search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று கனமழை பெய்ததால் வறண்டு கிடந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து இன்று 27.40 அடியாக உள்ளது.
    நெல்லை:

    தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இது போலவே இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று கனமழை கொட்டியது. இன்றும் தொடர்ந்து மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை வரை அடவி நயினார் அணை பகுதியில் 65 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் குண்டாறு, சேர்வ லாறு, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு அணைப் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    நகர் பகுதிகளில் செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி பகுதியில் நன்றாக மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசாக சாரல் அடித்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் வெப்பம் முற்றிலும் தணிந்து நல்ல இதமான சூழ்நிலை நிலவுகிறது.

    பலத்த மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1376 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து மொத்தம் 459 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் வறண்டு கிடந்த பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலை 19 அடியாக வெறும் சகதி மட்டுமே இருந்த நிலையில் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து இன்று 27.40 அடியாக உள்ளது.

    இதுபோல சேர்வலாறு அணையில் சகதி மட்டும் 19.68 அடிக்கு இருந்தது. அங்கு வினாடிக்கு 876 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டமும் 8 அடி உயர்ந்தது. இன்று காலை சேர்வலாறு அணை நீர்மட்டம் 27.49 அடியாக உயர்ந்துள்ளது.

    மணிமுத்தாறு அணை பகுதியில் இன்று காலை வரை 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 508 கன அடி தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று வரை வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டது.

    ஆனால் இன்று பாபநாசம் அணையில் இருந்து 459 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. இதனால் இன்று மணிமுத்தாறு அணையில் இருந்து எந்த தண்ணீரும் வெளியேற்றப்படவில்லை. அணையின் நீர்மட்டம் இன்று காலை 71.40 அடியாக உள்ளது.

    செங்கோட்டை, அடவி நயினார் அணை பகுதியில் பலத்த மழை காரணமாக அணைக்கு கூடுதல் தண்ணீர் வருகிறது. இதனால் நேற்று 55.50 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 61 அடியாக உள்ளது.

    இதுபோல ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 51 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 44.95 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 9 அடியாகவும் உள்ளது. மற்ற அணைகளான கடனாநதி அணை 50.60 அடி, குண்டாறு 17.13 அடி, வடக்கு பச்சையாறு 5 அடி, நம்பியாறு அணை 11.84 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார் - 65
    பாபநாசம்     - 61
    குண்டாறு    - 20
    சேர்வலாறு - 17
    செங்கோட்டை - 17
    ராமநதி - 15
    கொடுமுடியாறு - 15
    கருப்பாநதி - 14
    தென்காசி    - 10
    ஆய்க்குடி - 8
    மணிமுத்தாறு - 3
    Next Story
    ×