search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்பத்துடன் மாயமான சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி எங்கே?- தனிப்படை போலீசார் மைசூர் விரைந்தனர்
    X

    குடும்பத்துடன் மாயமான சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி எங்கே?- தனிப்படை போலீசார் மைசூர் விரைந்தனர்

    தற்கொலை செய்யப்போவதாக வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு குடும்பத்துடன் மாயமான சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர்.நகரை சேர்ந்த மோகன். இவர் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரங்கநாயகி(வயது 56). இவர் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி கமி‌ஷனராகவும், கமி‌ஷனருக்கு உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    மோகன்-ரங்கநாயகி தம்பதிக்கு சசிதரன்(28) என்ற மகன் உள்ளார். சசிதரனின் மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு வயதில் மகள் உள்ளார். சசிதரன் தனது குடும்பத்துடன் ஓசூரில் தங்கி, அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிதரன் தனது மனைவி, குழந்தையுடன் சேலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது பிரேமாவுக்கும், சசிதரன் மற்றும் அவரது தாயார் ரங்கநாயகிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரேமாவின் பெற்றோர் ரங்கநாயகியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த ரங்கநாயகி தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து சங்ககிரியில் உள்ள ரங்கநாயகியின் தங்கை விஜயசெல்வியின் செல்போனுக்கு ‘வாட்ஸ் அப்’பில் ஒரு தகவல் அனுப்பி உள்ளனர். அதில் பேசிய சசிதரன், என்னையும், பெற்றோரையும் எனது மனைவி டார்ச்சர் செய்து வருகிறார். இதனால் நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்ய உள்ளோம். எங்களை டார்ச்சர் செய்து வரும் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    இந்த மெசேஜை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ரங்கநாயகி வீட்டுக்கு விரைந்து வந்தார். அங்கு ரங்கநாயகி உள்பட 3 பேரும் காணவில்லை. மாறாக அவர் எழுதியிருந்த ஒரு கடிதம் இருந்தது. அதில், நான் எனது மகன், கணவருடன் தற்கொலை செய்ய போகிறோம் என எழுதி வைத்திருந்தார்.

    இது குறித்து விஜயசெல்வி அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    உதவி கமி‌ஷனர் ரங்கநாயகி மற்றும் அவரது கணவர், மகன் ஆகிய 3 பேரும் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மைசூருக்கு விரைந்துள்ளனர்.

    இதற்கிடையே உதவி கமி‌ஷனர் ரங்கநாயகி குடும்பத்துடன் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருப்பதாக மற்றொரு தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ஒகேனக்கல்லுக்கும் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சசிதரனின் மனைவி பிரேமா மற்றும் அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×