search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே நாளில் 3 அடி உயர்வு - 121 அடி நீர் மட்டத்தை எட்டிய பெரியாறு அணை
    X

    ஒரே நாளில் 3 அடி உயர்வு - 121 அடி நீர் மட்டத்தை எட்டிய பெரியாறு அணை

    தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 121 அடியாக அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை முல்லைப் பெரியாறு அணை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கும், செப்டம்பர் முதல் வாரத்தில் 2-ம் போக நெல் சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க இயலவில்லை.

    இதனால் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் 2 போக நெல் சாகுபடிக்கும் நவம்பர் 1-ந் தேதி வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பரப்புகளின் 2-ம் போக செல் சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    நேற்று காலை 3438 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை 7506 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 118 அடியாக நீர் மட்டம் இருந்தது. ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 121.10 அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 1150 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 2846 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் 124 மி.மீ, தேக்கடியில் 43.2 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. மேலும் கூடலூரில் 11.6, சண்முகாநதி அணையில் 7, உத்தமபாளையத்தில 9.6 மி.மீ பதிவானது. பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 3 ஜெனரேட்டர்களை கொண்டு 123 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    Next Story
    ×