search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் ரெயில் முன் பாய்ந்து ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை
    X

    திருப்பூரில் ரெயில் முன் பாய்ந்து ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை

    திருப்பூரில், கடன் தொல்லை காரணமாக ரெயில் முன் பாய்ந்து ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர்–வஞ்சிபாளையம் ரெயில் நிலைய தண்டவாளப்பகுதியில் நேற்று காலை முகம் மற்றும் உடல் சிதைந்த நிலையில் ஒரு வாலிபரின் உடல் கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், அவர் அருகில் கிடந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் இருந்த சிம்கார்டை பயன்படுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த மோகன் என்பது தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கிடைத்த விவரம் வருமாறு:–

    தேனி மாவட்டம் போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் மோகன்(வயது 29). ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்த இவர் கடந்த 2013–ம் ஆண்டு முதல் திருப்பூர் பூலுவப்பட்டி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்து திருப்பூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கு அதிக அளவு கடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை உடனடியாக திரும்ப கொடுக்கும்படி மோகனிடம் வற்புறுத்தியுள்ளனர். இதனால் இவர் சில நாட்களாகவே மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து மோகனை அவருடைய அறையில் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த வீட்டின் உரிமையாளர், மோகனின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அறையில் யாரையும் காணவில்லை. மோகன் வேறு எங்காவது சென்றிருக்கலாம் என்று நினைத்த வீட்டின் உரிமையாளர், அவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    வழக்கமாக செல்ல வேண்டிய கவாத்து பயிற்சிக்கும் மோகன் செல்லவில்லை. இதனால் போலீஸ் அதிகாரிகளும் மோகனை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த மோகன் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், மோகன் கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட மோகனுக்கு, ரமா என்ற மனைவியும் 6 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனர். கடன் தொல்லையால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×