search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக, கர்நாடக விவசாயிகள் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து ‘ஆப்பு’ வைக்க முடியாது- கமல்
    X

    தமிழக, கர்நாடக விவசாயிகள் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து ‘ஆப்பு’ வைக்க முடியாது- கமல்

    தமிழக விவசாயிகளும், கர்நாடக விவசாயிகளும் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து ஆப்பு வைப்பதற்கு இடம் இருக்காது என்று நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாக தெரிவித்தார். #KamalHassan
    சென்னை:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி, இந்திய விவசாய கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆர்.வி.கிரி உள்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்தில் நேற்று சந்தித்தனர்.

    அப்போது காவிரி விவகாரத்துக்காக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசியதற்கு அனைவரும் நன்றி தெரிவித்து வீரவாள், ஏர் கலப்பை, மரக்கன்று ஆகியவற்றை பரிசாக வழங்கினார்கள்.

    விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வழங்கிய வாள், இனி அறுவடைக்கு பயன்படும் என்றும், சமாதானம் தான் என் எண்ணம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    அதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்காக மேளம் தட்டி மழை பொழிகிறது. இந்த மழை எனக்கு புதிது அல்ல. கர்நாடக முதல்-மந்திரியை சந்திக்க சென்றபோது மழை பெய்தது. முதல்-மந்திரியிடம் உங்களிடம் கொடுப்பதற்கு நீர் இயற்கை தந்திருக்கிறது என்று எடுத்து சொன்னேன். நல்லதொரு மனநிலையில் இருக்கிறார்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    என் குடும்பத்தார் (விவசாயிகள்) போட்ட சோறு என் உடம்பிலும் இருக்கிறது. அவர்கள் உடம்பில் இருப்பதை விடவும் கொஞ்சம் அதிகமாக என் உடம்பில் இருக்கிறது. அவர்கள் வேலை செய்து குறைவாக சாப்பிட்டுவிட்டு, எனக்கு அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நன்றி கடன் செய்வதற்காகத்தான் நான் கர்நாடகம் சென்றேன். நான் சென்றதற்கான காரணம் அது ஒன்றே போதுமானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத் தொடர்ந்து கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    ஆப்பு வைக்க இடம் இருக்காது

    கேள்வி:- ரஜினியும், கமலும் சேர்ந்து கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ என்ற அச்சம் எழுவதாக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளாரே?

    பதில்:- இதில் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. யாரும், யாருடனும் சேர்ந்து தமிழர்களை வஞ்சிக்கமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கர்நாடக விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து ஆப்பு வைப்பதற்கு இடம் இருக்காது.

    கேள்வி:- கமல்ஹாசன், கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்தது வேடிக்கையாக இருக்கிறது என்று சரத்குமார் கூறி இருக்கிறாரே?

    பதில்:- இதற்கு தீர்வு கிடைக்காது என்று நினைக்கிறார்களா? அப்போது காந்தி யார்? எந்த கட்சி? எந்த மாநில முதல்-மந்திரி? ஆனா எல்லா விஷயத்துக்கும் முந்திரிகொட்டை போல போகும் தலைவர் இருந்தாரே... அவரை யார் என்று கேட்டார்களா.. கேட்கமாட்டாங்க.. அதுபோல யார் வேண்டுமானாலும் போகலாம். அதுக்கு வயது கிடையாது.

    கேள்வி:- விவசாயிகளுக்கு தொடர்ந்து நீங்கள் குரல் கொடுப்பீர்களா?

    பதில்:- கண்டிப்பாக குரல் கொடுப்பேன். அதற்கான முதல் கட்டம் தான் இது. ஏற்கனவே நாங்கள் போட்ட கூட்டத்தின்படி தீர்ப்பை கண்காணிக்க ஒரு குழு அமைக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். அதன் அடிப்படையில் ஒரு புதிய நகர்வாகத்தான் இதனை நான் பார்க்கிறேன்.

    கேள்வி:- காலா படம் திரையிட கர்நாடகாவில் தடை இருக்கிறதே? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- விஸ்வரூபம்-2 படத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காலாவுக்கும் தடை என்று அறிவித்துவிட்டார்கள். காவிரி பிரச்சினையை எப்படி விவசாயிகள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டுமோ, அதுபோல பட பிரச்சினையை வியாபாரிகள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். இதில் தொழில் விரோதம் எதுவும் இல்லை. ரஜினிகாந்தின் படத்தை பார்க்க பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி நிருபர்களிடம் கூறும்போது, ‘அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் கமல்ஹாசன் தனது முதல் அடியை விவசாயிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவேண்டும் என்ற கடமையை நினைத்து செய்து இருக்கிறார். கர்நாடகத்துக்கு சென்று தண்ணீர் கேட்டார். அதை குற்றம், துரோகம் என்று சொல்கிறார்கள். துரோகம் செய்தவர்களே துரோகம் என்று சொல்கிறார்கள். விவசாயிகளுக்கு யார் நல்லது செய்தாலும், தலைக்கு மேல் இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறோம்’ என்றார்.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், ‘விவசாயிகள் நிலை நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது போன்றது. விவசாயிகள் தத்தளிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவுக்கு சென்று முதல்-மந்திரியை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. யார் எங்களை காப்பாற்ற வந்தாலும் அதனை வரவேற்கிறோம். விவசாயிகளை காப்பாற்றவேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். இதில் அரசியல் பேசுவது நியாயம் இல்லை. யாரிடமும் யார் வேண்டுமானாலும் பேசலாம். எங்கு வேண்டும் என்றாலும் செல்லலாம்’ என்றார். #KamalHassan
    Next Story
    ×