search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

    நேற்று 38.16 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 38.38 அடியாக இருந்தது.
    சேலம்:

    தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த மாதம் 29-ந் தேதி 5,600 கன அடியாக அதிகரித்தது. பின்னர் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து நேற்று 1,750 கன அடியானது.

    இந்தநிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் பரவலாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இன்று காலை 1,866 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 38.16 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 38.38 அடியாக இருந்தது. தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒகேனக்கலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் உடலில் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்துடன் ஆனந்தமாக படகு சவாரியும் சென்றனர்.

    Next Story
    ×