search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜராஜ சோழன் - லோகமாதேவி சிலைகள்.
    X
    ராஜராஜ சோழன் - லோகமாதேவி சிலைகள்.

    மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை தஞ்சைக்கு இன்று வருகை

    மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று கொண்டு வரப்படுவதையடுத்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு திருட்டு போன ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்படி தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை போலீசார் சிலைகளை மீட்டுள்ளனர். ரூ.150 கோடி மதிப்பிலான இந்த 2 சிலைகளும் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

    இந்தநிலையில் இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    50 வருடங்களுக்கு முன்பு திருட்டு போன ராஜ ராஜ சோழன் சிலை, அவரது பட்டத்தரசி லோகமாதேவி சிலை தஞ்சை பெரிய கோவிலில் இருந்ததா? என்பது கூட பல பேருக்கு தெரியாது. இந்த திருட்டு சம்பவம் அவ்வாறு மூடி மறைக்கப்பட்டு இருந்தது. சிலைகள் திருட்டு போனது தெரிய வந்ததால் தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக செயல்பட்டு தற்போது சிலைகளை மீட்டுள்ளனர்.

    இன்று ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்திற்கு காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    ராஜராஜ சோழன் சிலை மற்றும் லோகமாதேவி சிலைகளை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் பார்க்க ஆவலாக உள்ளனர். மேலும் மீட்ட சிலைகள் பெரிய கோவிலில் வைக்கப்படுவதால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சிலைகள் எப்பொழுதும் பார்க்கும் வகையில் பாதுகாப்பான இடத்தில் வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பால சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சிலை மீட்பு நிச்சயமாக வரலாற்று சாதனை தான். பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை மீட்பு குழுவினர் திறமையாக செயல்பட்டு சாதித்து காட்டியுள்ளனர். அவர்களின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம். இதுபோல் பல கோவில் சிலைகள் காணாமல் போய் உள்ளன. இந்த சிலைகளையும் இந்த அரசு மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே கூறியதாவது:-

    தஞ்சையில் உலக புகழ் பெற்ற பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சிலை அவருடைய பட்டத்தரசி லோகமாதேவி சிலை ஆகியவை மீட்கப்பட்டு இருப்பதால் தஞ்சை பகுதி மக்கள் மட்டுமின்றி உலகமே மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சிலைகளை மீட்க பல கால கட்டங்களில் பலர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனாலும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர் சிறப்பான முயற்சி எடுத்து சிலைகளை மீட்டுள்ளனர். அவர்களின் இந்த செயல் நிச்சயம் தஞ்சை வரலாற்றில் இடம்பெறும்.

    தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியதாவது:-

    மாமன்னன் ராஜ ராஜ சோழன் சிலை மீண்டும் தஞ்சைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இழந்த தமிழர்களின் பெருமையை மீட்டுள்ளனர். ராஜராஜ சோழன் சிலை பெரிய கோவில் வளாகத்தில் மக்கள் பார்வைக்காக பாதுகாப்பாக வைக்க வேண்டும். பழமையை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுள்ள இந்திய தொல்பொருள் துறையினர் ஏற்கனவே பெரிய கோவிலில் எந்த இடத்தில் சிலை இருந்ததோ அந்த இடத்தில் மீண்டும் சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிற்ப கலை, கட்டடக் கலையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ராஜ ராஜ சோழன். தஞ்சை பெரிய கோவிலில் இருந்து அவருடைய ஒரிஜினல் சிலை காணாமல் போய்விட்டது. அவருடைய போலி சிலையை தான் இதுவரை நாம் வழிபட்டு வந்தோம்.

    இந்நிலையில் கொள்ளை போன ராஜராஜ சோழன் சிலையை, மீட்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வர முயற்சி செய்த முன்னாள் எம்.பி சுவாமி நாதன், நீதிபதி மகாதேவன் மற்றும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×