search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சட்டசபை மூலம் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ராமதாஸ்
    X

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சட்டசபை மூலம் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ராமதாஸ்

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சட்டசபை மூலம் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Cauveryissue #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் மத்திய நீர்வளத்துறைக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை அதன் செயலாளர் அளித்த பொறுப்பான பதிலிலிருந்து உணர முடிகிறது. ‘அத்திப் பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை’ என்பதைப் போல காவிரி விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நிலைப்பாடு, நடவடிக்கை ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து பார்த்தால் அவை அனைத்தும் தமிழக நலன்களுக்கு எதிராக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டதற்கு காரணங்கள் உள்ளன. இன்றைய நிலையில் பார்த்தால் காவிரியின் குறுக்கே உள்ள 4 கர்நாடக அணைகளில் மொத்தம் 9.52 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    மேட்டூர் அணையிலும் கிட்டத்தட்ட அதே அளவு தண்ணீர் மட்டும் தான் உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில், கேரளத்திலும், கர்நாடகத்திலும் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின்பயனாக கர்நாடக அணைகள் நிரம்பத் தொடங்கும்.


    காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக நடைமுறைக்கு வராவிட்டால், ஒட்டுமொத்த நீரையும் தமிழகத்திற்கு வழங்காமல் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டால், அதனால் அணை நீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்றாலும் கூட, குறைந்தபட்சம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவாவது பிறப்பிக்க முடியும்.

    ஆனால், அத்தகைய நன்மை கூட தமிழகத்திற்கு நிகழ்ந்து விடக்கூடாது என் பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் பொதுப்பணித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் குறித்து இன்று வரை வாய் திறக்க வில்லை என்பது தான். காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகங்களுக்கு மாநில அரசு துணை போவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    எனவே, இந்த வி‌ஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசிதழில் இந்த வாரத்திலேயே வெளியிடவும், அடுத்த வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்குத் தேவையான அழுத்தங்களை மத்திய அரசுக்கு சட்டப்பேரவை மூலமும், நேரிலும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Cauveryissue #Ramadoss

    Next Story
    ×