search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 பேர் உடலை மறுபரிசோதனை செய்ய ஜிப்மர் மருத்துவ குழு இன்று வருகை
    X

    7 பேர் உடலை மறுபரிசோதனை செய்ய ஜிப்மர் மருத்துவ குழு இன்று வருகை

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேர் உடலை மறுபரிசோதனை செய்ய ஜிப்மர் மருத்துவ குழு இன்று தூத்துக்குடி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 பேர் பலியானார்கள். அவர்களில் 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்ப‌ட்டது. கோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. இதில் 6 பேர் உடல் இன்னமும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்னின்று நடத்தி வந்தவர்களை போலீசார் குறிவைத்து சுட்டு கொலை செய்துள்ளனர். சுட்டு கொல்லப்பட்டவர்களின் உடலை பொதுமக்கள் தரப்பிலான தனியார் மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் எஸ்.ஜிம்ராஜ் மில்டன், டி.பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்றிரவு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘‘துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரது உடல்களை தடயவியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், திருவனந்தபுரம் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

    அதன்பிறகு அந்த உடல்களை அவர்களின் உறவினர்கள் கேட்கும் பட்சத்தில் ஒப்படைக்கலாம். பிரேத பரிசோதனையின் போது குண்டடிபட்ட இடங்களை கண்டிப்பாக புகைப்படம், வீடியோ மற்றும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர். மேலும், 6 பேரது உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு தங்களது தரப்பு மருத்துவர் ஒருவரையும் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு மீண்டும் கோரிக்கை விடுத்தார்.

    இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் உரிய அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை 6 பேரது உடல்களை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என கோரிக்கை விடுத்தார். அதையேற்ற நீதிபதிகள் 6 பேரது உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஒரு வாரம் இடைக்காலத் தடை விதித்தனர்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 7 பேர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், திருவனந்தபுரம் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று தூத்துக்குடிக்கு வருகிறார்கள். தொடர்ந்து எய்ம்ஸ் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினரும் தூத்துக்குடி வருகின்றனர். இதன்பின்னர் இன்று அல்லது நாளை 7 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாநகர போலீசார் மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகம் செய்துவருகிறது.
    Next Story
    ×