது. அணைக்கு 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-16, பெருஞ்சாணி-9, சிற்றாறு-1-28, சிற்றாறு-2-12, இரணியல்- 14.6, குளச்சல்-70, குருந்தன் கோடு-14.6, கோழிப்போர் விளை-10, முள்ளாங்கினாவிளை-12, புத்தன் அணை- 14.8, நாகர்கோவில்- 3.8, பூதப்பாண்டி-1.2, கொட்டாரம்-52.4.



    Next Story
    ×