search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் அருகே மினிலாரி கவிழ்ந்து 2 பெண்கள் பலி- 20 பேர் படுகாயம்
    X

    சிதம்பரம் அருகே மினிலாரி கவிழ்ந்து 2 பெண்கள் பலி- 20 பேர் படுகாயம்

    சிதம்பரம் அருகே இன்று காலை மினிலாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்திரன்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர்கள் காசியம்மாள் (வயது 54) மற்றும் அமுதா (53). இவர்கள் கூலி வேலை செய்து வந்தனர்.

    இன்று காலை அகரநல்லூர் கிராமத்தில் வயலில் வேலை செய்ய காசியம்மாள், அமுதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெண்கள் ஒரு மினிலாரியில் புறப்பட்டனர். மினிலாரியை வல்லம் பகுதியை சேர்ந்த ரெங்கபாட்ஷா ஓட்டி சென்றார். இந்த மினிலாரி சிதம்பரம் புறவழிச்சாலையில் கூத்தங்கோவில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மினிலாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மினிலாரியின் இடிபாடுக்குள் சிக்கி காசியம்மாள் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அமுதா, அலமேலு, குமுதவள்ளி, வசந்தா உள்பட 21 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அமுதா இறந்தார். காயம் அடைந்த 20 பெண்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ரெங்கபாட்ஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிதம்பரம் புறவழிச்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் சேத்திரன்கிள்ளை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #Tamilnews
    Next Story
    ×