search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 நாட்களாக தொடர்ந்து அதிகரிப்பு- பெட்ரோல் விலை ரூ.81.26 ஆக உயர்வு
    X

    15 நாட்களாக தொடர்ந்து அதிகரிப்பு- பெட்ரோல் விலை ரூ.81.26 ஆக உயர்வு

    பெட்ரோல் லிட்டர் ரூ.81.26 ஆகவும், டீசல் ரூ.73.81 ஆகவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல்- டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விட்டது. சர்வதேச சந்தையின் விலைக்கேற்ப தினமும் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. ஒரு வருடமாக தொடர்ந்து அதிகரித்து வந்த இவற்றின் விலை 20 நாட்கள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    கடந்த 13-ந்தேதி முதல் மீண்டும் விலை உயரத் தொடங்கியது. 15 நாட்களாக தினமும் 20 காசு, 30 காசு என அதிகரித்தது. ஏறக்குறைய பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் சிறிது சிறிதாக கூடி பெட்ரோல் லிட்டர் ரூ.80-ம் டீசல் ரூ.72-ம் தாண்டியது. இன்று அவற்றின் விலை மேலும் உயர்ந்தது.

    பெட்ரோல் லிட்டர் ரூ.81.26 ஆகவும், டீசல் ரூ.73.81 ஆகவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. உணவு பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றின் விலை போக்குவரத்து செலவு அதிகரிப்பால் தொடர்ந்து உயருகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு ‘குருடாயில்’ விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து வருவதுதான் முக்கிய காரணமாகும். மற்ற நாடுகளை விடவும் நம் நாட்டில் பெட்ரோல்- டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு அவற்றின் மீது மத்திய- மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் முக்கிய காரணம். குருடாயிலில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றி நிர்ணயிக்கப்படும் விலையை விட மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி அதிகமாகும்.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்க தலைவர் கே.பி. முரளி கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு முன் வரவேண்டும். மாநிலம் விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய அரசின் சுங்கவரி போன்றவை சதவிகித அடிப்படையில் நிர்ணயித்துள்ளது. ஒரு லிட்டருக்கு பெட்ரோல், டீசல் விலை விகிதாச்சார முறையில் வரியை நிர்ணயித்து வசூலிப்பதால் குருடாயில் விலை உயரும் போது வசூலிக்கும் வரியும் அதிகரிக்கிறது. அந்த அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்காமல் ஒரு லிட்டருக்கு வாட் வரி, சுங்க வரி என நிர்ணயம் செய்தால் மக்களை பாதிக்காது. சதவிகித அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதே விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாகும்.

    சர்வதேச சந்தையில் குருடாயில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் லிட்டருக்கு இவ்வளவு வரி என்று விதித்தால் இந்த அளவிற்கு உயர வாய்ப்பு இல்லை. குருடாயில் விலை உயரும் போது அரசு வாட், சுங்க வரியை குறைத்து விலை உயர்வை தவிர்க்கலாம். விலை குறையும் போது வரியை அதிகரித்து சரி செய்து கொள்ள முடியும்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் குள் பெட்ரோல் - டீசல் கொண்டு வந்தால் நாடு முழுவதும் ஒரே விலையில் விற்க முடியும். பெட்ரோல்- டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு இன்னும் அதுபற்றி தெளிவாக எதையும் கூற வில்லை. பெட்ரோல்- டீசல் மீது 50 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் இந்த வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் வளர்ச்சி பணிகளை மேற்கொள்கிறது. எனவே எண்ணை விலையை வரம்புக்குள் வைத்துக் கொண்டால் பொது மக்களிடம் இருந்து எதிர்ப்பு வராது. மக்களும் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Petrol #Diesel
    Next Story
    ×