search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி - குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி - குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி பகுதிகளில் போராட்டங்கள் நடந்தது.

    நாகர்கோவிலில் இருந்து இடிந்தகரை வழியாக சென்ற அரசு பஸ்சை அந்த பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பஸ்சின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. இருக்கைகளும் கிழிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் பஸ்சில் இருந்து தப்பித்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். பொதுமக்கள் சிறை பிடித்து வைத்துள்ள பஸ்சை இதுவரை மீட்க முடியவில்லை.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இடிந்தகரை, கூடங்குளம், உவரி வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. சுமார் 50 மேற்பட்ட பஸ்கள் உவரி, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். ஆனால் இன்று அந்த பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க விடிய, விடிய ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி, களியக்காவிளை சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர காவல்படை போலீசார் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்தனர்.

    Next Story
    ×