search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
    X

    தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை விமான நிலையத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.
    கோவை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சனை. பொது மக்களின் உயிர் சம்பந்தப்பட்டது. சுற்றுப்புறசூழல், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சனை. எனவே ஆலையை மூட காலம் தாழ்த்தாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 1 வாரமாக அந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துப்பாக்கிச்சூடு சம்பவம் காவல்துறை தோல்வியை காட்டுகிறது. 99 நாட்கள் பொதுமக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். 100-வது நாள் போராட்டத்துக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என கணிக்கத்தவறியது உளவுத்துறையின் தோல்வி.

    தூத்துக்குடி மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாத அரசாக இந்த அரசு இருக்கிறது.

    பொது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அரசுகள் இனி ஆட்சிக்கு வர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தேவையான விழிப்புணர்வு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க அவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். மாநில அரசு வாட் வரியை குறைக்க வேண்டும்.

    நிபா காய்ச்சல் கேரளாவில் பரவி வருகிறது. எனவே எல்லையோரங்களான கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்.

    அவினாசி உயர்மட்ட மேம்பாலத்தை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில துணை தலைவர் கோவை தங்கம், மாவட்ட தலைவர்கள் வி.வி.வாசன், கே.என். ஜவஹர், அன்னூர் ராமலிங்கம், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், துணை தலைவர் அருண் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Tamilnews
    Next Story
    ×