search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை விவசாய நிலத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு - முதல்வர் அறிவிப்பு

    சென்னை சேலம் இடையேயான பசுமைவழிச் சாலை தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இன்று பதிலளித்தார். #greenwayroad #CM #TNassembly
    சென்னை:

    சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

    காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்த திட்டத்துக்கு சுமார் 150 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இது பற்றி கேள்வி எழுப்பினார். மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இந்த பிரச்சினை பற்றி முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    இதற்கிடையே மானிய கோரிக்கை மீது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியசாமியும் எழுந்து இந்த திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.



    இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவு சாலை திட்டம் பற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    'கடந்த 25.2.2018 அன்று, மத்திய அரசின் “பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின்” கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலையாக, சென்னை அருகிலுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சிபுரத்தில் (59.1 கி.மீ.), திருவண்ணாமலையில் (123.9 கி.மீ.), கிருஷ்ணகிரியில் (2 கி.மீ.), தருமபுரியில் (56 கி.மீ.) மற்றும் சேலத்தில் (36.3 கி.மீ.) ஆகிய மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளதுடன், இவ்வழிப்பாதைக்கு சேலம் முதல் அரூர் வரை என்.எச். 179ஏ என்றும், அரூர் முதல் சென்னை வரை என்.எச். 179பி என்றும் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும்.

    தற்போது, இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதன் கொள்ளளவை விட 130 சதவிகிதம் மற்றும் 160 சதவிகிதம் அதிகமாக போக்குவரத்து செறிவு உள்ள காரணத்தினால், இச்சாலைகளில் விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன.

    இன்னும் 15 வருடங்களில், இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்தானது 1,50,000 அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்தினால், போக்குவரத்து செறிவு 60 ஆயிரம் பி.சி.யூ.விலிருந்து 1 லட்சம் பி.சி.யூ. வரை மட்டுமே அதிகப்படுத்தலாம்.

    ஆனால், இந்த புதிய எட்டு வழிச்சாலையின் போக்குவரத்து கொள்ளளவு 80,000 போக்குவரத்து செறிவு ( பி.சி.யூ.) ஆக இருந்தாலும், இச்சாலையானது விரைவு நெடுஞ்சாலையாக உள்ளதால், இதன் போக்குவரத்து கொள்ளளவு 1,50,000 போக்குவரத்து செறிவு ஆகும். எனவே, தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளின் 1 லட்சம் பி.சி.யூ.உடன் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் பி.சி.யூ. கொள்ளளவு பயன்பாட்டிற்கு வரும். இதனால், விபத்துக்கள் பெருமளவு குறையும். அதே நேரத்தில், பெருகிவரும் போக்குவரத்து செறிவையும் தாங்கி பயன் அளிக்கும்.

    இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், இத்திட்டத்தினால் காடுகளிலுள்ள மரங்கள் அழிக்கப்படும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கல்வராயன் மலை ஆகியவற்றிலிருந்து கனிம வளங்கள் சுரண்டப்படும் என்றும், விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறி, சில அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் மற்றும் சில இடதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்தச் சாலையின் நேர்பாடு, குறைவான வனப்பகுதியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு எடுக்கப்படும் வன நிலத்திற்கு ஈடாக, இரு மடங்கு அரசு புறம்போக்கு நிலம், மாவட்ட நிர்வாகத்தினரால் நில மாற்றம் செய்து, வனத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 2 மடங்காக காடு வளர்க்கப்படும்.

    இச்சாலையினால் சுமார் 10,000-க்கும் குறைவான மரங்கள் வெட்டப்பட உள்ளன. எனினும், இந்த விரைவுச் சாலையில் இரு மருங்கிலும் சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

    இப்பெருவழிச் சாலை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்களை அளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    2.5.2018 அன்று சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம் என்ற இடத்தில் நிலங்களை அளப்பதை சிலர் தடுத்ததினால், காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்த்தனர்.

    திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும், நிலங்களை அளப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 1.5.2018 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இச்சாலையைப்பற்றி தேவையற்ற சந்தேகங்களைப் போக்கவும், சரியான விவரங்களை பொதுமக்களுக்கு கொடுக்கவும் நான் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    தற்போதுள்ள சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதை விட, இந்த 8 வழி விரைவுச்சாலை திட்டத்தினால் பாதிப்புகள் மிகவும் குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியமாகும். எனவே, பொதுமக்களும், அமைப்புகளும் உண்மை நிலையினை அறிந்து, எதிர்ப்பினை கைவிட்டு, திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, கொடுத்த இழப்பீட்டை விட தற்போது அதிகமாகவே இழப்பீடு தொகை வழங்குகிறோம். உதாரணத்துக்கு 2007-08-ம் ஆண்டு சேலம் அயோத்தியா பட்டிணத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டது.

    தற்போது ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. காங்கிரீட் வீடுகளுக்கு சதுர அடிக்கு முன்பு ரூ.100 வழங்கப்பட்டது. தற்போது ரூ.340 என்று கணக்கிட்டு வழங்குகிறோம்.

    ஓட்டு வீடுகளுக்கு முன்பு சதுர அடிக்கு ரூ.60 வழங்கப்பட்டது. தற்போது ரூ.200 வழங்குகிறோம். ஒரு தென்னை மரத்துக்கு முன்பு இழப்பீடாக ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது தென்னை மரத்துக்கு ரூ.40 ஆயிரம் கொடுக்கிறோம். இந்த 8 வழிச்சாலை அமைப்பதால் விபத்துகள் வெகுவாக குறையும். பல மாவட்டங்களில், தொழிற்சாலைகள் வளர்ச்சி அடையும்.

    இந்த திட்டத்தால் அதிக நிலம், வீடுகளை எடுப்பதாக தகவல் பரப்புகிறார்கள். அது தவறு குறைந்த அளவு வீடுகளையே எடுக்கிறோம். நான் சேலத்தில் இருப்பதால் 8 வழிச் சாலை அமைக்கும் வி‌ஷயத்தில் என் மீது குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்கள். எனவே இந்த திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்'.

    இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    Next Story
    ×