search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டதால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு- ராமதாஸ்
    X

    50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டதால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு- ராமதாஸ்

    ஒரே ஆண்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை கடந்த ஓராண்டில் மிகக்கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது. வரலாறு காணாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 50,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

    தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 201617ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2 லட்சத்து 67,310 ஆக இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 17,981 ஆக குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது ஒரே ஆண்டில் 49,329 சிறு, குறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் 5 லட்சத்து 19,075 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இது எளிதாக ஒதுக்கிவிட்டு செல்லும் அளவுக்கு சாதாரண பின்னடைவு அல்ல.

    சிறுதொழில்துறையின் வீழ்ச்சிக்கான காரணங்களில் பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டது ஒரு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதையும் தாண்டிய முக்கியக் காரணம் அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல் தான் என்பதே உண்மை. கடந்த ஓராண்டில் ரூ.11,000 கோடி முதலீடு சிறுதொழில் துறையிலிருந்து வெளியேறியிருக்கிறது.

    கடந்த 2009-10ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறதே தவிர, ஓராண்டு கூட குறைந்ததில்லை. அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல், ஆளுங்கட்சியினரின் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால்தான் சிறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறியுள்ளன.

    பெருந்தொழில் துறையில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்து வருவதால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய முடியாமல் அரசு தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது குறித்த உண்மையை தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

    சிறு தொழில் நிறுவனமாக இருந்தாலும், பெருந்தொழில் நிறுவனமாக இருந்தாலும் அதற்கு அனுமதி அளிப்பது முதல் ஒவ்வொரு நிலையிலும் சதவீதக் கணக்கில் ஆட்சியாளர்கள் கேட்கும் கையூட்டு தான் தமிழகத்தில் முதலீடு செய்ய வருபவர்களையும் விரட்டி அடிக்கிறது.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss
    Next Story
    ×